இடை நில்லாத் தொடரி பாகம் இரண்டு

 இடை நில்லாத் தொடரி...

(பாகம் இரண்டு )





 திருநெல்வேலியில் இருந்து அதிகாலை புறப்படும் அந்த மயிலாடு துறை பாசஞ்சர் காலை எட்டு மணிக்கு விருதுநகர் வந்து ஒன்பது மணிக்கு மதுரை வந்து சேரும் . மதுரைக்கு மறுபடியும் மாலை ஆறு மணிக்கு வரும் அந்த வண்டியில் ஏறினால் திருநெல்வேலிக்கு இரவு ஒன்பதுக்கு போய் விடலாம். எனவே திருநெல்வேலியில் இருந்து மதுரையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் இதில் அதிகம் வருவதுண்டு. தடயவியல் துறையில் பணியாற்றிய அருள்சாரும் கலால் துறையில் பணியாற்றிய இளங்கோ சாரும் காலை ஐந்தரை மணிக்கு திருநெல்வேலியில் வண்டியில் ஏறியதும் கோவில்பட்டியில் ஏறவிருக்கும் டாக்டரைக் கூப்பிட்டு வண்டி கிளம்பி விட்ட சேதி சொல்லி விட்டுத் தூங்க ஆரம்பித்து விடுவார்கள். (டாக்டர் சட்டக் கல்லூரியில் படித்துப்  பின் சமூக இயல் கல்லூரியில் ப்ராக்டிஸ் பண்ணியவர்!) ஏழு மணியளவில் வண்டி கோவில்பட்டியில் அவுட்டானதும் டாக்டர் சாத்தூர் நண்பர்களுக்கு தகவல் சொல்லி விடுவார். சாத்தூரில் இருந்து வரும் வருமானவரித் துறையில் பணியாற்றும் நாராயணன் அலர்ட் ஆகி விடுவார். ஏழரை மணியளவில் சாத்தூர் வண்டி வந்ததும் அவுட் ஆகும் சமயம் நாராயணன் விருதுநகரில் ஏறும் ஏழு எட்டு பேர் அமரும் அளவு சீட் ஒதுக்கி எங்களுக்கு அலர்ட் கொடுத்து விடுவார்.

பல சமயங்களில் மயிலாடுதுறை பாசஞ்சர் வண்டி தாமதமாக வரும். ஆனால் எந்த ஊரில் இருந்து வண்டி  புறப்பட்டுள்ளது என்பதை நாங்கள் துல்லிதமாக அறிய முடிந்ததால் அந்த சமயத்திற்கு ஏற்ப ரயில் நிலையம் சென்று ஏறிக் கொள்வோம். அதிக தாமதம் எனில் பேருந்தில் சென்று விடுவோம். விருதுநகரில் இருந்த பிற நண்பர்களுக்கும் இந்த தகவல் பரிமாற்றம் விரிவு படுத்தப்பட்டு நண்பர் சக்திராஜன் முனைப்பில் விஸ்டா எனும் ரயில் நண்பர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பெரிதும் அரசு ஊழியர்களைக் கொண்டதாக இருந்தது. கூடல் நகர் இரயில் நிலையத்தில் chief Booking  officer ஆக இருந்த திரு பூம் பாண்டியனும் விருதுநகர் இரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டர் திரு அப்ரோசும் அதே  வண்டியில் வாரம் ஒரு முறை பைலட் ஆக வரும் திரு மோகனும் எங்களுடன் தினம் பயணிப்பவர்கள் ஆனார்கள். மோகன் தொடர் வண்டி செலுத்தும் தனது அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். தண்டவாளத்தின் மீது இடைவிடாமல்  இரும்புச்  சக்கரம் சுற்றி வழு வழு எனப் பாலிஷ் ஆகி விடும்போது வண்டி வழுக்கி விடாமல் இருக்க எப்படி தொடர்ச்சியாக மணல் வெளியிடப்படும் என்பது முதல் ,

  புகை வண்டி முன் தற்கொலை செய்ய வரும் மனிதன் எப்படி கடைசியாக ஒரு முறை  வான் நோக்கி கும்பிட்டபடி நிற்பான் என்பதையும் அப்படி யாராவது திடுமென முன் வந்து நின்று விட்டால் , ப்ரேக் அடித்தால் வண்டி கவிழ்ந்து நூற்றுக்கணக்கில் இறப்பு நேரிடும் என்பதால் , கண்களை மூடிக்கொண்டு ஸ்டியரிங் இல் இருந்து கைகளை எடுத்து விடும் சோகம் வரை,  அரிய பல  தகவல் சொல்லுவார். எமர்ஜென்சி கோட்டாவில் டிக்கட் விடுவிக்க வேண்டி பூம்பாண்டியன் சாரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் தொற்றிக் கொண்டே இருக்கும். மனிதன் அத்தனை பேருக்கும் சளைக்காமல் உதவுவார். ஸ்டேசன் மாஸ்டர் அப்ரோசோ வேற லெவல் நண்பர். இரவு டூட்டி விருதுநகரில் முடித்துவிட்டு காலையில் மதுரையில் இருந்த தன் வீட்டிற்கு திரும்பிச் செல்வார். உற்சாகக் கிட்டங்கி  என்றுதான் அப்ரோஸ் சாரைச்  சொல்ல வேண்டும். பெரும் நகைச்சுவை உணர்வாளர். ஊரில் உள்ள அத்தனை பெருந்தலைகளுக்கும்  அவர் பழக்கம். ஆனால் எல்லோருடனும் ஒரே மாதிரிதான் பழகுவார். இவர்கள் எப்போதும் நாங்கள் இருக்கும் கம்பார்ட்மென்ட் தேடி வந்து  அமர ஆரம்பித்தார்கள். ரசனையின் அறிவார் மட்டம் கூட ஆரம்பித்தது.

மதுரை கூட்டுறவு வங்கியில் பணியாற்றிய மதி சாருடன் அந்தக் காலையில் ஒரு பெரியவர் எங்களுடன் சேர்ந்து கொண்டார். 20  வருடத்திற்கும் மேலாக தொடர் பயணியாக இருக்கும் அவரின் பெயர் அல்டாப் பாய் என்று மதி அறிமுகம் செய்து வைத்தார். அப்போதே அவருக்கு வயது அறுபது இருக்கும். கணிரென்ற குரல். லேசான நக்கல் தொனிக்கும் நகைச்சுவை. அதிகாலை வேளையில் நபிகள் நீராடச் செல்லும்  போதெல்லாம்  குப்பையை அவர் மீது கொட்டும் பெண்மணி பற்றிய நாகூர் அனிபா பாடலை அவர் பாட ஆரம்பித்தால் ஒட்டு மொத்த கம்பார்ட்மேண்டும் உறைந்து போகும். பெரும் சேட்டைப் பெரிசு. கள்ளிக்குடியில் கிராசிங்கில் செங்கோட்டை பாசஞ்சர் நிற்பதைப் பார்த்து விட்டால் போதும். பாய் பெரும் குரல் எடுத்து “ ஏலே எசக்கி “ என்று கூப்பிட ஆரம்பித்து விடுவர். ஒரு நாலைந்து பேராவது பதிலுக்கு “ஓய்” எனும் போது ஆச்சர்யமாக இருக்கும்.

 இதற்கு இடையில் ஒரு நாள் சாத்தூரில் இருந்து புதிதாக ஒரு உயரமான  மனிதன் எங்கள் கம்பார்ட்மென்ட்ல் எங்களுடன் சேர்ந்து  பயணிக்க ஆரம்பித்தார். அவர் பெயர் சாமிநாதன் என்று அறிந்து கொண்டோம்.சாமிநாதன் சார் சாத்தூரில் இருந்து வந்து மதுரையில் விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டர் ஆகப் பணியாற்றி வந்தார். அமைதியாக வரும் அவர் எங்கு பணியாற்றுகிறா என்பதே வெகு காலம் கழித்துதான் எங்களுக்கு தெரியும். ஒரே பாட்டும் கூத்துமாக இருந்த நண்பர் குழுவில் சாமிநாதன் வெகு இயல்பாகக் கலந்து கொண்டு அபாரமான தனது நகைச்சுவை உணர்வால் அத்தனை பேர்களையும் தன் வசப்படுத்தி விடுவார். ஒரு நாள் அருள் சார் தனியே கூப்பிட்டு எங்களிடம் சொல்கிறார். " சார், அவர் யார் தெரியுமா? சென்னை பூக்கடை போலிஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த போது ஒருவன் அவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றான் என்ற ஒரே காரணத்தால் அவன் கையை உடைத்து சஸ்பெண்ட ஆனார். அப்புறம் முதலமைச்சரின் கருப்பு பூனைப்படையில் கமாண்டர் ஆக இருந்து விட்டு இப்போது விஜிலன்சில் இருக்கிறார். மிக நேர்மையான போலிஸ் அதிகாரி " அவர் சொல்லிய கதைகள் அவ்வளவு சுவராஸ்யமாக இருக்கும். ரைட் போய் பிடிக்க எத்தனை மாறு வேடம் போட்டது முதல் பிடிபட்டவன் தப்பிக்க என்னவெல்லாம் செய்வான் என்பதெல்லாம் அவ்வளவு அழகாக விவரிப்பார். கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை உரமாக்கி மிடுக்காக வரும் அதே சமயம் நண்பர்களுக்கு அவர் செய்யும் விருந்தோம்பல் நிஜமான அன்பில் வந்ததாக இருக்கும்.

ஒரு நாள் கள்ளிக்குடியில் வண்டி கிராசிங்கிற்காக போட்டு விட்டார்கள். திடீர் என எழுந்தார்கள் சன்முகக்கனியும், சாமிநாதனும். சண்முகக்கனி  லெவல் கிராசிங் ஓரமாக ஓடி எதனையோ தேட சாமிநாதன் லெவல் கிராசிங் தாண்டி ஊரை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தார்.

(தொடரும்)

Comments