இடை நில்லாப் பயணம்

 

இடை நில்லாத் தொடரி...

(பாகம் மூன்று )




சித்த வைத்தியர் ஆன சண்முகக்கனி தனது வீட்டில் பல அரிய மூலிகைகள் வளர்த்து வருபவர். கண் வலி என்றால் நந்தியாவட்டைப் பூவை இமை மேல் வை சரியாகி விடும் என்பார். சின்னச் சின்ன வைத்தியம் அவ்வளவு அழகாகச் சொல்லுவார். சாராயம் காய்ச்சுவது எப்படி , எந்தப் பதத்தில் ஊறல் பாம்பு போல புஸ் என்ற சப்தத்துடன் நுரைத்து வரும் என்றெல்லாம் கவித்துவத்துடன் விளக்குவார். அன்று அவர் கண்ணில் கள்ளிகுடி ரயில்வே கேட் அருகில் ஒரு மருத்துவ மூலிகை படர்ந்திருந்தது தட்டுப்பட ,   இறங்கி ஓடி அதனைத்தான்  எடுத்து  வந்தார். சாமிநாதன் ஏன் ஓடினார் என்று தெரியவில்லை. எல்லோரும் யோசித்தவாறு அமர்ந்திருந்தோம். சிறிது நேரத்தில்  வண்டி  புறப்படும் சமயம் ஓடி வந்து உள் ஏறிய சாமிநாதன் கையில்  ஒரு பெரிய பார்சல். கள்ளிகுடி கிராமத்தில் காலை நேரத்தில் மொச்சை மற்றும் சின்ன சின்ன வடைகள் மிக அருமையாக சுட்டு விற்பார்கள். அதனை வாங்கத்தான்  ஓடி இருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட மொச்சை பாக்கெட் மற்றும் முப்பது நாற்பது வடைகள். 

இப்படித்தான் இருக்கும் கம்பார்ட்மெண்டில் விருந்தோம்பல். அருள்ராஜ் சார் விருந்தோம்பல்  மிரட்டல் ஆக இருக்கும். ஞாயிறு தேவாலயம் சென்று விட்டு கறிக்கடை செல்லும் போது வீட்டிற்கு ஒரு கிலோவும் ரயில் நண்பர்களுக்கு ஒரு கிலோவும் என்று இரண்டு கிலோ மட்டன் எடுத்து சமைத்து திங்கள் காலை மூன்று நான்கு பிரட் பாக்கெட் மற்றும் பெரிய பாத்திரத்தில்  கறியும் குழம்பும் என்று கொண்டு வந்து விடுவார். திங்கள் காலை பெரிய அன்னதானமே நடக்கும். நம்ப முடியாமல் ரயில் பயணிகள் இந்த வினோத நட்புக் குழாமை ஏக்கத்துடன் பார்த்துக் கடப்பர்.

மாலையில் ஒவ்வொருவரும் அவர்கள் அலுவலகம் அருகில்  கிடைக்கும் வித்தியாசமான தின் பண்டங்களுடன் வண்டிக்கு வந்து விடுவார்கள். அதிலும் அல்டாப் பாய் வாங்கி வரும் பார்ஸல் அட்டகாசமாக இருக்கும். அம்பாசடர் லாட்ஜ் எதிரில் சுடச் சுட பட்டாணி சுண்டல் பயறு வகைகள் பத்து இருபது பாக்கெட்டுகள் வாங்கி வந்து விடுவார். ஒருவர் பிஸ்கட் பாக்கெட் மற்றவர் நொறுக்கு தீனி என்று எல்லாம் பத்து இருபது பாகேட்டுக்கள் தான். வரும் அனைவருக்கும் கொடுத்து விட்டு அந்த உற்சாக மாலையில் பெரும் குரலெடுத்து அல்டாப் பாய் பாடும் தீன் பாடல்களும் பழைய திரைப்படப் பாடல்களும் பயணத்தை அத்தனை  இனிமையாக்கும். பாய்  வரிசை  முகமது ராவுத்தர் வழி உறவுக்காரர். சொந்தமாக ஒரு அச்சகம் வைத்து இருந்தார். அபாரமான குரல் வளம் கொண்டவர். தினம் தினம் இப்படி என்றால், வாரக் கடைசி படா கானா மாலை ஆகி விடும். ஐந்து மணிக்கே அலுவலகம் விட்டு கிளம்பி விடுவார் அருள் சார். நேரே குமார் மெஸ் சென்று ஒரு பத்து மட்டன் அல்லது சிக்கன் வகை கிரேவியும் அதற்கேற்ப பரோட்டக்களையும் கட்டிக் கொண்டு வண்டிக்கு வந்து விடுவார். நண்பர் குழாம் செலவினைப் பகிர்ந்து கொள்வோம். வார இறுதிக்கான இந்த சிறப்பு விருந்திற்கு எங்களுக்கு கம்பார்ட்மென்ட் சரிப்படவில்லை. பூம்பாண்டியன் சார் பரிந்துரையில் காலியாக வரும் லைவ் ஸ்டாக் ரேக் எங்களுக்காகத் திறந்து விடப்பட்டு ஒவ்வொரு வார இறுதியிலும் நாங்கள் அதனை ஆக்ரமித்துக்  கொள்வோம் . கூடவே பூம் பாண்டியன் சாரும் லோகோ பைலட் மோகனும் ஏறிக் கொள்வார்கள். பல தடவைகள் அருள்சார் அதனைக் கூட்டிச் சுத்தப்படுத்த  , சாமிநாதன் சார் பத்திரிக்கைகளை  விரித்து அனைவரும் அமர வழி செய்வார். எந்த ஈகோவும் இல்லாமல் அருள் சாரும் சாமிநாதன் சாரும் வெகு இயல்பாக எங்கள் அனைவரையும் அப்படி உபசரிப்பர். அதிலும் அருள் சார் காட்டும் கரிசனம் உருக வைத்து விடும். (சாமிநாதன் சார்தான் அருள் சாருக்கு அப்பத்தா என்று சொல்லப் பெயர் வைத்தார்!). எங்கள் அனைவரையும் கடந்து போகும் எவருக்கும் திகைப்பே மிஞ்சும். ரயில் சிநேகம் இவ்வளவு அன்பூறக் கிடத்தல் சாத்தியமா என்றே அனைவரும் வியப்பார். மதி சார்,  நான், அல்டாப்   பாய், அப்ரோஸ், சண்முகக்கனி,இளங்கோ,நாராயணன், அருள் சார், சாமிநாதன் சார், வெங்கடேசன், குருசாமி அட்வகேட் ராஜேஷ் என்று நிரம்பி  இருந்த எங்கள் குழுவில் எப்படியும் பத்துப் பேர் ஒரே கம்பார்ட்மெண்டில் தினம்  சந்தித்து விடுவோம்.

உற்சாகத்துடன் ஓடிய அந்தக் காலமும் ஓடி விட்டது. ஓராண்டிற்கு முன் காலை நடைப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து பூம்பாண்டியன் சார் இறந்து போனார். இதோ இரண்டு நாள் முன்பாக சாமிநாதன் சார்.....

for whom the bell tolls ? அனைவருக்குமாகத்தானே மணி ஒலிக்கின்றது. விடைபெறுபவர்களை கண்ணீருடன் விடை பெறப்போபவர்கள் வழியனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இடை நில்லாது ஓடிக் கொண்டிருக்கிறது தொடரும் தொடரி நட்பு. இது போல இன்னும் பல டிசைன்களில் நண்பர் குழாம் கண்ட மயிலாடுதுறை பாசஞ்சர் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அங்கிங்கு நின்று பல்வேறு உன்னத மனிதர்களை  உள்வாங்கியவாறு தொடர்ந்து  ஓடிக் கொண்டிருக்கிறது...



Comments