கண்டதைத் தொலைப்போமோ?


அவனுக்கு  காணி நிலத்துக் கவிதை மீது அத்தனை காதல். 


காவல் துறைப் பணியில் இருந்தபோது டில்லியில் நடந்த  கூட்டுச் சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் , மத்திய அமைச்சரின் அந்தரங்கப் பாதுகாவலர்களில் ஒருவனாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்  பின்பு தனது கூர்த்த மதியால் தனது எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டே போகிறான். 

 அவனால் எழுதாமல் பேசாமல் இருக்க முடியாது. காட்டாற்று வெள்ளம் போல பிரவகித்துத் தள்ளி விடுவான். அதுவும் ஆங்கிலப் புலமை அவனது தனிஅழகு.பல நேரங்களின் தார்மீக கோபங்களின் வெளிப்பாடு ஆங்கில நடையில் அலை போல ஆரப்பரிக்கும். ஆங்கிலம் அவனின் தனிப் பலம். எந்த ஒரு விடயத்தையும் விலாவாரியாகப் பேசவும் எழுதவும் தெரிந்த வித்தகன்.

முற்றிலும் முரண்பட்ட காவல் துறையில்  சேர்ந்து பணியாற்றினாலும் அதிகாரம் என்பதை எளிய மக்களுக்கான உதவி செய்வதற்கு வாய்ப்பாக கருதிய அவன், முரண்பாடுகளின் முற்றல்களில் பதவியை தூக்கி எறிவதற்காக சட்டம் பயின்றான். காவல் துறை  தளமாக இருக்க ,  இருபது ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் பல உயர் பதவிகள் வகிக்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. .காவல் திறையில் உதவி கண்காணிப்பாளர் பதவி.மற்ற துறைகளில் காவல் துறை தலைவர் பதவிக்கு நிகரான பல பதவி பொறுப்புகளை வகித்தாலும் அதிகாரம் என்பதை விலக்கி வைத்தே இருந்தான்.

மத்திய அமைச்சரின் கூடுதல் தனிச் செயலராக நகர்புற வளரச்சி,  தொழில் துறை அமைச்சகம்,தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மற்றும், அயல்நாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சகத்தின் குடிபெயர்வோர் பாதுகாவலர், நிதி அமைச்சகத்தின்  வங்கிகளின் வாராக்கடன் மீட்பு அதிகாரி , பாரதிய ஸ்டேட் வங்கியில் பொது மேலாளர் அந்தஸ்தில் மோசடிதடுப்பு மற்றும்  கண்காணிப்பு அதிகாரி என்று பல பதவிகள் வகித்தாலும் தன்னை ஒரு எளிய மார்க்சியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவன். விவசாயம் செய்வதிலும், மாடு கன்றுகளை பராமரிப்பதிலும் அலாதி ஆர்வம் கொண்டவன்.

தனது காணி நிலத்துக்  கனவை மேம்படுத்தி சிறுமலை அடிவாரத்தில் ஒரு தோட்டம் வாங்கினான்.  எளிய ஜனங்களால் பெரிதும் நேசிக்கபடும் அவனது தோட்டம் ஒரு இயற்கை எழில் நிறைந்த இடம்.ஆடு மேய்ப்பவர்கள் முதல் உயர் பதவிகள் வகிக்கும் அனைவரிடமும்  மாறாத அன்பு கொண்ட மனித நேய காவலன்

சிறுமலை அடிவாரத்தில் உள்ள தனது  தோட்டத்து  வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவான்.

 அவனது மிக நீளமான whatsapp பதிவுகளை  கொஞ்ச நாளாகக் காணவில்லை. எந்த ஒரு நிகழ்விற்கும் உடனே கருத்து சொல்லும் பாலு என்று நாங்கள் அழைக்கும் பாலசுப்ரமணியன் அவனது தாய்த் துறையான காவல் துறையின் சமிபத்திய அவலங்கள் பற்றி என்ன சொல்லப் போகிறான் என்று ஒரு மாதம் முன்பு  அழைத்தேன்.

தோட்டத்தில் தான் இருக்கேன் இளங்கோ. நெட் பிராப்ளம். ஊர் பூரா கொரானா. மதுரைக்குள்ள போகல.பத்து நாளா இங்கதான் வாசம். தகவல் பூரா வந்துட்டுதான் இருக்கு. ஒன்னு புரிஞ்சுக்க. அதிகாரம் கண்ணை மறைச்சா இப்படித்தான் போற வாறவனப் பூராம் தூக்கிப் போட்டு மிதிக்க சொல்லும். பவர் .. அதிலும் அப்சல்யுட் பவர் அப்ஸல்யூட் ஆக கரப்ட் பண்ணத்தான செய்யும். மனிதம் இல்லாத எந்த மனிதனும் , school of thought சரி இல்லாத எந்த வார்ப்பும் பதவி தரும் போதையில் இப்படித்தான் சமூகம் வெறுக்கும் அவ நிலைக்கு ஆளாக நேரிடும். நமக்கெல்லாம் ஒரு school of thought இருக்கு. அது நாம எப்ப மயங்கினாலும் தலையில் குட்டி சரியாக்கி விடும். நான் தப்பித்தது அப்படித்தானே. எனது எல்லாப் பதவிகளிலும் நான் அனுபவங்களை மட்டும்தான் மாய்ந்து மாய்ந்து சேகரித்து கொண்டேன் அல்லாது  பதவி போதையில் எப்பவும் எங்கயும் ஆடியதே இல்லை. டிபார்ட்மெண்ட்டால் பாதிக்கப்பட்டவர்களையும்,  டிபார்ட்மெண்ட்டில் பாதிக்கப்படப் போபவர்களையும் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது

In his language every position is made for certain purpose .The ultimate purpose is to serve the people.The dignity of every individual is to be respected immaterial of his socio economic status.In certain situation we should be firm depending its issues involved but we should be courteous in our handling.Unfortunately before the eyes of police many poor and helpless people who committed petty offences are also being viewed as hardcore criminals.Police as profession has its noble practices but in reality the department is under the clutches of colonial authoritarianism which has deeply penetrated into the system..Unless this organisation is not liberated from this mind to demarcate their functional boundaries more such episodes may have its repetitions in future too.It is an attitudal syndrome.The orientation should be changed.

Every one should assert their position but should not have attachment to any position.

பாலுவிற்கு அவனது அரசியல் பள்ளி இன்னும் மனதில்  ஈரம் காயாமல்  பார்த்துக் கொள்வதை வியந்தேன்.

---------------------------------

அதே போதில் நாங்கள் படித்த இலக்கியம்,  நண்பன்  ஒருவனை எப்படி தின அவலத்தில் சாகாமல் காப்பாற்றி வந்தது என்பதும் நினைவிற்கு வந்தது.

ஒரு பத்து வருடம் இருக்கும். எனது அலுவலக  நண்பருக்கு ஒரு சட்ட சிக்கல். நண்பர் ஒரு முரட்டு தோற்றமுள்ள மென்மையான ஆள். நாடறிந்த  எழுத்தாளர்.அவரது வக்கீல் முரடான ஆள். சட்டத்தின் சட்டங்கள் தாண்டி சட்டத் தீர்வுகள் தேடித் தருபவர். அவராலும் தீர்வு காண முடியாத ஒரு பிரச்னை வந்து விட்டது. அவரது சீனியர் மதுரையில் மிகப் பிரபலமான கிரிமினல் லாயர் என்றும் லாயர் ஆகப் பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்றால் கிரிமினல் ஆகத் தீர்த்து விடுவார் என்று கூறி நண்பரை அவரிடம் அழைத்து சென்றார். நான் உடன் போய் இருந்தேன். சீனியர் லாயர் பெயர் மனோகரன் என்று போட்டிருந்தது, தவிட்டு சந்தையில் ஆபிஸ்,  நிறைய கூட்டம். பயம் கலந்த மரியாதையுடன் எல்லோரும் இறுக்கமாக அமர்ந்திருந்தார்கள். நாங்கள் உள் சென்று ஒரு ஓரமாக அமர்ந்தோம். சீனியர் அறையில் அவரால் பார்க்க முடியவும் பிறரால் பார்க்க முடியாத வகையிலும்  கண்ணாடி கதவு அடைக்கப்பட்டிருந்தது, சில மணித் துளிகள்தான் ஆகியிருக்கும். சடாரென தனது அறைக் கதவைத் திறந்து கொண்டு சீனியர் வெளிப்பட எல்லோரும் பட பட வென பதட்டத்துடன் எழுந்து நின்றனர். நேராக எங்களை நோக்கி வந்த சீனியர் என்னைப் பார்த்து என்ன இளங்கோ , இங்க என்றார்.

மனோகர்.. மதுரைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம்  பயின்ற கராத்தே மனோகர்.

வியந்த என்னை வெளியில் அழைத்து வந்த மனோகர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி” RK சமீபத்தில் பாத்தியா, மெலிஞ்சுட்டர்யா.. “ R krishnamoorthy என்ற RK எங்களின் அழகான , மிகுந்த நட்புடன் பழகும் ஆங்கில விரிவுரையாளர். இளங்கோ, லா படிச்சுட்டு இங்க பெரிய பெரிய கிரிமினல் வேலை எல்லாம் அசாலட்டா பண்ணிட்டு இருக்கேன். எவ்வளவு பெரிய பஞ்சாயத்து என்றாலும் கவலையே இல்ல.  ஆனா நாம ரொம்ப ரசிச்ச இலக்கியம் பகிர்ந்து கொள்ள ஆளே இல்லைய்யா. ஒரே ரத்தம், வஞ்சகம், தந்திரம். அடிதடி.  ஆனாலும் தினம் தூங்கப் போறப்ப was this the face that launched a thousand ships அப்படினு டாக்டர் Faustus ஹெலனை கேப்பதும் come helen, come give me a kiss, see where my soul flies என்று சொல்லும் போது நம்ம RK sir தர்ற அற்புதமான expressionம், நினவில் வரும். KRN உச்சரிப்பில் கம்பீரமாய் விழும் ஆங்கிலம் சுத்தி வரும். SLN அடிக்கும் வசிகர ஜோக்  அவரது unique style இதெல்லாம்தான் , இது மாதிரி அப்பப்ப பண்ணிக்கிற இலக்கிய விசாரம்தான்  இந்த என்னோட profession என்னை முழுசா முழுங்கிடாம, மாத்திடாம என்னை  அப்பப்ப  சிரிக்க வைக்குது.

 மனோகருக்கு என் நண்பரின் இலக்கிய முகம் ஆகர்ஷிக்க நாங்கள் சென்ற வேலை சட்டென்று முடிந்தது ஒரு புறமிருக்க, நான் வரும் வழிஎல்லாம்  வியந்து வந்தது இலக்கியக் காதலை பிழைப்பிற்கான எதுவும் corrupt செய்து விட முடியாது என்பதைத்தான்.

-----------------------------------------------

நிற்க-

அந்த பாலுவைச்  சந்திக்க நேற்று அவனது தோட்டத்திற்குச் சென்றிருந்தேன்.  வெகு காலம் முன்பு சென்றது. இடையில் ஏகப்பட்ட மாற்றங்கள். எதிர்த்தார் போல் இருந்த சவுபா தோட்டம் தாண்டும் போது கண்ணீர் கண்ணை மறைத்தது. சவுபாவிற்கு அந்த தோட்டம் வாங்கி முடித்து விட்டது பாலுதான்.

பாலுவின் தோட்டத்திற்குள் சிறுமலை நுழைந்து விட்டது. எங்கும் பச்சை. அடர் பச்சை. மழை நீர் சேகரிக்க அவன் வெட்டிய குளம், சிற்றணைகள் எல்லாப் பக்கமும் மிக அடர்த்தியாக செடி கொடிகள் வளர்ந்து விட்டது. அவனது தோட்டத்தில் கிடைக்கும் பாறைகள் கொண்டே ஒரு அருமையான பங்களா நடுவில் கட்டி இருந்தான். வேலையாள்கள் தங்க குவார்டர்ஸ். மேலே ஆடுகள் கீழே கோழிகள் என்ற கூண்டமைப்பு. நுழை வாயிலில் இரண்டு புறமும் ஆஜானுபாகுவாக வளர்ந்திருக்கும் ராயல் பனை.. உள்ளே எல்லா வித பழ மரங்கள். வாடிப்பட்டி தாண்டி நிலகோட்டை சிப்கோ வளாகத்தில் உள் நுழைந்து ரிசர்வ் பாரஸ்ட் நோக்கி சிறுமலை அடிவாரம் சென்றால் அங்கே வரிசையாக அடுத்தடுத்து மூன்று தோட்டம். பாலுவின் தோட்டம் எல்லோராலும் டி.எஸ்.பி. தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. பக்கத்தில் ஐ.ஜி. தோட்டம். அருகில் சவுபா தோட்டம்.


பாலு மெலிந்திருந்தான். அவனது  தோட்டத்தில் புதிதாக ஒரு அலுவலகம் திறந்திருந்தான். தோட்டத்தை முழுமையாகவே விற்கப் போகிறானாம். அது அவனது முடிவே இல்லை. சூழல் நெருக்கடி என்றான்.

மதியம் அவன் வைத்திருந்த அருமையான பூண்டு புளிக்குழம்பு சாப்பிட்டவுடன் அவனது ஜீப்பை எடுத்து வந்து உள்ளே அமரச் சொன்னான். 



அந்த அடர் வனம் முழுவதும் சுற்றி சுற்றி காண்பிக்கிறான். புதிதாய் வந்த ஓடைகள்.. அரிய வகை மூலிகைப் பகுதி. செக் டேம் அருகில் ஒரு செண்பகத்தோட்டம்.. பட்டாம் பூச்சிகள், தேனீக்கள் உள் வதியப் பண்ணிய ஏற்பாடு , பார்த்து பார்த்து வாய்த்த மரங்கள்.  காணி காணி யாக அந்த நிலங்கள் இனி என் கை நழுவி  விரைவில் நான் என் வனம் இழப்பேன் என்றவன்  கியரை கிழிறக்கி ஜீப்பின் வேகத்தை சடுதியில் கூட்டினான்.

அது - சற்றே உயரமான பகுதியில் ஏறுவதற்காக மட்டுமே அவன்  அப்படி செய்யவில்லை என்று புரிந்தது.

 

Comments

Popular Posts