இடை நில்லாத் தொடரி...

(பாகம் ஒன்று)

 


விருதுநகரில் இருந்து தினம் தொடர் வண்டியில் மதுரைக்கு அலுவலகம் வரலாம் என்று நான் முடிவெடுத்த  காலகட்டம் அது. அதற்கு ஏதுவாக இருந்த வண்டிதான் நெல்லை மயிலாடுதுறை பாசஞ்சர். காலை எட்டு மணிக்கு விருதுநகர் வந்து ஒன்பது மணிக்கெல்லாம் மதுரை சென்று விடும். மாலை ஆறு மணிக்கு வந்து ஏழு மணிக்கெல்லாம் விருதை வந்து விடும். 

விருதுநகரில்  இருந்து அதிகம் பேர் தினமும் மதுரைக்குப் பணிநிமித்தம் வந்து போகிறவர்கள். அதில் ஒருவர் எனது மதுரை அலுவலகம் எதிரில் இருந்த கலால் துறையில் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த சண்முகக்கனி. டெல்லியில் நான் இருந்த அதே ஆண்டில் அவர் கலால் துறையில் சேர்ந்த தகவல் சௌபா சொல்லித் தெரிய வந்தது.மதுரையில் எங்கள் அலுவலகங்கள் பக்கம்  பக்கமாகவும் விருதுநகரில் இல்லம் இருவருக்கும் இருந்ததும் அன்னியோன்யம் கூட்டியது.  அவர்தான் என்னை பேருந்து நிலையத்தில் இருந்து ரயிலடிக்கு இழுத்து வந்தார். பொதுவாக தினசரி இரயிலில் பயணம் செய்பவர்கள் மீது எனக்கு ஒரு ஒவ்வாமை இருந்த சமயம் அது. வெட்டிப் பேச்சுக்களும் விருதாவும் சீட்டாட்டமும் என்று திரியும் குழுக்கள் பண்ணுகிற அலப்பரைகள் எல்லாம் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. தினம் பேருந்தில் பயணம் செய்யும் எவரும் அப்படிச்  சப்தம் போட்டுப் பேசி வருவதில்லை. காரணம் பேருந்து நகரில் சாலைகளில் பயணிக்கிறது. ஆனால் நகரில் இருந்து விலகி தனியே தண்டவாளங்களில் ஓடும்   தொடர் வண்டிகள்  ஒருவரை மிகவும்  சுதந்திரமாக உணர வைத்து விடுவதும் தனித் தனி  கம்பார்ட்மெண்டுகள் ஒரு பிரைவசி கொடுப்பதாக உணரும் உளவியல் அதற்கு ஒரு காரணம்.

நான் தொடர் வண்டியில் பயணிக்க ஆரம்பித்த இரண்டொரு நாளிலேயே இந்தத் தடத்திலும் அவ்வாறே என்று புரிந்து கொண்டேன். சண்முகக்கனி ஒரு பல்கலை விற்பன்னர். சித்த வைத்தியம் தெரியும் அவருக்கு. சிரிக்கச்  சிரிக்கப்  பேசி அசர வைப்பார். பெரிய சம்சாரி. அவருடன் பயணிக்க ஆரம்பித்த இரண்டாவது நாள். மதியம் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தோம்.

“ பாசு, டிரெயின் குருப் வெட்டியாப் பேசி ஒரு மணி நேரம் தினம் கொல்றாங்க. நாம அவுக ரசனையை கொஞ்சம் உயர்த்துவது மாதிரி தினமும்  ஒரு புதிய சப்ஜெக்ட் தொடுவோம். நீங்க சித்தர்கள் பற்றி ஆரம்பிங்க. அப்படியே சித்தர் பாடல் தொடுவோம். அப்புறம் நல்ல கவிதை  சொல்வோம். ஒரு நாள் மைன்ட் மேப்பிங். ஒரு நாள் க்விஸ். ஒரு நாள் அரசியல். ஒரு நாள் right to information act போட்டு ஜெயிச்ச கதைகள். ஒரு நாள் டிராவல் கதைகள். ஒரு நாள் உலக சினிமா. ஒரு நாள் அலுவலக டிராப்டில் எப்படி மிரட்டுவது என்று வகுப்பு. ஒரு நாள் art of public speaking. ஒரு நாள் spoken english.. இப்படி எல்லா விடயமும் முதலில் நாம் பேச ஆரம்பிப்போம். சுத்தி இருக்குற சப்தம் தானாகக் குறைந்து அமைதியாகும்  பார்க்கிறீர்களா” என்றேன்.

சண்முகக்கனி ஒத்துக் கொண்டார். அடுத்த நாளே ஆரம்பித்து விட்டோம். சண்முகக்கனியிடம் சித்த வைத்திய ஆலோசனைகள் கேட்க வந்தவர்கள் எங்கள்  வலையில் முதலில் சிக்கினார்கள். மெல்ல மெல்ல நாங்கள் இருந்த கம்பார்ட்மென்ட் மற்ற பகுதிகளில் இருந்து வித்தியாசப்பட ஆரம்பித்தது. நாராயணன் ஷில்லாங்கில் விமானப்படையில் வேலை பார்த்து விட்டு ராஜினாமா செய்து  விட்டு வந்து இங்கு வருமானவரி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். நானும் அவரும் இந்தியில் உரையாட ஆர்வ்ம் காட்டுவோம். பிற சப்தங்கள் மெதுவே குறைந்து எங்கள் சப்தம் மட்டுமே ஒலிக்க ஆரம்பித்த அந்த நாளில் இரண்டு நெடிய உருவங்கள் மேல் பெர்த்தில் இருந்து மெதுவாக இறங்கின. சற்றே தடிமனான ஒருவர் சிரித்தவாறே ஒரு எக்ஸ்கூஸ்  கேட்ட வண்ணம் கீழ் குனிந்து  அந்த விலை உயர்ந்த ஷூவினை எடுத்து அணிந்து கொண்டார். அதே போல் இன்னொருவர் அவரது நைக் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு எங்களை நோக்கி மென் முறுவல் பூத்தார். அடுத்து அந்த முதல்வர் செய்தது வியப்பில் ஆழ்த்தியது. முகம் கழுவி விட்டு வந்து ஆடைகளை மாற்றிக் கொண்ட பின் அந்த  மிக விலை உயர்ந்த வாசனை திரவிய குப்பியை எடுத்து தன் மேல் அடித்துக் கொண்டவர் எங்கள் அனைவரை நோக்கியும் அதனை நீட்டி  அடித்துக் கொள்ளுங்கள் சார் என்று முறுவலித்தார். அது நட்பு வேண்டி நீட்டப்பட்ட வாசனையான ஒரு அழைப்பு . நாங்கள் எல்லோருமே அதனை இறுக்கமாகப் பற்றிக்கொண்டோம்.

அவர் சொன்னார்.

“ சார், என் பெயர் அருள்ராஜ். தடைய இயல் துறையில் அதிகாரியாக உள்ளேன். இவர் இளங்கோ. நேஷனல் ப்ளேயர். மதுரை கஸ்டம்ஸ் அலுவலக அதிகாரி. “ அடர்த்தியான தன் கருந்தாடியின் உள் இருந்து இளங்கோ அழகாகப் புன்னகைத்தார்.

  ( தொடரும்) 

Comments