காண தொலை- 28
நாளைக்கு ஓணம். கடவுளின் தேசத்தில் , கடவுளின் கால்பெருவிரலில் அழுத்தப்பட்டு உள் அமிழ்ந்த மாபலி மன்னன் தனக்குக் கொடுக்கப்பட்ட வரத்தின் மூலம் , வருடம் ஒருமுறை வந்து தனது பிரஜைகளைக் காண வரும் தினம். இன்னும் ஒரு ஒரு வாரம் அவரது ஆய்வு அங்கு இருக்கும். ஊரே விழாக்கோலம் கொண்டிருக்கும். இயன்றவர் இயலாதவர் என்ற பேதமின்றி தங்கள் அரசனை வரவேற்க எல்லாப் பிரஜைகளும் அமர்க்களப்படுத்திக் கொண்டிருப்பார்கள். எனவே இந்த வாரம் முழுவதும் காணத் தொலைந்த இடம் கடவுளின் தேசம் மட்டுமே..
இன்னும் வணிகமயமாகாத கன்னி நிலம்.
எங்கும் பச்சை போர்த்திய மலைகள், பைன் மரக் காடுகள், மேடோஸ், தனித்திருக்க,
தவமிருக்க, மலைகளில் சாகசப் பயணம் நடக்க, ஆன்மிக விசாரம் செய்ய,புரட்சிகர
செயல்பாடுகளின் போது விரட்டல்களை மீறி, தப்பித்து வந்து ஒளிந்து கொள்ள, வாகான மண்
வாகமன்.
வாகமன் அழகிய மூன்று மலைத்தொடர்கள் சூழ
அமைந்துள்ளது. மூன்று மலைகளும் மூன்று நம்பிக்கை மலைகள். முதல் மலை ஒரு சூபி
துறவியின் தர்கா அமைந்துள்ள தங்கள் பாறை. சுமார் 800 வருடங்கள் முன்பு இங்கு வந்த
சூபி துறவியான ஹஸ்ரத் ஷேக் பைருதீன் பாபா தனது முப்பதுக்கும் மேற்பட்ட சீடர்களுடன்
இங்குதான் தங்கி இருந்தாராம். எல்லா ஊரிலும் சொல்லப்படும் மிகை கதை போல் இங்கும்
ஒரு கதை சொல்லபடுகிறது. அந்த பெரிய குண்டு பாறையில்தான் ஹஸ்ரத் பாக்கு இடித்துக்
கொள்வாராம். அந்தப் பாறை அடியில் இருந்துதான் இப்போதும் தங்கல்கள் பாத்தியா ஓதிக்
கொண்டுள்ளார்கள். கோலாகலமேடு எனப்படும்
இங்கு நடக்கும் வருடாந்திர உர்ஸ் திருவிழாவில் வழங்கப்படும் சக்கரை கஞ்சி அவ்வளவு
ருசியாக இருக்குமாம்.
1950 ம் வருடத்தில் திருச்சிராப்பள்ளி
அருகில்,, காவிரிக்கரையில் இந்திய ஆன்மிக
மரபுப்படி ஒரு ஆசிரமம் அமைக்கப்பட்டது. அதனை நிறுவியவர்கள் பிரான்ஸ் மிஷனரியான
அப்பே ஜே. மொஞ்சனின் ( சுவாமி பரம அரூபி அனந்தா) மற்றும் பெனெடிக் சபை துறவியான ஹெச்ச். லே. சாவ (சுவாமி
அபிசிக்தானந்தா) . சாந்தி வனம் என்றும் சச்சிதானந்த ஆஸ்ரம் என்று அழைக்கப்பட்ட அந்த ஆசிரமத்தில் பிரதர்
பிரான்சிஸ் வெகு காலம் பயின்று அதன் தாக்கத்தில் இந்திய ஆன்மிக மரபில் ஒரு
கிறிஸ்துவ ஆஸ்ரமம் கேரளாவில் ஆரம்பித்தார். அதுவே குருசிமலை ஆஸ்ரமம். ஓம் சிரி
யேசு பகவக்தேய நமஹா என்று ஒலிக்கும் ஆனந்தமய வாக்கு தவிர்த்து முற்றிலும் நிசப்தமே
அங்கு இறை வழிபாடாக இருக்கிறது. அங்கிருப்பவர்கள் 16 சன்யாசிகள் 1 பிரமச்சாரி, 3
சாதகர்கள்.
அப்புறம் மூணாவது மலை நம்ம முருகன்
மலை. ஆயிரம் வருடம் பழமையான ஆலயம் ஒன்று இங்கு இருக்கிறது. தமிழ்க் கடவுள் முருகனை
வழிபட பெருமளவில் மக்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆசி தர அழகு கூடிக்
கிடக்கிறது வாகமன். வாகமனை விடவும் அழகு வாகமனுக்குப் போகும் பாதை. சுற்றிலும் சுற்றிலும் தேயிலைத்
தோட்டம். திடுமென தலைக்கு மேலே பறக்கும் பாரா கிளைடர்கள்.. ரீங்கரிக்கும் பல்வேறு
உயிரினங்கள்..
வாகமன் போய் அடைந்ததும் நம்மை வசீகரிப்பது
அங்கிருக்கும் மொட்டைக்குன்னுகள். Barren meadows.. பைன் காடுகள்.. லேக்.. சிறு சிறு
நீர்வீழ்ச்சிகள்..பெரிய பெரிய அடர்
வனங்கள்.. வன மியுசியம்..














Comments
Post a Comment