AMMA THROWS A PARTY TO THANK THEMBAVANI FRATERNITY..
ஆறு ஏழுவருடம்
முன்பு எனது அலைபேசியில் எடுத்த ஒரு வீடியோவினை இன்று திடீர் என கூகிள் போட்டோ
தனது நினைவகத்தில் இருந்து எடுத்து எனக்கு நினவுபடுத்தியது.
இப்போது 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் எனது
அம்மா அப்போது சென்னையில் கடைசித் தம்பி
வீட்டில் இருந்தார்கள். திடீரென உடல் நலம் குன்றி யாரையும் அடையாளம் தெரியாத அளவு
டிமென்சியா எனப்படும் மறதி வியாதி வந்து விட்டது. உறவினர்கள் எல்லாம் இங்கு
இருப்பதால் மதுரைக்கு அழைத்து வந்து விட முடிவு செய்தோம். தம்பி அம்மாவை
அனுமதித்திருந்த அந்த குரோம்பேட்டை மருத்துவமனை பிரபலமான ஒன்று. அவர்களே “ஒன்றும்
உறுதியாக சொல்ல முடியாது. கூட்டிப் போய் விடுங்கள்” என்று சொல்லி விட்டார்கள்.
மாப்பிள்ளை அஜயன் ஒரு நல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு
செய்து தந்தார். மிகவும் மோசமான நிலையில்
ஏறத்தாழ கோமா நிலைக்குச் சென்று விட்ட அம்மாவை அதில் ஏற்றி விட்டு இரண்டாம் தங்கை மற்றும் அவளது கணவர் அம்மாவுடன் வர , எனது வண்டியில் நானும் பிறரும் மதுரை
புறப்பட்டோம். எனது தந்தையின் நெருங்கிய நண்பரான டாக்டர் விஜயன் பிரபல அறுவை
சிகிச்சை நிபுணர். அவர் கோரிப் பாளையத்தில் ஒரு பெரிய மருத்துவமனை தொடங்கி
இருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு எனது இரண்டாம் தம்பி ஆம்புலன்ஸ் மதுரை வந்த உடனே
சிகிச்சை ஏற்பாடு செய்யத் தயார் நிலையில் ஒரு மருத்துவக் குழு காத்திருப்பதை உறுதி
செய்து எங்களுக்குத் தகவல் அளித்து விட்டான்.( ஆம்புலன்ஸ் டிரைவர் அம்மாவை
ஆம்புலன்சில் ஏற்றும்போதே அபசகுனமாக “ நிறைந்த அம்மாவசை. போகும் வரை தாங்கணும்”
என்று சொல்லி கிலேசத்தை அதிகரித்து விட்டார்.) துக்கத்தில் , மனம் முழுதும் பயம் அப்பிக் கிடக்க அம்மாவின்
ஆம்புலன்ஸ் உட்புறம் இரண்டாம் தங்கையும்
மைத்துனரும் அவ்வப்போது அம்மாவின்
சுவாசத்தினை உறுதி செய்தவாறே பயணிக்க, பின் வண்டியில் நாங்கள் என்ன ஆகுமோ
என்ற கவலையில் தொடர்ந்து...அந்த இரவு மிக நீளமாக இருந்தது.
ஒருவழியாக மதுரை
வந்த அடுத்த நிமிடத்தில் இருந்து அம்மாவிற்கு தீவிரமான சிகிச்சையினை டாக்டர்
விஜயன் மற்றும் அவரது மகள் இருவரின் நேரடி மேற்பார்வையில் இயங்கிய ஒரு குழு
ஆரம்பித்து விட்டது. ஏழு நாள் வரை எந்த முன்னேற்றமும் இல்லை. எந்த அசைவும்
எதிர்வினையும் அம்மா வெளிப்படுத்தவில்லை. ஏழாவது நாள் மாலை பிசியோ தெரபிஸ்ட் அம்மாவின்
கால் நரம்பினை இழுத்து விடும் போது சற்று அழுத்தமாக பிடித்து விட அம்மா உடனே முகம்
சுழித்து மெல்லிதாக முனகினார்கள். உற்சாகமான நாங்கள் எல்லோருமாக சேர்ந்து அம்மாவின் நினைவுகளை விரைவில் மீட்டெடுக்க ஆளுக்கு ஆள் அவர்களுக்கு தெரிந்த
படி பேசி , அந்தக் காலத்திலேயே கேப்ரன் ஹாலில் அம்மா படித்த கதையினை, இன்னும்
அம்மா கையெழுத்தில் இருக்கும் cursive writing
style என்று திருப்பித் திருப்பி அம்மாவின் பெருமைகளைச் சொல்லச் சொல்லப், பெருமிதம் தாங்காமல் அம்மா ஒரு நாள் நன்கு கண் விழித்து
ஒரு சிரிப்பு சிரிப்பு சிரித்து எழுந்ததைப்
பார்க்க வேண்டுமே! the most precious moment of our life which stands
frozen deep in all our memories..
மகிழ்வுடன்
அம்மாவை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்த நாங்கள் ஒரு முழு மாதம் அம்மாவிற்கு சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும்
பொருட்டு , பழமை வாய்ந்த அரசரடி தேம்பாவணி
இல்லத்தில் அம்மாவை உள் நோயாளியாக சேர்த்தோம். முழு நேரமும் அம்மாவைக்
கவனித்துக்கொள்ள இரண்டு தாதியர்கள் சுழற்சி முறையில். அவர்கள் அம்மாவிற்கு பெரும்
நண்பர்களாகிப் போனார்கள். காலை மாலை இரண்டு நேரமும் அம்மாவை சக்கர நாற்காலியில்
உட்கார வைத்துக் கொண்டு இந்த இரண்டு
பெண்களும் மருத்துவ மனை உட்புறம் இருந்த
பெரிய காலி இடத்தில் அப்படி ஒரு ஓட்டமும்
நடையுமாக ரேஸ் போகும். வண்டி வேகம் ஏற ஏற அம்மாவிற்குத் தாளாத சிரிப்பு வரும்! தாதியர்
இல்லத்தில் இருந்து வரும் சிறப்பு உணவு. தினசரி இரண்டு தடவை மருத்துவர் ஆலோசனை.
அத்தனை மகன்களும், மகள்களும் மாறி மாறிக் கவனிப்பு என்று வெகு விரைவிலேயே அம்மா
பூரண குணமடைந்து விட்டார்கள். ஒரு மாத
காலத்தில் அங்கிருந்த அத்தனை பேருக்கும் பிரியமான சீதாப் பாட்டி என்று அம்மா
பிரபல்யம் ஆகி விட்டார்கள். அவ்வளவு சிறப்பாக அம்மாவைக் கவனித்துக் கொண்ட தேம்பாவணி மருத்துவமனைக்கு வெறுமனே கட்டணத்தைச்
செலுத்திவிட்டு டிஷ்சார்ஜ் சம்மரி வாங்கி விட்டு வீட்டுக்குப் போக மனமில்லை. அந்த
தேம்பாவணி இல்ல மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு அம்மா மனம் கனிந்த நன்றி
சொல்லும் விதமாக ஒரு கேக் செய்ய சொன்னேன். அதில் Thank you Thempavani! என்று எழுதி
மருத்துவமனையில் அனைவரின் முன்பும் அம்மாவை கேக் வெட்டச் செய்து அனைவருக்கும்
ஊட்டி விடச் செய்தோம். தாதியர்களைப் பிரியப் போகிறோம் என்று என் தாயார் கண்ணீர்
பெருக்க, “ அழுகாதிங்க பாட்டி” என்று
அந்தப் பிள்ளைகள் சமாதானப்படுத்த, அந்த உணர்வுபூர்வமான காட்சிகளை எனது மகள் எனது
அலைபேசியில் செய்திருக்கிறாள். இன்று அதைக்
கண்ணுற்ற போது மறுபடியும் ஒரு முறை சொல்லத் தோன்றியது..
THANK YOU
THEMPAVANI...


Comments
Post a Comment