தாதா- பழ.ரகுநாதன்.

எங்கள் பிரியத்திற்குரிய தாதா பழ.ரகு நாதன் , தென்  மண்டல அஞ்சல் அலுவலகத்தில் IPO(pmi)   ஆக  1984ம் ஆண்டில் மதுரையில்  பணியில் சேர்ந்தார். ஆர்மி போஸ்டல் பணியில் இருந்து அவர் இங்கு மாறி வந்த சமயம் அது. ஒரு சில்வர் பிளஸ் வண்டியில் அலுவலகம் வரும் அவர் மிக எளிமையாக எல்லோருடனும் வெகு அன்னியோன்யம் பாராட்டுவார். புதுடில்லியில் இருந்து மாறுதலில் வந்த என்னுடன்  அவருக்கு ஒரு கூடுதல் இணக்கம். எப்போதும் தாதா என்றுதான் இருவரும் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வோம். தாதா ஒரு வசீகரமான மனிதர். அதே போல் நேர்மையுடன் எவரையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் அவருக்கு இருந்தது. அப்போதைய அஞ்சல் இயக்குனர் ஒருவரின் வீட்டில் துறை கணக்கில் வாங்கப்பட்ட பல பர்னிச்சர்கள் இருப்பதாக அறிந்த தாதா நேரே அந்த இயக்குனரின் சேம்பருக்கே சென்று அந்த விவரங்களை எல்லாம் கொடுத்து “ஆய்வுப் பணிகள் சமயத்தில் இவை எல்லாம் காணப்பட்டது. உடனே இவற்றை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் “ என்று முகத்துக்கு நேரிலேயே சொல்லி விட்டு வந்து விட்டார். அவரது கேடரில் அது போல் துணிச்சலாக நேர்மையாக பயமின்றி இருப்பது அப்போது  வெகு அபூர்வமான விடயம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒட்டு மொத்த அலுவலகத்திற்கும் மிகவும் பிடித்த மனிதராகிப்போனார் எங்கள் தாதா. அதன் பிரதிபலிப்பு அவரது திருமணம் காரைக்குடியில் நடந்தபோது வெளிப்பட்டது. அலுவலகத்தில் இருந்த அத்தனை பெரும் ,ஒருவர் பாக்கியில்லாமல் , தூய்மைப் பணியாளர்கள் உட்பட விடுப்பு எடுத்துக்கொண்டு காரைக்குடி சென்றதும் மண்டல அலுவலகம் அன்று அலுவல் நடைபெறாமல் முற்றுமாக ஸ்தம்பித்ததும் எந்தப் பெரும்  வேலை நிருத்தத்தின் போது கூட க் காணப்படாத  ஒற்றுமை மற்றும் நேச வலிமை.

சென்னை முதன்மை அஞ்சல் தலைவர் அலுவலகத்திற்கு  நான் பணி உயர்வில் சென்றபோது எனக்கு பாஸ் தாதா!

அப்போதும் , அவர் ஒரு முறை கூட இளங்கோ என்று என்னை அழைத்ததில்லை. தாதா தான். யார் இருந்தாலும் சரி. கவலையே பட மாட்டார். வேலை செய்வதில் சமரசம் செய்யாத எனக்கும்,  சலுகை எவருக்கும் காட்டாத அவருக்கும் இடையில் அப்படி ஒரு பொருத்தம் இருந்தது. அது நிலத்தில் எவருக்கும் அஞ்சாத நேர்மையின் பாற்பட்டது.

என்னை உலுக்கிய  மரணங்களில் தோழர் வைரனின் மறைவிற்குப் பிறகு இப்போது அன்பு தாதா பி.எல்.ஆரின் மறைவு ..

அரவிந்தாஸ்ரமத்தின் மலர்களின் புனிதமும் அன்னையின் அருட்சிரிப்பும் தாதாவிற்கு மிகவும் பிடித்த விடயம்.

 அன்னையும் அரவிந்தரும் அடங்கி இருக்கும்  சமாதியின் மீது தலை சாய்த்து  மனம் கசிந்து பிரார்த்தித்து அழும் போது ஒரு வெப்பு உங்கள் மீது படரும். அதை உணர்ந்தால் தான் தெரியும் தாதா என்று என்னிட்ம் அடிக்கடி பி.எல்.ஆர். சொல்வதுண்டு.

உங்கள் நினைவுகளில் , அந்த வெப்பை இங்கிருந்தே உணர்கிறேன் தாதா.

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைஞ்சுகிறேன்...

 

Comments