இராஜாக்களின் பாளையத்தில் ...
பல வருடங்களுக்கு முன்பு ராஜபாளையத்தில் மறைந்த திரு குமாரசாமி ராஜா அவர்களுக்கு நினைவு தபால் தலை வெளியிட்டது அஞ்சல் துறை. வெளியிடும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மறைந்த திருமிகு ராம்ஜெத் மலானி எம்.பி., திருமிகு வை.கோபால்சாமி எம்.பி. மறைந்த திரு தா.கு.கிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் பலர்.அன்றைய எங்கள் அஞ்சல் தலைவர் திருமதி நூர்ஜஹான் என்னை அழைத்து மரியாதைக்குரிய அய்யா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு நினைவு தபால் தலை வெளியீட்டு விழா மதுரையில் நடந்தபோது அதிகப் படியான கூட்டம் கட்டுப் படுத்த முடியாமல் போய் தபால் தலை வெளியிடும் துறை அதிகாரிகளே மேடையில் இருந்து தள்ளப்பட்டனர் என்றும் இது போல் இங்கும் நடந்து விடக் கூடாது. நிறைய கட்சிக்காரர்கள் மற்றும் ராஜாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்திருப்பார்கள். நாம் தபால் தலை வெளியிடும் வரை எந்த சிரமமும் துறை அதிகாரிகளுக்கு வராத படி நிகழ்வு நடத்த வேண்டும். உன்னால் முடியுமா என்றார். அப்போது எங்கள் துறை நிகழ்வுகளில் எல்லாம் நான்தான் master of the ceremony. மைக் மோகன் போல் திரிந்த காலம் அது. சரி மேடம் என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சி ஆரம்பிக்க இரண்டு மணி நேரம் முன்பே மேடைப் பக்கம் சென்று விட்டேன். ராம்கோ சேர்மன் மேடத்துடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். வரிசையாக ராஜாக்கள் உள்ளே வர ஆரம்பிக்கிறார்கள். அந்த சபை முழுவதும் சிறிது நேரத்தில் ஆகிருதியான உயரமான ராஜாக்களால் நிரம்பி விட்டது. அத்தனை பெரும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்கள். யாரும் யாரிடமும் பேசவில்லை. அமைதி. வெளியில் கட்சிக்காரர்கள் . அய்யா வை.கோவின் பெரும் ரசிகர்கள். my mission was to prevent crowd from entering the stage till the commemorative stamp was released and our officers got down from the dais. ராமசாமி ராஜா அவர்கள் தனது இளம் பிராயத்தில் ராஜபாளையத்தில் நடத்திய விளையாட்டு போட்டிகள், கலந்து கொண்ட விளையாட்டுக்கள் பற்றி கூக்கிள் மூலம் கொஞ்சம் படித்திருந்தேன். my target was to raise the nostalgic level of all rajas assembled there while reminiscing about kumarasamy raja. i thought that i did that to a certain extent. எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கு வந்தனமு என்று முதலில் அனைத்து ராஜாக்களுக்கும் முகமன் சொல்லி இறுக்கம் தணித்தேன். பின் வை.கோ. அவர்களின் பாராளுமன்ற கர்ஜனைகள் பற்றியும் ராம்ஜெத் மலானி அவர்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பு மற்றும் ராம் ஜெத் மலானி அவர்கள் அன்றைய பிரதமருக்கு தினமும் அனுப்பித் துளைத்த கேள்விக் கணைகள் மற்றும் திரு கிருஷ்ணன் அவர்களின் விசுவாசமிக்க மேலான இயக்கப் பணிகள் என்று இடை இடையில் பேசிப் பேசி கூட்டத்தில் இருந்தவர்களுடன் ஒரு மானசீக connect உருவாக்கிக்கொண்டேன். தலைவர்கள் வர ஆரம்பித்த சமயம் கட்சி பிரமுகர்கள் மேடைப் பக்கம் வந்ததுமே " அண்ணே, பத்தே நிமிடம். துண்டு மாலை சால்வைகள் போர்த்த தனியா ஒரு ஸ்லாட் . இப்ப முதலில் பெரியவர்கள் ராஜாவுக்கு மரியாதை செய்து தபால் தலை வெளியிடட்டும். அப்புறம் நம்ம தலைவர்களுக்கு மரியாதையை நாம் செய்து கொள்ளலாம்." என்றதும் என்னை அவர்கள் கட்சிக்காரன் என்று ஏற்றுக் கொண்டு சரி என்று ஓரமாக நின்று கொண்டார்கள். நாங்கள் தபால் தலை வெளியிட்டு எங்கள் துறை அதிகாரிகள் எல்லாம் பத்திரமாக கீழே வந்தபின் , இடியும் புயலுமாக சிறப்பு பேச்சாளர்கள் கலக்க, மாலை மரியாதைகள் அது பாட்டுக்கு நடக்க நாங்கள் எங்கள் பணி முடித்து விட்டு வெற்றிகரமாக திரும்பினோம். எவருக்கும் எந்த நெருக்குதலும் நிகழவில்லை.மேடத்திற்கு கொடுத்த நினைவு ஷீல்டினை மேடம் எனக்கு கொடுத்து பாராட்ட, அதனை வெகு காலம் எங்கள் அஞ்சல் முரசு அலுவலகத்தில் வைத்திருந்தோம்.
இரண்டாம் முறை இராஜபாளையத்திற்கு என் இனிய நண்பர்கள் . பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் வேல இராமமூர்த்தி உடன் சென்றதும் அங்கு திரு என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா அவர்கள் தோட்டத்தில் இருந்த அரங்கில் அவர்கள் இருவருடன் சேர்ந்து மேடையில் பேசி , பேச்சில் விசுவல் நிகழ்த்தும் வித்தகன் பி.கே. எழுத்தில் விசுவல் நிகழ்த்தும் வல்லாளன் வேலா என்றதும் அதன் பின் நாங்கள் மூவரும் விடிய விடிய பேசிக் கொண்டிருந்ததும் மறக்க முடியாத ஒன்று.
மூன்றாம் முறை சென்ற மார்ச் இறுதியில் இராஜபாளையம் செல்லும் வாய்ப்பு. பி.கே.யின் புத்தக வெளியீடு. அருமையான ஒரு நிகழ்வு. வந்திருந்த அத்தனை பெரும் கம்பனின் காதலர்கள். இலக்கிய ரசனை மிக்க சான்றோர் சபையது. முஷைரா குழுவினர் சுற்றி அமர சிறந்த கவிதை வரிகள் தெறிக்கும் போதெல்லாம் ஆர்ப்பரிக்கும் வாரே வா. வா. வா. போல பி.கே. சுற்றி சுற்றிப் பேசப் பேச ஒரே வாரே வாக்கள். அவர் வெளியிட்ட புத்தகம் பற்றி கீழே தந்துள்ளேன். அந்த பவுர்ணமி இரவில் அஹான் ஆனந்தாவின் அன்பு உபசரிப்பில் பி.கே. நடத்திய சத் சங்கம் அதை விட அருமை. ராஜபாளையம் ஒரு வசீகர நகரம்.
பாரதி கிருஷ்ணகுமாரின் “ கவிச்சக்கரவர்த்தியின் பணிவு”- ஒரு அறிமுகம்..
ஒரு
குறிப்பிட்ட காலகட்டத்தில் , மகாகவி பாரதிக்கு விளைந்த கவிதை மவுனம்
குறித்து , “ அருந்தவப்பன்றி சுப்ரமணிய பாரதி “ என்னும்
ஒரு ஆய்வு நூலினை எழுதிய பாரதி கிருஷ்ணகுமார்
தனது அடுத்த ஆய்வு நூலாக “ கவிச்சக்கரவர்த்தியின்
பணிவு” என்ற நூலைத் தந்துள்ளார். கம்பனின் காலகட்டத்திலும் , அடுத்த கால கட்டங்களிலும் கம்பனது கவிக் கீர்த்தி குறித்து , கற்றவர் உலகு சாதித்த கள்ளமௌனம் குறித்து இதில் உரக்கப்
பேசியுள்ளார். உள்ளடக்கத்தில், பத்தி
பத்தியாகப் பிரித்து அழகிய, எளிய நடையில்,
தனது கருத்துக்களை நூலாசிரியர் ஒன்றன்
பின் ஒன்றாகத் தொகுத்துள்ளார். இந்தப் பாங்கு,
நீதி அரசர்கள் தங்கள் தீர்ப்பினை வழங்கும் வடிவினை ஒத்துள்ளது. ஒரே மூச்சில் ரசித்துப் படித்து விடும் நடை.. மீண்டும் மீண்டும் படிக்க
வைக்கும் ஆழமான கருத்துக்கள். கம்ப சமுத்திரத்தில் ஆறே ஆறு பாடல்களை மட்டுமே
எடுத்துக் கொண்டு இந்த ஆய்வு நூல் பேசுகிறது. . “ காசு இல் கொற்றத்து”
கம்ப கீர்த்தியை “ஆசை பற்றி அறையலுற்றது”
இந்த முயற்சி என்றால் , அது உண்மை. வெறும் புகழ்ச்சியல்ல. முதல் மூன்று அத்தியாயங்கள்
முக்கியமானவை. “பந்தி வாசலிலேயே பரிமாறப்படுவதில்லை “ எனும் கூற்றுக்கேற்ப , அடுத்து வரும் அத்தியாயங்களில் பரிமாறப்பட உள்ள ஆய்வு
விருந்துக்கு முன்பாக , இந்த
அத்தியாயங்களில் starters மட்டுமே ஒரு Buffet வடிவில் குவிக்கப்பட்டுள்ளது.
முதல் அத்தியாயம்: ராமனின் அயணம், அதாவது ராமனின் பயணம் குறித்த ராமாயணம், செவி வழிக் கதைகளாகவும், நம்பிக்கைகளாகவும், புனைவுகளாகவும்
வான்மீகி எனும் தபஸ்வியின் வாயிலாக இலக்கிய வடிவம் பெறும் முன்பே, தொன்ம வடிவில் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்
பரவி இருந்தது என்பது மானுடவியலாளர்கள்
கருத்து. வழக்கில் இருந்த மரபான கதைகளை, முன்னவர்கள் காப்பியங்களாக எழுத, ஒரு காப்பியத்தையே முதல் நூலாகக் கொண்டு வேறு ஒரு காப்பியம் படைத்தது கம்பனின் சிறப்பு. வால்மீகியைக் கம்பன் விரித்தும், தொகுத்தும், சேர்த்தும், மாற்றியும்
ஒரு காட்டாற்றை பாசனத்திற்கான நீர்ப் பெருக்காய் மடைமாற்றிய பாங்கு, ஒரு பூப்
பொதியினை வண்ண மலர்ச் சரமாய் தொடுத்த பாங்கு ஆகியன இதில்
சொல்லப் பட்டுள்ளது.
இரண்டாம்
அத்தியாயம்: இந்த அத்தியாயம்
நெடுகவும் கம்பன் புகழ் பாடிய சான்றோர் வரிகள் திகட்டத் திகட்டத் தரப்பட்டுள்ளது. “கனவும் நனவும் பொதுளிய தமிழ்ச்
சுரங்கம்” என்று கம்பனை வியக்கும் திரு
வி.க., “ கம்பன் ஒரு கவிதைக்கொல்லன்” என
சிலாகிக்கும் பேரா. சீனிவாச ராகவன்” , காலமெனும் ஆழியிலும் காற்று மழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு- அது தலை முறைக்கு எழுதிவைத்த சீட்டு” என்று பிரகடனம் செய்யும் கவியரசர் கண்ணதாசன், “வடமொழிச் சிறப்பால் அங்கே வால்மீகி பகவான் என
அழைக்கப்படுவது போல் தமிழ்ச் சுவை சேர்த்த கம்பனை கம்ப நாட்டாழ்வார் “ என்று
போற்றிப் பணியும் அருணாசலக்கவிராயர், ‘“கம்பனின் பாத்திரங்கள் அரக்கரானாலும்,
வானரர் ஆனாலும், பறவை ஆனாலும் , மனித உள்ளமே அங்கிருந்து ஆட்சி செலுத்துகிறது”
என்று புகழும் பேரா.பாண்டுரெங்கன், “மில்டனுக்கே
கம்பன் முதுகு மண் காட்டி விடுகிறான்” என்று ஆர்ப்பரிக்கும் தொ.மு.பாஸ்கரத்
தொண்டைமான், “கம்பனிடம் இருக்கும் சொல்
அறாத் தூணி மாக்கடல் போல் வற்றாதது “ என்னும் நாஞ்சில் நாடன்.... என , இன்னும்
நிறைய அறிஞர்களின் வனப்பு வரிகள் இந்த அத்தியாயத்தில் நிறைந்திருக்கிறது.
மூன்றாம்
அத்தியாயம் : தனது காப்பியத்தை எழுதி அரங்கேற்ற கம்பன் பட்ட பாட்டைச் சொல்லும் செவிவழிச் செய்திகள் எனப்படும் வாய்மொழி வரலாறு, மற்றும் தனிப்பாடல்கள் , சான்றோர் குறிப்பு எனப்
பலவிதத் தரவுகள் நிரம்பியுள்ள இந்த அத்தியாயம் மிக முக்கியமான ஒன்று. மிக விரிவான,
பல வித கர்ண பரம்பரைக் கதைகளைச் சுவைபட எடுத்துச் சொல்லிய பின்பு, இந்த அத்தியாயத்தின் 3.29.1ல் ஆரம்பித்து 3.29.13 முடிய உள்ள பகுதி கம்பன் சந்தித்த எதிர்ப்புக்கான
காரணங்களை விரிவாக வகைப்படுத்துகிறது. இந்தப் பகுதி படித்து அறிந்து கொள்ள வேண்டிய மிக
முக்கியமான ஒரு பகுதியாகும்.
அன்று கம்பன் பெற்ற வசவுகள், சந்தித்த
எதிர்ப்புகள் பற்றிப் பேசப்படும் பல நூறு கதைகளை ஒரு இலக்கிய வாதியாகப் பகிர்ந்து கொள்ளும் அதே சமயம், ஒரு ஆய்வாளனாக பாரதி கிருஷ்ணகுமார் அகச்
சான்றிற்குக் கம்பனின் கவிதை வாக்கு
மூலங்களை எடுத்துக்கொள்கிறார். இதுவே, இந்தப் புத்தகத்தின் அடுத்த அடுத்த
அத்தியாயங்களில் மிக அழகுற ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கம்பனின் காப்பியத்தில் உள்ள “அவையடக்கத்தில்” உள்ள ஆறு பாடல்கள் வழியாக இந்த ஆய்வு , எப்படிப் புறத்தே பணிவான சொற்களாலும்
, அகத்தில் துணிவுடனும் கம்பன் தனக்கேற்பட்ட
அவமதிப்புகள் பற்றிப் பேசி உள்ளான் என்பதை இந்த ஆய்வு நூல் அற்புதமாக நிறுவி
உள்ளது. அதிலும் , அவையடக்கத்தின்
நான்காவது பாடலாக வரும் “அசுணப் பறவை” குறித்த பாடலில் கம்பன் கேட்பது பற்றி இந்த நூலின் எட்டாவது அத்தியாயம் வெகுஅழகாகக்
குறிப்பிடுகிறது.
ஒரு ஆய்வு நூலிற்கு இந்த அளவில் FONT இருக்க வேண்டும் –அதுவும் குறிப்பாக TIMES NEW
ROMAN ல் இந்த TICK ல் தான்
அடிக்கப்பட வேண்டும்- கமா, கோலன்,இரட்டை கோலன் இவ்வாறு இருக்க வேண்டும்- என்றெல்லாம் நெருக்கி இன்றளவும் ஆய்வுகள் ACADEMIC PRESENTATION ஆக மட்டுமே சுருங்கி விடும்
காலகட்டத்தில், ஒரு AESTHETIC PRESENTATION அங்கீகாரம் பெற என்னவெல்லாம் பாடுபட்டிருப்பான் கம்பன் அந்தக் காலத்தில் என்பதை
இந்த நூல் உணர்த்துகிறது.
மூலவரான வான்மீகியினை விடவும் அழகாக கம்ப உத்சவ உலா. உத்சவர் உள்ளம் அறியும்
நன்னூல் இது . காண்க கம்பனின் பேருலா.. இந்த அரிய புத்தகம்
பெறத் தொடர்பெண் 94442-99656 .




Comments
Post a Comment