மே தின வாழ்த்து...

 ஒரு நிஜமான தோழனுக்கு மே தின வாழ்த்துக்கள்:


அவன் ஒரு நாடறிந்த பேச்சாளன். கேட்கும் அனைவரையும் தனது வசீகரிக்கும் பேச்சால் கட்டிப் போட்டு விடும் மாயக்காரன். அவனது பேச்சில் இருக்கும் புனைவற்ற வாய்மையானது அவனது பேரொளியினை மேலும் கூட்டுவதைப் பலரும் கண்டிருக்கிறார்கள். 

வெறும் பேச்சாளனா அவன்? 

பேச்சு மட்டுமா பாரதி கிருஷ்ணகுமாரின் அடையாளம்?

இயக்கம் என்பது இடைவிடாது இயங்கிக்கொண்டே இருப்பதுதானே.   

என் ஆருயிர்த் தோழனின் திட்டமிட்ட இயக்கத்தினை கல்லூரி காலத்தில் இருந்தே பல ஆண்டுகளாக உடனிருந்து பார்த்து வரும் பேறு பெற்றவன் நான். 

அனைத்துக் கல்லூரி வேலை நிறுத்தத்தின் போது காவல் துறை கல்லூரிக்குள் நுழைந்து அடிக்க ஆரம்பித்த சமயம் எதிர் வினை ஆற்ற வேண்டி, என்.சி.சி. ஆர்மரை உடைத்து துப்பாக்கி எடுங்கடே என்று கர்ஜித்ததைக் கண்டவன். நாடெங்கும்  நெருக்கடி நிலை கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தபோது , தலை மறைவு இயக்கங்களுடன்  இணைந்து தமிழகமெங்கும் சுற்றிக் களமாடி வந்ததைக் கண்டிருக்கிறேன். பெங்களூரில் இருந்து வரும் அரசியல் அறிக்கைகளை ரகசிய விநியோகம் செய்து அது குறித்து விவாதித்து , ஆழமாகப் புரிய வைத்து , நண்பர்களை எல்லாம்  தோழர்கள் ஆக்கி ரசவாதம் செய்ததைக் கண்டிருக்கிறேன். பெருங்குடியில் நடந்த பத்து நாள் முகாமில் சுத்துப் பட்டு கிராம மக்கள் அனைவருக்கும்  பிடித்துப் போன “வளந்தாம் பாண்டி” என அவர்களின்  வீட்டு உறுப்பினன் என்று  ஆகிப் போன அதிசயம் கண்டிருக்கிறேன். மதுரைத் தெருக்களில் அப்போது நடக்கும் பட்டி மன்றங்களில் அடிகளார் மனம் கவர்ந்த பேச்சாளனாக வலம் வந்து திசைகளைத் திகைக்க வைத்ததைக் கண்டிருக்கிறேன். தேர்ந்து கொண்ட அரசியல் கொள்கையின் சாரம் வழுவாது சமரசமற்ற தோழனாக தேர்தல் பணிகளில் ஒரு ஆத்மார்த்தத் தொண்டனாக சுழன்று பணியாற்றியதைக் கண்டிருக்கிறேன். வங்கிப் பணியில் சேர்ந்ததும் தனது போர்க்குணத்தின் பேராற்றலுடன், அபாரமான பேச்சுத் திறனை நிர்வாகத்துடன் negotiating table ல் தனது சக தோழர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வெகு நுட்பமாக பயன்படுத்தி வெற்றிகளைக் குவித்து வந்ததைக் கண்டிருக்கிறேன். மிடுக்காக,  செறிந்த அறிவுச் செருக்குடன் நிர்வாகத்தை எதிர் கொள்ளும் அதே சமயம் தனது தோழமைப் படையுடன் மிக அன்யோன்யமாக ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்ந்து வந்ததையும் கண்டிருக்கிறேன். பணிபுரிந்த வங்கியின் பொதுச்செயலாளர் ஆனதும் கிராம வங்கி ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை ஒரு நெடிய வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியதையும், உச்ச நீதி மன்றம் வரை சென்று அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறப்  போராடி வந்ததையும் கண்டிருக்கிறேன். திரைத் துறைக்கு வந்தபின்பும் தனது முதல் படைப்பாக கீழ வெண்மணிக் கொடுமையினை  ராமையாவின் குடிசை என ஆவணப்படுத்தியதும், வாச்சாத்தி கிராம மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடி வென்று சரித்திரத்தில் முதல் முறையாக தவறு செய்த காவல்,வருவாய்,வனத் துறை அதிகாரிகளுக்கு ஒட்டு மொத்தமாக தண்டனை வாங்கித் தந்த வரலாறை வெகு அழுத்தமாக நீதியின் போர்க்குரல் என்று ஆவணபடுத் தியதையும் கண்டிருக்கிறேன். அந்த ஆவணப்பட வெளியீட்டிற்கு ஒட்டு மொத்த வாச்சாத்தி கிராமமும் வந்திருந்ததையும் அதிலும் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவரே மேடையேறி முதல் கேசட் பெற்றுக்கொண்டு தாங்கள் எப்படி மனம் சோராமல் போராடி வேன்றோம் என்று உணர்வு பொங்கச் சொல்லி அதனை அழுத்தமாக ஆவணப்படுத்தியதற்கு பாரதி கிருஷ்ணகுமாருக்கு நன்றி சொன்னதையும் கண்டிருக்கிறேன். தொடர்ந்து தனது திரை அறிவெல்லாம் கும்பகோணம் பள்ளி தீ விபத்து பற்றி” என்று தணியும் “ அனைவருக்கும் தரமான கல்வியினை வலியுறுத்தும் “ எனக்கு இல்லையா கல்வி” பொதுத் துறை நிறுவனங்கள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்த ஆவணப்படம் என்று தொடர்ந்து சமூகப் பிரச்சினைகளை அதன் பரிமாணங்களை நேர்மையுடன் ஆவணப்படுத்தி வந்ததையும் கண்டிருக்கிறேன். 

கம்பீர வலத்தின் போதும்,  வடம்போக்கித் தெருவின் நெரிசலின் போதும் தேர் அசையாமல் கம்பீரம் குன்றாமால்தான் இன்றும் பவனி வந்து கொண்டிருக்கிறது. 

“ ஒரு சிறு சேமிப்புக் கணக்கு “என்று தலைப்பிட்டு  தனது தொழிற்சங்கப் பணிகளை தோழன் கிருஷ்ணகுமார் விரைவில் எழுதப் போவதாக முகநூலில் பதிந்துள்ளார். 

நட்பில், தனது பேச்சில், தனது நடை உடை பழக்க வழக்கங்களில் என அனைத்திலும் பரிபூரணத்தை விரும்பும் ஒரு perfectionist தோழன் பாரதி கிருஷ்ணகுமார்.

ஒரு தோழனாக அவர் தொழிற்சங்கத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து அவர் உடன் இருந்தவர்கள் நெகிழ்வுடன் பின்னூட்டம் இட்டிருப்பது காண மகிழ்வாக இருக்கிறது.

Deeds, not just Words- comrades என்பான் மாயகாவ்ஸ்கி. இந்த மாயக்காரத் தோழனுக்கு இரண்டும் ஒன்றே. சொல்லுக்கும் செயலுக்கும் இடைக்கோடு அற்று சொல்லே செயலாகி செயலே சொல்லாகிப் போகும்போது  தீ என்று சொன்னால் நாக்கு வேகவேண்டும் என்று சொல்லும் லா.ச.ரா.வின் கூற்று எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.

பாரதி கிருஷ்ணகுமாருக்கு மட்டும்தான் அது முழுதும் பொருந்தும். 

மே தின வாழ்த்துக்கள் என் தோழனே..

Comments