தீக் கதிர்கள்..

 


 

தீக்கதிர்கள்....

80 களில் நாங்கள் எல்லோரும் அஞ்சல் தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாக இருந்தபோது தணிகைச் செல்வன் கவிதைகளுடன் தீப் பறக்க நடக்கும் பல அரசியல் மாநாடுகளுக்கு சென்றதுண்டு. அதிலும் தணிகையின் இந்தக் கவிதை எங்கள் எல்லோருக்கும் அப்படிப் பிடிக்கும்.

தாக்குண்டால் புழுக்கள் கூடத் தரை விட்டுத் துள்ளும் // சிங்கம் மூர்க்கமாய்த் தாக்கும் போது முயல் கூட எதிர்த்து நிற்கும்// சாக்கடைக் கொசுக்களா நாம் .. சரித்திரச் சக்கரங்கள்..//

அப்போது மதுரையில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பாக வருமானவரி, கலால் துறை, அஞ்சல், தொலைபேசி,வானொலி , விமானநிலையம், வருங்கால வைப்பு நிதி , கேந்திரிய வித்தியாலய என எல்லா மத்திய அரசு ஊழியர்களும் ( ரயில்வே துறை நீங்கலாக ) ஒருங்கிணைந்து பல போராட்டங்கள் நடத்திய காலம். பஞ்சப்படி உயர்வுக்கு மட்டும் என்று இல்லாமல் விலைவாசி உயர்வை எதிர்த்து  நாடு தழுவிய பந்த், அரசின் தொழிலாளர் விரோத பொருளாதாரக் கொள்கைககளுக்கெதிரான பேரணி, மே தினப் பேரணி  என்று எல்லாப் பேரணிகளிலும் அரசியல் சார்பு நிலைப் பாடு கொண்ட பல தோழர்களுடன் சேர்ந்து எந்தக் கட்சியிலும் இல்லாத ஆனால் பொதுமைச் சித்தாந்தக் காதல் கொண்ட என் போன்றோர் உரத்த கோஷங்களுடன் மதுரைத் தெருக்களில் திரிந்ததுண்டு. எங்கள் அஞ்சல் தொழிற்சங்கத்தில் நான் தென் மண்டல செயலர் ஆக இருந்த வருடம் அது. வைரன், சுந்தரமூர்த்தி, சுந்தர்,புகழேந்தி, போன்ற உற்சாகமான தோழர்களுடன் அம்மையப்பன், கருப்பையா,முத்துசாமி  போன்ற மூத்த தோழர்கள் உடன் இணைந்து எனது களப் பயிற்சிக் காலம் அது. அப்போது எங்கள் ஊர்வலங்களில் பட்டுக்கோட்டையின் இந்த வரிகள் இசைத்துச் செல்வோம்.

காலி என்றும் கூலி என்றும் கேலி செய்த கூட்டமே.//. காற்று மாறி அடிக்குது நீ எடுக்க வேணும் ஓட்டமே.//.பட்டினிக்கும் அஞ்சிடோம்.. பஞ்சம் நோய்க்கும் அஞ்சிடோம்//. நெஞ்சினைப் பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம்.//.

இந்த நினைவுகளை எல்லாம் கிளறி விட்டது தோழர் கருப்பையா பெருமாள் அவர்களின் சமீபத்திய பதிவு. எங்கள் மண்டலச்  செயலர் ஆக அவர் இருந்த போது சென்ற திருவனந்தபுரம் மாநாட்டில் உணர்ச்சிகரமாகப் பாடப்பட்ட  தோழர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் அவர்களின் பிரபலமான குறத்தி பாடல் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்.

திரு ஜெயமோகன் இவரைப் பற்றிப் பின்வருமாறு எழுதியுள்ளார்:‘

“ இளமைக்காலம் முதல் கடைசி வரைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கட்சியின் உறுப்பினராகவும் செயலாளியாகவும் கடம்மனிட்டா இருந்தார். இளமையில் மாணவர்சங்கத்தில் பொறுப்பிலிருந்தார். தொழிற்சங்கப்பணி ஆற்றியிருக்கிறார். 1992ல் கேரள புரோகமன சாகித்ய சங்கம் [ முற்போக்கு எழுத்தாளர் சங்கம்] துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார். 2002 ல் அதன் தலைவராக ஆனார். 1996ல் ஆறன்முள தொகுதியிலிருந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி வேட்பாளராக சட்டசபைக்கு தேர்வுசெய்யபdடார். 1982ல் அவருக்கு கேரள சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 1960களில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் சென்னையில் அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிய போது மார்க்ஸியர்களுக்கு எதிரான சக்தியாக விளங்கியவரும் எம்.என்.ராயின் மாணவருமான எம்.கோவிந்தனின் தொடர்பு கிடைத்தது. அது அவரை நவீன இலக்கியத்தின்பக்கம் கொண்டுவந்து சேர்த்தது. முரண்பாடுகளுடன் அவர் கோவிந்தனின் நெருக்கமான மாணவராகவும் இருந்தார். கேரளத்தில் புதுக்கவிதையை கொண்டுவந்த முன்னோடிகளில் ஒருவர் கடம்மனிட்டா. கடம்மனிட்டாவின் நல்ல கவிதைகள் அப்போதே தமிழில் வெளிவந்தன. வானம்பாடி இதழ் அவரது கவிதைகளுக்காக ஒரு சிறப்புமலர் வெளியிட்டது. அவரது குறத்தி போன்ற கவிதைகளை சிற்பி மொழியாக்கம் செய்திருந்தார். கண்ணூர் கோட்டை முதலிய கவிதைகளை சுகுமாரன் மொழியாக்கம் செய்திருக்கிறார். திரு ஜெயமோகனின்  தற்கால மலையாளக் கவிதைகள்நூலில் அவரது முக்கியமான கவிதைகள் உள்ளன.

காட்டாளன்
=========

வேங்கைப்புலி காத்துகிடக்கும்
ஈரக்கண்கள் திறந்தும்,
கருநாகம் நுனியில் நெளியும்
புருவம் பாதி வளைத்தும்,
கருகியதோர் காட்டின் நடுவே
நிற்பான் காட்டாளன்!
நெஞ்சில் ஒரு பந்தம் நட்டு
நிற்பான் காட்டாளன்!

ஆகாயத்தில் அப்பன் செத்து
கிடப்பதுகண்டு நடுங்கி,
மலையோரத்தில் அம்மை இருந்து
தகிப்பது கண்டு கலங்கி,
முலைபாதி அறுத்தவள் ஆற்றின்
கரையில் கனலாய் அழைக்க,
கனலின்குரல் வீசுளிபோலே
நெஞ்சில்பாய்ந்து துளைக்க,
கணையேற்ற கரும்புலி போல
பிளந்துசரியும் பெருமலைபோல
உலகெல்லாம் நடுங்கும்வண்ணம்
அலறினான் காட்டாளன்!
ஒருகணம் விம்மியழுதிடும்
சாதகப்பறவையைபோல
மனைநீர் கேட்டு வானம் நோக்கி
நின்றான் காட்டாளன்!
வானுக்கோ மௌனம் வெறிக்
காதலுக்கு தகாம் பெருக
மாந்தோப்புகள் உருகும் மண்ணில்
அமர்ந்தான் காட்டாளன்!

கருமேகம் செத்துகிடக்கும்
கடும்விஷக் கடலோ வானம்?
கருமரணம் காவலிருக்கும்
சுடுநோவின் கோட்டையிலாநான்?
எங்கென்றன் கனவுகள் பாவிய
இடிமின்னல் பூக்கும் வானம்?
எங்கென்றன் துளசிக்காடுகள்?
ஈரக்கூந்தல் ஆற்றிய அந்திகள்?
பச்சைப்புழு துள்ளி நடக்கும்
இஞ்சிப்புல் வெளிகள் இன்று எங்கே?
அருகம்புல் நுனியில் அம்புலி
படமெழுதிப் பாடிய இரவுகள்?
காட்டின் கைவளைகள் ஒலிக்க,
காட்டாற்றின் சதங்கைகள் கொஞ்ச,
காடத்திகள் சோலைமரத்தின்
நிழலில் குதித்தாட;
கருவீட்டி அழகுடல் நெளிய,
கண்ணிமைக் காடுகள் விரிய,
பூங்கூந்தல் கட்டுகள் அவிழ,
உடலசைய, மெல்லிடைய¨சைய,
முலையசைய, கார்முடிசிதற,
காடத்திகள் சோலைமரத்தின்
நிழலில் குதித்தாட;
மூங்கிற்குழல் தளும்பும் மதுவை
ஒரேமுச்சில் உண்டு அப்போதையில்
மரத்தடியில் தாளம் தட்டித்
தலையாட்டிய நான் இன்று எங்கே?

எங்கு மறைந்த என்றன் மகவுகள்?
தேன்கூடு தேடிப்போன
ஆண்குழந்தைகள், என் மைந்தர்கள்?
பூக்கூடை நிறைக்கப்போன
என் கண்கள், பெண் குழந்தைகள்?
தாய்ப்பால் உதட்டில் மணக்கும்
ஆம்பல்பூ மொட்டுகள் எங்கே?
குருத்தெலும்புகள் கருகும் நெடியோ
அறைகிறதென் நாசிகளில்?
வேங்கைப்புலி உறுமும் கண்ணில்
ஊறி வரும் ஒரு தீச்சொட்டு!

காட்டாளன் தன் நெஞ்சுள் உடைந்த
முதுகெலும்பு நிமிர்த்து எழுந்தான்!
தரையுதைத்து எழுந்த விசையில்
தூசுத்திரைகள் பொங்கியெழுந்தன.
வேட்டைக்காரர் கைகளையெல்லாம்
வெட்டுவேன் இக்கல்மழுவேந்தி!
¨ந்தீண்டி அசுத்தம் செய்தவர்
தலையறுந்து மிதப்பார் ஆற்றில்!
மரம் வெட்டி அழித்தவர், எந்தன்
குலம் முழுதுமழித்தவர், அவர்கள்
குடல்மாலைகளால் இந்நிலத்தில்
தோரணங்கள் சமைப்பேன்!
குடலுருவியெடுப்பேன், நான் என்
குழலூதி விளிப்பேன்ம் மீண்டும்
மதம் கொண்ட பாகதர் குழுக்கள்
வரும் என் வில் நாணேற!
வில்லுக்கு என் ஜீவ நரம்புகள்
முறுக்கிக்கட்டி ஒரு நாணேற்றிடுவேன்!
இடிமின்னல் ஒடித்து அம்பு! அக்கினி
அலையலையாய் கருமுகிலில் சென்று
உரசும்! பொறி பேய்மழையெனப்
பொழியும்! சிறு வேர்கள் போலப்
படரும்! முளைவிட்டுத் தழைக்கும்

கதிர்கள்!!!

ஒரு சூரியன் உதிக்கும்!
நிழல்போல் அம்புலி வளரும்!
கானகப்பொலிவுகள் எங்கும் விரியும்!
வனவேகத்தில் என் துயரம் தெளியும்!
நான் அன்று சிரிப்பேன்!

கருகித்தோர் காட்டின் நடுவில்
நிற்பான் காட்டாளன்!
நெஞ்சில் ஒரு பந்தம் நட்டு
நிற்பான் காட்டாளன்!

குறிப்பு:

மூலப்பெயர் கிராத விருத்தம். காட்டாளன் என்ற பழைய சொல் காட்டை ஆள்பவன் என்றும் காட்டுமனிதன் என்றும் பொருள் தருகிறது

நன்றி: திரு ஜெயமோகன் அவர்களின் தகவல்களுக்கும் மொழிபெயர்ப்புக் கவிதைக்கும். 

Comments