ஒரு பூக் குட்டியும் பின்னே ஒரு இரும்புப் பெண்ணும்..

 

இரண்டு தேசிய விருதுகள் பெற்ற “ஹெலன்” மலையாளத் திரைப்படம்:


 
ஒரு முப்பதாண்டிற்கு முன்பு குமுதத்தில் ஒரு அற்புதமான சிறுகதை ஒன்று வந்தது. எழுதியது யார் என்பது நினைவில் இல்லை.

அது ஒரு  வெள்ளிக்கிழமை மாலை. அடுத்த இரண்டு நாள் வார விடுமுறை. ஊருக்கு வெளியில் இருக்கும் அந்த நர்சரி பள்ளியில்  ஒவ்வொரு வகுப்பாக கதவுகளை பூட்டிக்கொண்டே வரும் பள்ளியின் காவலாளியிடம் கதாசிரியர் அரூபமாக இறைஞ்சுவதுடன் கதை ஆரம்பிக்கும். வாட்ச் மேன் நன்றாக பார்த்தீர்களா. யாரும் இல்லையா. அந்த இரண்டாம் வகுப்பு உள் நன்றாக பார்த்தீர்களா என்று கேட்கும் குரலுடன் கட். அடுத்த காட்சியில் அந்த அழகுக் குட்டி வீட்டில் இருந்து புறப்படுதல், பள்ளியில் இருக்கும் பாங்கு.. பிள்ளைகள் வகுப்பு முடிந்ததும் ஓடி விளையாடும் அழகு. ஒளிந்து விளையாட எத்தனிப்பு. ஒரு ரேக் பின் ஒளிந்து கொள்ளும் அந்த அழகுக் குழந்தை அசதியில் அப்படியே தூங்கி விடுகிறது. கட். எல்லோரும் சென்று விடுகின்றனர். காவலாளி ஒவ்வொரு வகுப்பாகப் பார்த்து பார்த்து பூட்டி வருகிறார். ரேக் பின் ஒளிந்திருந்து உறங்கிவிட்ட குழந்தை அவர் கண்களுக்கு தட்டுப்படவில்லை. திடுமென விழிக்கும் குழந்தை சுற்றிப் பார்க்க நிசப்தம். எல்லோரும் போய் விட்டார்கள். கத்திப் பார்க்கிறது. தட்டிப் பார்க்கிறது. ஊருக்கு வெளியில் உள்ளதால் யாருக்கும் கேட்கவில்லை. இதற்கிடையில் தனது மனைவியுடன் அவரது அம்மா வீட்டிற்கு குழந்தை சென்று விட்டதாக அப்பாவும், அலுவல் முடிந்து அப்பா பிள்ளையை அழைத்து கொண்டு சென்று விட்டதாக அம்மாவும் நினைத்துக் கொள்கிறார்கள். கட். பாப்பாவுக்கு அழுகையை மீறிப் பசிக்கறது. தனது டிபன் பாக்ஸில் கொஞ்சம் மீதமிருந்த உப்புமாவைச் சாப்பிட தாகம் எடுக்கிறது. நிறைய தண்ணீர் குடித்து விடுகிறாள். நேரம் ஆகிக் கொண்டே போகிறது. பாப்பாவுக்கு பயத்தை விடவும் அதிகமாக சிறு நீர் கழிக்கும் உணர்வு அதிகமாகிறது. ஆனால் வகுப்பில் இருக்க முடியாதே. நாளை பிள்ளைகளுக்கு தெரிந்தால் shame shame puppy shame.. all the monkeys know your name என்று பாடி கேலி செய்வார்களே. ஒரு இடத்தில் அவளால் நிற்க முடியவில்லை. சுற்றி சுற்றி வட்ட வட்டமாக ஓடி சிறுநீர் கழிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முயல்கிறாள். கட். இரண்டு நாள் கழித்து வகுப்பறையின்  கதவுகள் திறக்கப்பட்ட போது , இரண்டு நாட்கள்  சுற்றி சுற்றி வந்த அந்த மழலை   இறுதியில் மலர்க் குவியல் போல் வகுப்பின் நடுவில் உயிரற்றுக் கீழ் விழுந்து கிடக்கும் உருக்கமான காட்சியுடன் கதை முடியும்.

நேற்று தற்செயலாக அமேசானில் பார்த்த ஹெலன் என்ற மலையாளப் படம் அந்த பழைய கதையினை நினைவு படுத்தியது. 

பெரிய வித்தியாசம் உயிர் வாழ நடத்தும் போராட்டத்தில் கதை நாயகி ஜெயிப்பது..

 தவறுதலாக ஒரு freezer அறையில்   சிறைப்பட்டு விடும் ஒரு யுவதி எப்படி மைனஸ் 17 டிக்ரி குளிரில் 5 மணி நேரம் போராடி உயிருடன் எப்படி மீண்டு வருகிறாள் என்பதை மிக அற்புதமாக தந்தை மகள் பாசம், ஒரு புன்னகை எப்படி பெயர் தெரியாத  மனிதர்களை வெல்கிறது ..என்றெல்லாம் கலந்து கட்டி மிக நேர்த்தியாக சொல்லி செல்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக குளிரேறும் போது , எப்போதும் புன்னகை பூத்துக் குலுங்கும் கதை நாயகியின் முகச் சதைகளில் ஏற்படும் மாற்றம், அதனை சமாளிக்க அவள் இருக்கும் பொருட்கள் கொண்டு தனது நர்சிங் அறிவு மூலம் உயிருடன் இருக்க போராடும் உத்திகள், வெளியில் தந்தை படும் பாடுகள், அதிகார வர்க்க அசிரத்தை, நட்பின் பதைப்பு. என காட்சிக்கு காட்சி மிரட்டி உள்ளார் அறிமுக இயக்குனர்.

இந்த திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள். சிறந்த அறிமுக இயக்குனர் விருது. மற்றும் சிறந்த மேக் அப் அமைப்பிற்கான விருது.\\

இரண்டுமே இந்த திரைப்படத்திற்கு வெகு பொருத்தமான விருதுகள்.

இயக்குனர்   Mathukutty Xavier மற்றும் கதை நாயகி  Anna Ben   இருவரும் இன்னும் மனதில் நிற்கிறார்கள். 

Comments