தோழர் முருகன்..





அது 1979ம் வருடம் அல்லது 1980ம் வருடம் என்று நினைவு.

மதுரை மேங்காட்டுப் பொட்டல் அருகில் இருக்கும் குஜராத்தி சமாஜத்தில் நடந்த சயின்ஸ் போரம் கூட்டத்தில் வெங்கடேஷ் அத்ரேயா பேசிக் கொண்டிருக்கிறார்.

 முற்போக்கு நண்பர் சிரிதருடன் அமர்ந்து வகுப்புகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போது அந்த நபர் என் கவனத்தைக் கவர்கிறார். ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவ்வபோது வெளியில் செல்வதும்,  வந்து உட்கார்ந்து விட்டால் வெறியுடன் குறிப்பு எடுப்பதும் என அந்த வெடு வெடு என்றிருந்த தோழர் எங்கள் கவனம் கவர லேசாக விசாரிக்கிறோம்.

 ஆரப்பாளையம் தோழர் என்று மட்டும் அறிகிறோம். அடுத்து அடுத்து பல கூட்டங்களில் அவர் தட்டுப்பட்டாலும் ஏனோ அவருடன் அறிமுகம் ஆகாமலே போய் விடுகிறது.

நான் பின் டில்லி சென்று, திருச்சி வந்து மதுரை அஞ்சல் மண்டல கூடுதல் தலைவர் அலுவலகத்தில் 1983ம் வருடம் மே மாதம் வந்து விழுகிறேன். அப்போது அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு நிர்வாக அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில், பிபி குளத்தில் இருந்தது. இப்போதும் ஒரே கட்டிடம்தான், ஆனால் பின்னர் இடையில் சுவர் வைத்து மறைத்துப் பிரித்து விட்டார்கள்.

எங்கள் அனைவருக்கும் கேண்டீன் தொலை தொடர்பு அலுவலகத்தில்தான் இருந்தது. எங்கள் அலுவலக நண்பர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஒன்றாகத்தான் தேநீர் அருந்தச் செல்வது என்பதை திருச்சியில் இருந்தே பழக்கமாக்கி இருந்தோம்.

.எனது சீனியரும் கிருஷ்ணகுமாரின் ஆத்மார்த்த தோழனும் சந்தக்கவியுமான உஸ்மான் அங்கு பணிபுரிவது கண்டு பெரும் மகிழ்வுற்ற நான் எங்கள் குழுவிற்கு அவரை அறிமுகம் செய்ய பதிலுக்கு  உதுமான் என்னை அவரது பகுதியில் இருந்த சில முக்கியமான தோழர்களிடம் அறிமுகம் செய்ய அழைத்து சென்றார். ராமனுஜம்,சூரியன், சந்திரகாந்தன், என்று வந்து கொண்டே இருக்கும் போது திடுமென தென்படுகிறார் குஜராத்தி சமாஜத்தில் என்னைக் கவர்ந்து பின் அடுத்து அடுத்து சந்தித்தும் அறிமுகம் ஆகாமலே போன அந்த ஒடிசலான தோழர்!

உஸ்மான் அறிமுகம் செய்கிறார்.

“இளங்கோ , இவர்தான்  முருகன். தோழர் முருகன்.”

அதன் பிறகு முருகன் மிக நெருக்கமான தோழர் ஆக எங்கள் அனைவருக்குமே ஆகிப் போனார். அஞ்சல் துறையும் தொலை தொடர்பு நண்பர்களும் சேர்ந்து மிரட்டிய காலம் அது. அரசின் பிரித்து ஆளும் சூழ்ச்சி பலித்து அஞ்சல்துறை,  தொலை தொடர்புதுறை  என இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னரும் எங்கள் அனைவரின் தோழமை வலுவாக இருக்க முருகன் போன்றவர்கள் பெரிதும் காரணமாக இருந்தார்கள்.

மார்க்சிய நூல்களை நேசித்து நேசித்து வாசித்தவர் முருகன். எல்லாக் கூட்டங்களிலும் அவர் தவறாமல் இருப்பார். என் போன்றவர்களின் டிமிக்கிகளை அவர் பொறுத்துக் கொள்ளவே மாட்டார். முகத்துக்கு நேரே உரிமையுடன் கண்டித்து  விடுவார். தோழமை நட்பாகி நெருக்கமாகி ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அடுத்து இருந்த அவரது வீட்டில் உட்கார்ந்து டி.வி. பார்த்தவாறே அவரது அம்மா கொண்டு வரும் தின் பண்டங்களை காலி செய்யும் அளவு வளர்ந்து கொண்டே போனது.

இடையில் நான் பணி மாறுதலில் சென்னை சென்று திரும்பி வந்ததும், பின் பல்வேறு தொழிற்சங்க நிலைப்பாடுகளில் எங்களுக்குள் லேசான விலகல் வந்ததும் என காலம் வேகமெடுத்து ஓடி விட்டது.

நேற்று நான் பங்களூரில் இருந்த சமயம் தோழர் சுந்தரமூர்த்தி அழைத்து முருகன் காலமான விஷயம் சொன்னார்.  

அஞ்சல் மூன்று சங்கம் நிறைவேறாத நெடு நாள் கோரிக்கைகளை முன் வைத்து ஒரு போராட்ட அழைப்பு விடுக்கிறது. சுந்தரமூர்த்தி மாவட்ட செயலர். மண்டல தலைவர் அலுவலகத்தில் இருக்கும் நான் , அஞ்சல் தலைவரின் கவனத்திற்கு இதனை எடுத்து சென்று அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வைக்கிறேன். அஞ்சல் முரசு எனும் பத்திரிக்கை ஆசிரியர் ஆக அஞ்சல் தலைவருடன் எனக்கு இருந்த இலக்கிய நெருக்கத்தை , நான் நேசிக்கும் தொழிற்சங்க பிரசினைகளை சுமுகமாக தீர்க்க நான் எடுத்த முயற்சி அது.

அடுத்த நாள் இதனை அறிய வரும் முருகன் கடும் சினம் கொள்கிறார். ஒரு தொழிற்சங்கம் செய்ய வேண்டிய வேலையை தனி மனித சிபாரிசுகள் மூலம் எளிதாக்கி விடுவது என்பது போராடும் உணர்வை மழுங்கடிக்க  அரசு கையாளும் உத்தி என்றும் அதற்கு நான் ஒரு கருவியாகி விட்டேன் என்றும் கோபம் கொள்கிறார். .  

. “ நாம் அனைவரும் படித்த அந்தப் பள்ளியில் மாணவர் தர வரிசையில் வேறுபாடு இருக்கலாம். சிலர் மெத்தப் படித்த தத்துவார்த்திகளாய், சிலர் படிக்காமல் ஆனால் கொள்கைக்காக உயிர் கொடுக்கும் உருக்கு மனத்தினராய், சிலர் தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்கு அளிப்பவர்களாய், சிலர் ஜிகினா மினுக்கித் தத்துவ வாதிகளாய், என்று தர வரிசையில்  வேறுபட்டிருக்கலாம்.   ஆனால் எந்த மாணவனையும் நமது பள்ளி அரசு சார் தரகனாக வார்த்ததில்லை. அப்படி இருக்கும் ஒருவன் நமது பள்ளி மாணவனாக இருக்க முடியாது. நானும் அப்படி ஒரு அரசு சார் தரகன் அல்லன் என்பதும் சுந்தரமூர்த்தியும்  அப்படி சிபாரிசு செய்ய சொல்பவர் அல்லர் ” என்பதனையும் முருகனிடம் சொல்ல வேண்டும் என்று வெகு நாள் நினைத்திருந்தேன்.

பணி மாறுதல், இட மாறுதல் என்று காலம் வேகமாகக் கரைந்து போனது. இதோ முருகனும் மறைந்தே போய் விட்டார்.

சென்று வா என் தோழனே.

சமரசம் செய்யா உன் போன்றவர்கள் நட்பு எனக்கு கிடைத்தது என் பேறு. தோழி மகேஸ்வரிக்கும் குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்..

 

 

  


Comments

  1. தம்பி ! உனது உள்ள உணர்வுகளை கொட்டி விட்டாய் ! மிக அருமை !இதை படிக்கும்போது மதுரையில் நாம் பணி புரிந்த நாட்கள் மனதில் நிழல் ஆடுகிறது ! வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

    ReplyDelete
  2. தம்பி ! உனது உள்ள உணர்வுகளை கொட்டி விட்டாய் ! மிக அருமை !இதை படிக்கும்போது மதுரையில் நாம் பணி புரிந்த நாட்கள் மனதில் நிழல் ஆடுகிறது ! வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. அண்ணே .. நினைவில் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி. அஞ்சல் முரசுக்கு பெயர் வைத்ததே நீங்கள்தானே.

      Delete

Post a Comment