மறக்க முடியாத தோழர் நன்மாறன்

 தோழர் நன்மாறன் நினைவுகளைப் பகிரப் பகிர அத்தனை நெகிழ்வாக இருக் கிறது. தோழர் ஸ்ரீரசாவின் பதிவு எனக்கு அவரது வில்லாபுரம் வருகையினை நினைவூட்டியது. 







முதலில் ஸ்ரீரசாவின் பதிவு 

தோழர் என்.நன்மாறன்...
-----------------------------------
-ஸ்ரீரசா
------------------------------------
1980 களில் மாணவப் பருவத்தில் இருந்த காலத்தில், நாங்கள் வசித்த நரிமேடு பகுதியில் சாலையை மறித்து ஒரு பந்தல். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கூட்டம் என்றார்கள். ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் முதன் முதலாகத் தோழர் என்.நன்மாறனின் பேச்சைக் கேட்டேன்.
அப்புறம் மெல்ல மெல்ல இடதுசாரி இயக்கத்தின் மீது ஈர்ப்பு வந்த காலங்களில், எங்கே கூட்டங்கள் நடந்தாலும் தேடித் தேடிப் போய்க் கேட்க ஆரம்பித்த காலங்களில் தோழர் என். நன்மாறனின் பேச்சு எளிமையும், வித்தியாசமான வெளிப்பாட்டு முறையிலும் இருந்ததைப் பலமுறை அவதானித்து நண்பர்களோடு விவாதித்துள்ளேன்.
அப்போதெல்லாம், நன்மாறனின் மேடைகள் வித்தியாசமானதாக இருக்கும். சர்வதேச, தேச, உள்ளுர் அரசியல் நிலைமைகளைப் போகிற போக்கில் மிக எளிமையாக அவர் பேசிச் செல்லும் பாங்க எவரையும் ஈர்த்து விடும்.
அவர் உருவத்திற்கும் அவருக்குள்ளிருந்து வெளிப்படும் பேச்சுக் கலைஞனுக்கும் தொடர்பே இருக்காது.
இராமலிங்கம் என்ற தன் பெயரைத் தமிழ் இயக்கத்தின் மீதான பற்றுதலின் காரணமாக நன்மாறன் என மாற்றிக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தின் மீதும், மார்க்சியத்தின் மீதும் தீராக் காதல் கொண்டவர்.
ஆரம்பத்தில் பா.நெடுமாறன் போன்றொரோடு இணைந்து இருந்தாலும், அவர் மூலம் கிடைத்த நூலகர் வேலை, காவல்துறை வேலை என அத்தனையும் உதறி எறிந்து விட்டு, இடதுசாரி இயக்கத்தின் கட்சி வேலையே தன் வாழ்நாள் லட்சியமென வரித்துக் கொண்டு, ஒரு காந்தியத் தனமான புறநிலை வாழ்வையும், அகநிலையில் ஒரு தெளிந்த தேர்ந்த மார்க்சிஸ்டாகவும் தன்னை வடிவமைத்துக் கொண்டவர் என்.நன்மாறன்.
இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பின்பும் இருப்பதற்குச் சொந்த வீடில்லாமல் அரசுக்கு மனுப் போடுகின்ற நேர்மையாளராக இருந்தவர் தோழர் என். நன்மாறன். கட்சி தருகின்ற பிழைப்பூதியத்திலேயே , வறுமையோடு மல்லுக்கட்டிக் கொண்டே, செம்மையான மார்க்சிய வாழ்வு வாழ்ந்தவர் தோழர் என்.நன்மாறன்.
ஒரு முறை சார்க் நாடுகள் பற்றி மேடைப் பேச்சொன்றில் அவர் பேசியது இன்னமும் நெஞ்சை விட்டு அகலாதது... இந்தியாவைச் சுற்றி கிட்டத்தட்ட அத்தனை நாடுகளும் ஜனநாயகத்திலிருந்து தடம் மாறித் திரிபவை. நேபாளத்தில் அப்போது மன்னராட்சி. பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி, இலங்கையில் அதிபர் ஆட்சி, பூடானில் மன்னரே இப்போதுதான் டி.வி. பார்க்கிறார்... ஏதோ இந்தியாவில் மட்டும்தான் இந்த அளவிலாவது ஜனநாயகம் நீடிக்கிறது. இதற்கும் ஆபத்து வராமல் நாம் தான் காக்க வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றார்...
இந்தியா பல நாடுகளிடம் கடனுக்குக் கையேந்த ஆரம்பித்ததை, நெதர்லாந்துன்னு ஒரு நாடு, நம்ம ஊர்க் கோனார்கள் மாதிரி ஆடு, மாடு மேய்ச்சு பால் கறந்து விக்கிற தொழில் செய்யுறவனுங்க... அவனுங்க நாட்டுக்குப் போய்க்கூடக் கடன் வாங்கி வந்திருக்கானுங்க... என்று நகைச்சுவை பொங்கக் கூறினார்...
நன்மாறனின் பேச்சுக்களை அசை போட்டால் நிறைய நிறையக் கூறிக் கொண்டே செல்லலாம்.
தமிழகத்தின் முற்போக்கு மேடைகள் மட்டுமல்லாது, தமிழகச் சட்டமன்றத்திற்கும் இரு முறை தேர்வாகி, சட்டமன்றத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாகத் தனது வாதங்களை, தனது வழக்கமான நகைச்சுவையோடு எடுத்து வைத்து அரங்கை அதிரச் செய்தவர் நன்மாறன்.
நன்மாறனின் பேச்சை, மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர், ஜெ.ஜெயலலிதா என இருவருமே இரசித்துக் கேட்பர். அவர்கள் மட்டுமல்ல, அனைத்து எம்எல்ஏக்களுமே நன்மாறன் மேல் தனி மாரியாதை வைத்திருந்தனர்.
இரண்டாவது முறை கிழக்குத் தொகுதியின் நன்மாறனின் வெற்றிக்கு அவரது அப்பழுக்கற்ற ஊழலற்ற பிம்பமும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தில் நாங்கள் பல வருடங்களாக அவரோடு இணைந்து செயலாற்றிய நாட்கள் மறக்க முடியாதவை.
தமுஎகச-வின் மதுரை மாநகர் மாவட்டக்குழுவுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தோழர் என். நன்மாறன். உடல் நலமில்லாத காலத்திலும் மாவட்டக்குழு கூட்டம் என்றால் தவறாமல் கலந்து கொள்ள வந்துவிடுவார் தோழர் என்.நன்மாறன்.
நன்மாறன் ஒரு தேர்ந்த படிப்பாளி. எப்போதும் கற்றுக் கொண்டே இருந்தார். அவரது கல்வியின் ஆழம் மேடை ஏறுகின்ற போது வெளிப்படும் அவரது பேச்சின் எளிமையில் வெளிப்படும்.
எந்த ஒரு தோழர் ஏதாவதொரு நூல் கொடுத்தாலும், உடனடியாகப் படித்துவிட்டு, அதனைப் பற்றி நாலுவரி போஸ்ட் கார்டில் எழுதிப் போடுவார். இப்போது செல்போன் காலத்தில், போனில் பேசி, அது பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து உற்சாகமூட்டுவார். சபாஷ் என்கிற வார்த்தை அவரது பாராட்டுரைகளில் அடிக்கடி இடம் பெறுவது.
ஏனென்றால் பொதுவாக இயக்கத்தோழர்கள் பலரும் ஏதாவது புத்தகம் கொடுத்தால், அதைப் படித்து நாலு திட்டுத் திட்டினால் கூடப் பரவாயில்லை, எதையுமே சொல்லாமல் மவுனம் காக்கும் மௌடீகவாதிகள் அதிகம் நிறைந்துள்ள காலம் இது... ஆனால் நன்மாறன் கையில் புத்தகங்கள் தந்தால், கட்டாயமாக அவரது காத்திரமான பதில்களை நாம் எதிர்நோக்கலாம்...
மிகச்சிறந்த அரசியல் பேச்சாளராக அறியப்பட்ட நன்மாறன், மிகச் சிறந்த குழந்தை இலக்கியவாதியும் கூட. அவர் நிறையக் குழந்தைப் பாடல்களை எழுதியுள்ளார். அதில் கே.பி.ஜானகியம்மாள் போன்ற இடதுசாரி இயக்கவாதிகளைப் பற்றியும் குழந்தைப் பாடல்கள் புனைந்து, குழந்தைகள் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரது முதல் நூலே, சின்னப் பாப்பாவுக்குச் செல்லப் பாட்டு என்கிற குழந்தை இலக்கிய நூல்தான். எங்களது காலம் வெளியீட்டின் சார்பில் நான் தான் அவரது முதல் நூலாக அதை வெளியிட்டேன். தன் முதல் நூலைப் பார்த்ததும் அவருககு ஏகப்பட்ட மகிழ்ச்சி. தொடர்ந்து, லெனின், ஸ்டாலின் பற்றிய சிறு நூல்களையும் எழுதியுள்ளார். அவ்வப்போது செம்மலருக்குச் சில கட்டுரைகள் தந்துள்ளார்.
நன்மாறன் மிகச் சிறந்த கலா ரசிகர். அவரே சில நேரம் பாடல்களைத் தன் குரலில் பாடுவார். மதுரையில் ஒரு காலத்தில் உலாவி வந்த மிகச்சிறந்த நாடகக் கலைஞர்கள், தெருப்பாடகர்கள் பற்றியெல்லாம் அபூர்வமான தகவல்களைப் போகிற போக்கில் சொல்லிச் செல்வார். அவற்றை யெல்லாம் தொகுத்து ஒரு நூலாக்குங்கள் நன்மாறன் என்று இருபது நாட்களுக்கு முன்னர்கூட அவரை வலியுறுத்தினேன். அவரது மரணம் மதுரையின் மிகச்சிறந்த நுண் வரலாற்றின் மரணமும் கூட... அவை எழுத்தாகப் பதிவாகாமல் போனது தமிழ்கூறு நல்லுலகின் துயரமே.
அதுபோலவே, அவர் சிறுபாண்மை நலக்குழுவின் பொறுப்பாளராக இருந்து செயலாற்றிய காலங்களில், ரேகைச்சட்டத்தை எதிர்த்துக் களமாடிய பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் வரலாற்றைப் போகிற இடங்களில் எல்லாம், பேசுகிற பேச்சுக்களில் எல்லாம் எடுத்துகூறியவர் நன்மாறனைப் போல எவருமே இல்லை....
இளையவர்களிடம் அன்பு, மரியாதை, எதையும் நகைச்சுவையாக வெளிப்படுத்தும் தன்மை, இடதுசாரித் தத்துவத்தின் மீதும், புரட்சியின் மீதும் தளராத நம்பிக்கை, பொது வாழ்வில் நேர்மை, தேன் குடத்தைச் சுமந்தபோதும் புறங்கையை நக்கிப் பழகாத நேர்மைக் குணம்...
செவ்வணக்கம், தோழர் நன்மாறன்...
எங்கள் மனதிலிருந்து எப்போதும் உங்களுக்கு மரணம் இல்லை... பொதுவுடமை வீரர்கள் எப்போமும் சாவதில்லை...
மரணத்தை வென்றவர் நீங்கள் நன்மாறன்...
இன்குலாப் ஜிந்தாபாத்!



Like

எழுபதுகளின் பிற்பகுதியில் வில்லாபுரத்தில் எங்கள்  SOCIALIST YOUTH FRIEND OF INDIA  கிளையின் (DEMOCRATIC YOUTH FRIEND OF INDIA எனப் பின்னாளில் இது அழைக்கப்பட்டது. ) பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்தார். சங்கர் தாதா கடையில் பன்னும் டீயும் குடித்துவிட்டு கூட்டத்திற்கு போகும் முன் சாவடியில் உட்கார்ந்து அப்படிப் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் அத்தனை பேரும் சிரித்து மாளவில்லை. மேடையில் ஏறியதும் உலக அரசியலை அவர் எளியவர்கள் புரியும் விதத்தில் சொன்ன விதம் இருக்கிறதே,  அடடா..  அடடா..

''அமெரிக்காவும் அணுகுண்டு வச்சிருக்கன். ரஷ்யாவும் வச்சிருக்கன். அமேரிக்கா குண்டு போட்டா அஞ்சு நிமிசத்தில் சர்வநாசம். ஒரு சிகரட் குடிக்கிற நேரம். ஆனா அதுக்கு முன்னாடியே ரெண்டு நிமிசத்தில் அதை நாசமாக்குற குண்டை ரஷ்யா தயாரிச்சுட்டான். ஒரு பீடி குடிக்கிற நேரம் போதும் இவனுக்கு.."

பின்நாளில் இது போல் அவர் வீசி எறிந்த பல நூறு விசுவல் அரசியல் நறுக்குகளில் இது மிகப் பிரபலமானது, 

லிபியா அருகே போர்க்கப்பலை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. கடாபி அதனைக் கண்டித்தார். அதைப் பற்றிச் சொல்லும்போது “ஐயா..! நீங்க பாட்டுக்கு உங்க வீட்டுல இருக்கீங்க.. எவனோ ஒருவன் தினமும் காலைல உங்க வீட்டு வாசலில் வந்து தண்டாலும், பஸ்கியும் எடுத்தா உங்களுக்கு எப்படி இருக்கும்” என்று கேட்டார். 

அருமை நன்பர் சங்கர் அவரது அருமையான பேச்சுகளின் சில பகுதிகளைப் பதிந்துள்ளார். அதனைக் கீழே தந்துள்ளேன். 

அவரது பேச்சுக்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும்...
"இந்தியாவைச் சுற்றி மூன்று பக்கம் கடல் - நான்கு பக்கம் கடன் - என்ற நிலையில் இருந்தால் நாட்டைப் போலவே மக்களும் கடனாளியாக தான் இருப்பார்கள்"
"ஆங்கிலேயர் காலத்தில் நாம் அடிமைகள்... தற்போது நமக்கு பெயர் நவீன அடிமைகள்"...
" மரம் அமைதியாக இருந்தாலும் காற்று அதை விடுவதில்லை என்பது போன்று மக்களை கடனாளியாக மாற்றும் முயற்சி அன்றாடம் அரங்கேறுகிறது"...
" நாளுக்கு நாள் மதிப்பு கூடும் கால்நடைகள் வாங்குவதற்கு எந்த வங்கியிலும் லோன் எளிதில் கிடைப்பதில்லை - மாறாக கார் வேண்டும் என்று நீங்கள் கேட்டு முடிப்பதற்குள் உங்கள் வீட்டு வாசலில் கார் வந்து நின்று விடுகிறது"...
"வருமானத்துக்கு ஏற்ப செலவு செய்வது என்ற நிலை மாறி, வருமானமே இல்லாமல் செலவு செய்யும் கலாச்சாரம் பரவி வருகிறது.... பிச்சை எடுப்பதை விட கடன் வாங்குவது கொடூரமானது என்பது புரியவில்லை"...
"சேமிக்கும் பழக்கம் அனைவரிடமும் இருக்க வேண்டியது... பணத்தை மட்டுமல்ல - நல்ல குணத்தை, பழக்க வழக்கங்களை ,பண்பாட்டை, வாழ்க்கை முறையையும் சேமிக்கப் பழக வேண்டும்"....
அந்தக் கால கட்டத்தில் நன்மாறன் பேச்சில் நாங்கள் அத்தனை பேரும் அப்படி சொக்கிக் கிடப்போம். பின்னாளில் எங்கள் தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலக மனமகிழ் மன்ற விழாவிற்கு அழைத்து அவரை அலுவலகத்தில் உரிய மரியாதை செயதது மறக்க முடியாத நினைவு.

அவரது வாழ்வு ஒரு நிஜமான கம்யூநிஸ்ட எப்படி இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லிச் சென்றுள்ளது பாடம்.

நாம் கற்போம்.. நம் வாரிசுகளுக்குக் கற்பிப்போம்.

Comments