interesting examples of spoonerism..
Reverend William Archebald spooner
சில சமயம் நாம் வேகமாக பேசும்போது , நமது மூளையின் வேகத்தை விட வாய் வேகமாகச் செயல்பட்டால் சொற்கள் அல்லது எழுத்துக்கள் இடம் மாறி வேடிக்கை நிகழ்வதுண்டு.
எங்கள் வீட்டுப் பிள்ளை என்ற எம்.ஜி.ஆர். படத்தில் நாகேஷ் இப்படி அடிக்கடி தடுமாறும் பாத்திரத்தில் விளாசியிருப்பார். தனது காதலியிடம் உங்க அப்பா மலையப்பன் என்பதற்கு பதிலாக உங்க ஜிப்பா கொலையப்பன் என்பார்.
நாங்கள் ஒரு தடவை சாப்பிடப் போகும்போது மட்டன் பிரியாணி ,முட்டை குருமா என்பதற்கு பதிலாக முட்டன் பிரியாணி மட்டை குருமா என்று சொன்ன கூத்து நிகழ்ந்தது.
பஜ்ஜி வடை இருக்கா என்பதற்கு பதிலாக ஒருத்தர் வஜ்ஜி படை இருக்கா என்று கேட்டதாக ஒரு தகவல்.
தருமி என்பவர் அவரது பிளாக்கில் ஒரு ஆசிரியரின் பெயரை குமாரசாமி என்பதற்கு பதிலாக சுமாரா காமி என்று சொல்லிச் சிரித்த கதையினை பகிர்ந்துள்ளார்.
திரு .வே, நடனசபாபதி தனது பிளாக்கில் இரண்டு சுவராஸ்யமான செய்திகளை சொல்லியுள்ளார். நன்றியுடன் அவரது வலைப்பூவில் இருந்து இதனைப் பகிர்கிறேன்.
அடுத்து நடந்தது இறுதியாண்டு படிக்கும்போது. இறுதி ஆண்டில் வேளாண் விரிவாக்க (Agricultural Extension) பாடத் திட்டத்தின் படி, முதல் ஆறு மாதங்கள் கட்டாயம் அருகில் உள்ள சிற்றூர்களுக்கு சென்று அங்குள்ள உழவர்களின் வயல்களில் Result Demonstration எனப்படும் செயல்முறை விளக்கம் நடத்தி பயிற்சி பெறவேண்டும்.
அதனால் தினம் காலையில் கல்லூரி பேருந்தில் அழைத்து சென்று, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஊர்களில் விட்டு செல்வார்கள். மதியம் வரை அங்கிருந்து, செய்முறை பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட வயல்களில் புதிய சாகுபடி முறைகளை கையாள்வது பற்றி அங்குள்ள வேளாண் பெருமக்களுக்கு எடுத்து சொல்லி, அதை அவர்கள் பின்பற்ற உதவ வேண்டும்.
ஒவ்வொரு மாணவனும் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஊரில் Urea என்கிற தழைச்சத்து உரம், Super Phosphate என்கிற மணிச்சத்து உரம், Muriate of Potash என்கிற சாம்பல் சத்து உரம் ஆகிய உரங்களில் ஏதேனும் ஒன்றை, செயல்முறை விளக்கத்திற்காக (Demonstration) எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் சொல்லியிருந்தார் எங்களது வேளாண் விரிவாக்க (Agricultural Extension) பேராசிரியர்.
முதல் நாள் பயிற்சிக்கு கிளம்புமுன் எங்களது பேராசிரியர். ஒவ்வொரு மாணவனும் எழுந்து, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊரின் பெயரையும், அங்கு செயல்முறை விளக்கத்திற்கு எடுத்துக்கொண்ட உரத்தின் பெயரையும் சொல்லச் சொன்னார்.
ஒவ்வொருவரும் எழுந்து நின்று விவரங்களை சொன்னோம். என் முறை வந்தபோது, எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஊர் ஓரத்தூர் அருகே இருந்த பரதூர் சாவடி என்றும், செயல் விளக்கம் தர இருக்கும் உரம் Urea என்றும் சொன்னேன்.
எனது வகுப்பு நண்பர் ஒருவர், அவர் முறை வந்தபோது எழுந்து வேகமாக Muriate நல்லூரில், முடிகொண்ட Potash என்று சொல்லி அமர்ந்துவிட்டார்.
அதாவது முடிகொண்டநல்லூர் என்ற ஊரில் Muriate of Potash என்று சொல்வதற்கு பதிலாக!
தனது ஆயக்குடி அம்மாயி எப்போதும் மணலு என்று சொல்வதற்குப் பதிலாக மலனு என்றுதான் சொல்லும் என்கிறான் மணி.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத் தலைவராக இருந்த Reverend William Archebald spooner இது போல் அடிக்கடி சொல்லாடும் போது தள்ளாடுவாராம். Pardon me madam என்று சொல்ல வந்து mardon be padam என்று சொல்லி விடுவாராம்.
அவரின் பெயரால் இந்த "ஒலிக் குழப்பச் சொற் குளறுபடிக்கு" ஆங்கிலத்தில் spoonerism என்ற பதம் உருவாக்கப்பட்டது.
அடுத்தும் இதனைத் தொடர்வோம்.

Comments
Post a Comment