AATHIF ASLAM, THE MESMERISING PAKISTANI SINGER...

 



நன்றி:

அற்புதமான இந்த கவாலிப் பாடல் எழுதிய , பிரிவினைக்குப் பின் அலகாபாத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்த உருதுக் கவி பூர்ணம் அலகாபாதிக்கும்..

முதலில் இசைத்துப் பாடிஇருந்த பாகிஸ்தான் பாடகர்களான குலாம் பரீத் சபிரி  மற்றும் மக்பூல் அஹமத் சபரிக்கும்..

பாகிஸ்தான் கோக் ஸ்டுடியோவிற்காக இந்தப் பாடலை மறுபடி தனது மயக்கும் குரலில் பாடி வசியப்படுத்திவரும் ஆதிப் அஸ்லாமிற்கும்...

-தமிழில் இளங்கோவன் தாயுமானவர்  

தாஜ் தாரே ஹரம்....

அமைதியும் நிறைவும் என் விதி என எழுது...

அலை பாயும் என் கலம் அமிழ்ந்திடா தெழுது..

சுவனம் எனையே  ஏற்றிடாப் போதும்

விதி எல்லாம் விதித்த வேந்தே நீயும் -

மதினம் தான் இனி என்  விதி என்றே எழுது...

புனித இல்லின் உள்ளுறை   வேந்தே.. நின் கருணைப் பார்வை அருளணும் வேந்தே..

 

வறியோர் தமக்கே ஒளியும்  கூட்டும்

நின் கருணைப் பார்வை வழியும் காட்டும்..

வறியோர் காக்கும் ரட்ச உந்தன்

வாசல் மிதித்தும் வெறுமனே திரும்பின்

என்ன சொல்லும் இக் ககனம் தான்?

என்ன சொல்லும் இக் ககனம் தான்?     

உறவெனச் சொல்ல ஓருயிர் இல்லை

ஊன்றி அடிக்கும் சுற்றிலும் தொல்லை

உன் வாசல் வந்தே  நீதி இறைஞ்சுவோம்

உன்  பார்வை விழவே  தினமும் கெஞ்சுவோம்

உன் கருணை எம் மேல்  விழவில்லை எனிலோ

உனது  நாமம் பாராயணமாய்

உன் வாசல் சாய்ந்தே எம்முயிர் மாய்ப்போம்..

புனித இல்லின் உள்ளுறை   வேந்தே.. புனித இல்லின் உள்ளுறை   வேந்தே..

 

என் சொல நானும் என் அரபிளங் கோவே

அறிவாய் நீயே என் மனம் தானே..

அறியா தவனெனும் பெயரினைச் சூடிய

பெருநபியே உன் பிரிவி னையே

 தாங்கா தெமது தூங்கா  இரவு..

அனைத்து நினைவும் உன்  பிரேமையில் கரைய

எத்தனை காலம் நான் பித்தனாய் திரிய...

ஓரப் பார்வை ஒன்றென் பக்கம்

 என்றாவது வீசு..என்றாவது வீசு..

ஓதும் என் சொல்லில் ஒன்றாவது -

செவி சேர் நீயும் என்றாவது..

 

உனது வாசல் வந்து திரும்பும்

எவரும் வெறுமே திரும்பிய தில்லை..

தேடி வந்தது அடைந்த நிறைவில்

திரும்புவர் அவரும்.. திரும்புவர் அவரும்..

வாடு முன் பிரியனின் பக்கம் ஒரு பார்வை

வீசிட வேண்டும் ஒ என் எஜமானே...

தவறிடில் சிதைந்திடும்.. இருப்பெல்லாம் குலைந்திடும்..

புனித இல்லின் உள்ளுறை   வேந்தே.. புனித இல்லின் உள்ளுறை   வேந்தே..

அண்ணலின் ஆப்தர்களே வாருங்கள்

 மதினம் செல்வோம்.

மதினம் செல்வோம்,.

 மதினம் செல்வோம்.

இந்த மாதமே செல்வோம்.

 மதினம் செல்வோம்.

இந்த மாதமே செல்வோம்..

அவனது கீர்த்தி அவனது அற்புதம்

தக்கத் தகாயமாய் அவனது வெளிப்பாடு

நிரம்பிய பூமி  மதினத்து பூமி ..

தீவிரமான தீரா விழைவெலாம்

திகட்டத்  திகட்டத்  தீர்ந்திடும் பூமி..

வாழ்தலின் துயரோ  சாதலின் பயமோ

இல்லா பூமி மதினத்து பூமி..

அன்பால் தொழுவோம் மதினத்தில் தொழுவோம்

அவனை அடைய மதினம் காட்டும்

தெளிவாய் நேராய் சீரிய பாதை..

மதினம் செல்வோம். இந்த மாதமே செல்வோம்.

 மதினம் செல்வோம். இந்த மாதமே செல்வோம்..

கவுசரின் அமிர்தம் பருகிடச் செல்வோம்..

நினைவேற்றுங்கள்..

ஒரு முறை அவன்தான் பார்த்தால் போதும்

காலிக் குடுவையிலும் மதுரசம் நிரம்பிடும்..

புனித இல்லின் உள்ளுறை   வேந்தே.. புனித இல்லின் உள்ளுறை   வேந்தே

அடிக்கும் புயலோ அச்சம் கொடுக்கும்

வெடிக்கும் மின்னல் பயத்தைக் கூட்டும்

எங்கள் துயரம் கடுமை கொடுமை

எங்கு செல்வோம் எம் எஜமானே..

எப்படி உள்ளோம் என்றே நீயும்

பார்க்க மறந்தால் பதைத்து இருப்போம்

பரிதவிப்பில் இறப்போம் ஓ எங்கள் வேந்தே..

 புனித இல்லின் உள்ளுறை   வேந்தே.. புனித இல்லின் உள்ளுறை   வேந்தே

முஸ்தபாவே.. முஜ்தபாவே.. இரக்கம் காட்டு..

உதவியற்றோர் நிர்க்கதியோர் பிடித்துக் கொள்ளும் கரம் நீ..

பாவி நானும் சோம்பி நிற்கிறேன்.

நட்போ உறவோ விலகிக் கிடக்கிறேன்.

நீதான் என்னை இரட்சிக்க வேண்டும்.

சுற்றிலும் சுகந்தம் பரப்பும் கஸ்தூரித் தருவே

அதி காலை மணமே.. எங்கள் அவுஷதமே..

கர்த்தனின் சுவாசமே.. கவலைகள் தீர்ப்பவனே..புனிதத் தூதனே..

 

சுழலும் சுகந்தத்தின் பெயரால் கேட்கிறேன்.

காலை இளம் காற்றே –

புனிதனின் பூமிக்கு ஒரு நாள் சென்றால்

மகத்தான தூதன் துயிலும்

மண்ணறைக்கு என் வணக்கம் சொல்லு.

 

புனித இல்லின் உள்ளுறை   வேந்தே.. நின் கருணைப் பார்வை அருளணும் வேந்தே..

 

வறியோர் தமக்கே ஒளியும்  கூட்டும்

நின் கருணைப் பார்வை வழியும் காட்டும்..

வறியோர் காக்கும் ரட்ச உந்தன்

வாசல் மிதித்தும் வெறுமனே திரும்பின்

என்ன சொல்லும் இக் ககனம் தான்?

புனித இல்லின் உள்ளுறை   வேந்தே.. நின் கருணைப் பார்வை அருளணும் வேந்தே..

_______________________________________

Comments