ரமலான் வாழ்த்து...
மதுரையில் முனிச்சாலைப் பகுதியில் வசித்த சந்தக் கவி நண்பன் உஸ்மான் அலிக்கு எப்பவும் அரச மரப் பிள்ளையார் மீது ஒரு அலாதிப் ப்ரீதியாம். அவரது அழகிய தமிழில் ஒரு கணபதி கவிதை. அவரே எழுதியது. அபாரமாக இருக்கிறது.
அவருக்கு ரமலான் வாழ்த்து சொல்லும் முகமாக நான் மொழி மாற்றம் செய்து உள்ள ஒரு கவிதை அதன் பின். அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்.
நண்பன் உதுமான் அலியின் கவிதை...
தந்தானை ஔவைக்கு
தமிழமுதம் வள்ளிக்காய்
வந்தானை உருவாக
வரமருளி கருணைமழை
பெய்தானை பாரதக்
கதைஎழுதத் தன்கொம்பை
கொய்தானை மறவாது
கொள்ளுவாய் மனமே தினம்..
கல்லானைக் கற்றோர்கள்
காட்டும் கதியதனிற்
செல்லானை கனிந்துருகிச்
சொல்லானை நேர்வழியில்
நில்லானை எந்நாளும்
நெறிஞானம் நெஞ்சகத்
தில்லானை யும்உவந்து
ஏற்கின்ற வல்லான் அவன்...
கொண்டானை ஞானக்கனி
கூர்மதியால் வென்றானை
விண்டானை யால்பரமன்
வழிஏறாது மறித்தானை
செண்டாடும் அணியின்றி
எருக்கமணி மார்பானை
கொண்டாடு வாய்மனமே
கூறாது அழியும் இடர்.
((.உஸ்மான் அலி.))
பிரிவினைக்குப் பின் அலகாபாத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்த உருதுக் கவி பூர்ணம் அலகாபாதியின் ஆசியுடன் அருமை நண்பர் உஸ்மான் அலிக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் சொல்லி என்னுடைய பதிவு...
தாஜ் தாரே ஹரம்....
அமைதியும் நிறைவும் என் விதி என எழுது...
அலையும் என் கலம் அமிழ்ந்திடா தெழுது..
சுவனம் எனையே ஏற்றிடாப் போதும்
விதி எல்லாம் விதித்த வேந்தே நீயும் -
மதினம் தான் இனி என் விதி என எழுது...
வறியோர் தமக்கே ஒளியும் கூட்டும்
நின் கருணைப் பார்வை வழியும் காட்டும்..
வறியோர் காக்கும் ரட்ச உந்தன்
வாசல் மிதித்தும் வெறுமனே திரும்பின்
என்ன சொல்லும் இக் ககனம் தான்?
உறவெனச் சொல்ல ஓருயிர் இல்லை
ஊன்றி அடிக்கும் சுற்றிலும் தொல்லை
என் சொல நானும் என் அரபிளங் கோவே
அறிவாய் நீயே என் மனம் தானே..
அறியா தவனெனும் பெயரினைச் சூடிய
பெருநபியே உன் பிரிவி னையே
தாங்கா தெமது தூங்கா இரவு..
அத்தனை நினைவும் நின் பிரேமையில் கரைய
எத்தனை காலம் நான் பித்தனாய்த் திரிய...
தக்கத் தகவென அவனது வெளிச்சம்
நிரம்பிய பூமி மதினத்து பூமி ..
தீரா விழைவும் திகட்டத் திகட்டத்
தீர்ந்திடும் பூமி மதினத்துப் பூமி..
வாழ்தலின் துயரோ சாதலின் பயமோ
இல்லா பூமி மதினத்துப் பூமி..
மதினம் செல்வோம் வாரீர் பாரீர்
கவுசரின் அமிர்தம் பருகிடச் செல்வோம்..
ஒரு முறை அவன்தான் பார்த்தால் போதும்
காலிக் குடுவையும் மதுரசம் ததும்பும்...
அடிக்கும் புயலோ அச்சம் கொடுக்கும்
வெடிக்கும் மின்னல் பயத்தைக் கூட்டும்
எங்கள் துயரம் கடுமை கொடுமை
எங்கு செல்வோம் எம் எஜமானே..
எப்படி உள்ளோம் என்றே நீயும்
பார்க்க மறந்தால் பதைத்து இருப்போம்
பரி தவிப்பில் இறப்போம் பாராது போனால்.
முஸ்தபாவே.. முஜ்தபாவே..
இரக்கம் காட்டு.. இமையொளி கூட்டு..
நிர்க்கதி யோர்தமைத் தாங்கிடும் கரமே..
பாவி நானும் சோம்பி நிற் கின்றேன்.
நட்போ உறவோ விலகிஇருக் கின்றேன்.
சுகந்தம் பரப்பும் கஸ்தூரித் தருவே
அதி காலை மணமே.. அரிய எம் அவுடதமே..
கர்த்தனின் சுவாசமே.. கவலைகள் தீர்ப்பவனே..புனிதத் தூதனே..
சுழலும் சுகந்தத்தின் .
காலை இளம் காற்றே –
புனிதனின் பூமிக்கு நீ செல்லும் போது
மகத்தான தூதன் துயிலும் அம்
மண்ணறை தனிலே
சிரம் தாழ்ந்த எமது சீரிய ஸலாம்
மறவாது சேர்ப்பாய்.
மறந்திடாது சேர்ப்பாய்.
(இளங்கோவன் தாயுமானவர்)


Comments
Post a Comment