காண தொலை-27

 வர்கலா..

 


கடவுளின் தேசத்தில் எங்கு திரும்பினாலும் வனப்பே  கொட்டிக் கிடக்கிறது. அவர்கள் பசுமையை நேசிக்கிறார்கள். சுற்றுசூழலை உயிருக்கு நிகராக மதிக்கிறார்கள். அதனை மாசுபடுத்த முயலும் எவரையும் மூர்க்கமாக வெறுக்கிறார்கள். நீண்ட நீர்நிலைகளில் ,சுற்றிலும் பச்சை பூசிய வெளிகளில், அவர்கள் பாங்குடன் உச்சரிக்கும் மந்திர மொழியினில், உழைக்கத்  தயங்காத உருக்கு மனங்களில், பாரம்பரியம் காக்கும் பண்பில், கவின் மிகு கன்னியர் கூட்டத்தில், சட்டம் மதித்து சாலையில் செல்லும் ஒழுங்கில்,எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அலட்டிக்கொள்ளாத எளிமையில், எவருக்கும் செயற்கை வணக்கம் வைக்காத நேர்மைத் திமிரில், பல்வேறு பண்டிகைகளில் ,  கடவுள் வெகு சிரத்தையுடன் தங்கி இருக்கும் தேசமிது.



அதிலும் வர்கலா..

மூன்று மறக்க முடியா இடங்கள்  அங்கே உள்ளது.

முதலாம் இடம்.அரசு ஆயுர்வேத வைத்தியமனை வர்க்கலா..

 அரபிக் கடலோரம் இயற்கை சமைத்த இரண்டு clilff களுக்கு இடையில் அமைந்த பிரம்மாண்டமான ஹெலி பேட்  அருகில் சுற்றிலும் கடல் பேச , அழகுமிகு பின்னணியில் இந்த அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு காணப்படும் சுத்தம் பெங்களூரின்  பிரபல அரசு மருத்துவமனையான நிம்ஹான்சினை விடவும் வெகு பிரசித்தமானது. நிர்வாகத்தின் மேலாண்மை, திட்டமிடலில் தீர்க்கம், அமுல்படுத்துவதில் ஒத்திசைவு என இந்த  ஆயுர்வேத மருத்துவமனை ஆச்சர்யப்படுத்துகிறது. பெரிய பெரிய சிகிச்சைகள் எல்லாம் இங்கே அருமையாக மலிவாக செய்கிறார்கள். பத்து நாள் மொத்தமாக தங்கி எல்லா இயற்கை வைத்தியமும் செய்ய ஒருவருக்கு எட்டாயிரம் ரூபா அளவில்தான் செலவாகிறது. இதே பக்கத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத சாலைகளில் ஒரு லட்சம் வரை வசூலிக்கிறார்கள்!  கீழே கடலில் விண்ட்சர்பர்ஸ். மிகப் புனிதமெனக் கருதப்படும் பாபநாசம் கடலில் புன்னியதானங்கள், கடல் பார்த்த உணவகங்களில் அற்புதமான மலையாள உணவு.. அரசு நிறுவனங்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படும்போது எவ்வளவு அற்புதங்கள் நிகழும் என்பதிற்கு உதாரணமான வைத்தியசாலை இது. அருகில் இருக்கும் அரசு அக்வரியத்தில் ஜெல்லி மீன்களும் ராட்சச சுறாக்களும். எலெக்ட்ரிக் ஈல்களும் அதிசய ஆமைகளும், கொடிய கடல் பாம்புகளும்..






இரண்டாம் இடம்  காயலோரத்தில் இருந்து பொன்னும்துருத்து தீவிற்கான படகுப்பயணம்.:

காயலோர உணவகத்தில் மிக அபூர்வமான மதிய உணவு.. கடல் நத்தைகளை அள்ளி சுடச் சுட வறுத்து, செம்மீன்களை முழுதாக இலை நிரப்பி, ராட்டுகளைப் பொரித்து, இறால் புட்டு வைத்து, கொஞ்சமாய் சோறிட்டு சுற்றி பல வகை கடல் வஸ்துக்களை உள் தள்ள வைத்து, மிரட்டலான விருந்தோம்பல். முடித்ததும் அப்படியே அந்த ஓட்டல் ஓனர் அவரது படகில் நம்மை ஏற்றிக்கொண்டு  அந்த நன்னீர் ஏரியில் ஐந்து  கி.மி. தூரம்  பயணித்து நடுவில் உள்ள அந்த தீவினை  அடைகிறார்.





பொன்னும்துருத்து ஒரு குட்டி தீவு. இயற்கை பாழ்படாமல் மனித வாடை  படாமல் பல்லாண்டுகளாக தனித்திருக்கும் தீவு. அநேக வெளிநாட்டினர் தட்டுப்படுகிறார்கள்.  மூங்கில் காடு. அரிய மூலிகைகள். உள்ளே நூற்றாண்டுகள் பழமையான ஒரு சிவன் கோவில். பழைய கிணறு ஒன்று நல்ல தண்ணீர் வளத்துடன். விசுவமிதிரர் இங்கே மேனகையை சந்தித்தது பற்றி ஒரு உள்ளூர் கதை. மறையும் சூரியன் ஏரியில் பாய்ச்சும் கிரண விளையாட்டு.. மயக்கும் மாலை. திரும்புகையில் மழை.. பொன்னும் துருத்து ..  தங்கமாய் மின்னுகிறது மாலை சூர்ய ஒளியில்..

மூன்றாம் இடம் மிக மிக முக்கியமானது.-  சிவகிரி நாராயணகுரு மடம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் திருவனந்தபுரம் அருகில் தோன்றியவர் நாராயண குரு. ஈழவ குலத்தில் பிறந்த இவர் தனது இருபத்தொன்றாம் வயதில் வேதங்கள், உபநிஷத்துகள், ஸமஸ்கிருத தர்க்க சாஸ்திர  இலக்கியங்களைக் கற்று தனது கிராமத்தில் ஒரு பள்ளி ஆரம்பிக்கிறார். நானு ஆசான் என்று அனைவராலும் பிரியமாக அழைக்கப்பட்ட இவர் கேரளாவிலும் தமிழகத்திலும் அதிக தூரம் பயணித்தவர்.

சமுக மத  சிர்த்திருத்தவாதியான சட்டம்பி சுவாமிகள் மூலமாக தமிழகத்தில்இருந்த அய்யாவு சுவாமிகளை சந்தித்து யோகக் கலை மற்றும் தியானக் கலைகள் கற்றுக்கொள்கிறார். தமிழகம் முழுவதும் சுற்றித் திரியும் அவர் மருத்துவமலையில் உள்ள பிள்ளத்தடம் குகையில் ஒரு ஆசிரமம் அமைத்து அடுத்த ஐந்து வருடங்கள் தீவிர யோகப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறார்.

அருவிபுரம் எனுமிடத்தில் இவர் பிரதிஷ்டை செய்யும் சிவ லிங்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து  பிராமண சனதானிகள்  இவரின் தகுதிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள், அவர்களுக்கு அவர் அப்போது அளித்த பதிலான “ இந்த சிவன் பிராமண சிவன் அல்லன். இவன் ஈழவ சிவன்” பல காலத்திற்கு ஜாதியத்திற்கு எதிரான பிரபல வாசகமாக மேற்கோள் காட்டப்பட்டது.

1904 ம் வருடம் வர்கலா அருகில் உள்ள சிவகிரியில் சமூகத்தில் மிகவும் கீழ்நிலையில் இருக்கும் குழந்தைகளுக்காக ஜாதி மத பேதமற்ற ஒரு இலவச பள்ளியினை ஆரம்பிக்கிறார் நானா ஆசான். தவிரவும் சிறிலங்கா உட்பட பல இடங்களில்  ஆலயங்களும் அமைக்கிறார்.

அந்த காலகட்டத்தில் கேரளத்தில் ஜாதியம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. பழங்குடியினர், ஈழவர்கள், பறையர்கள், புலையர்கள் என்று மக்களை சாதிவாரியாக பிரித்து தீண்டாமை கடுமையாக கடைபிடிக்கப்பட்ட காலமது. இந்தப் பின்னணியில்தான் 1888ம் வருடத்தில் நானா ஆசான் அருவிக்கரையில் சிவாலயத்தை பிரதிஷ்டை செய்திருந்தார். அது மட்டுமன்றி தமிழகம் உட்பட பல இடங்களில் 45 க்கும் மேற்பட்ட சிவாலயங்களை அவர் நிறுவி பிரதிஸ்டை  செய்தார்.




திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த வைக்கத்தினை நோக்கி செல்லும் சாலையில் நுழைய ஆசானுக்கு ஒரு உயர் ஜாதி பிராமணன் அனுமதி  மறுத்த நிகழ்வு , அனைவருக்கும் கோவிலில் நுழைய உரிமை கேட்ட பிரபல வைக்கம் சத்யாகிரகமாக வெடித்தது.

ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே தேவன் என்ற அவரது முழக்கம் கேரளத்தை முழுமையாக ஈர்த்தது. திருவண்ணமலையில் ரமண மகரிஷி அவரை அவரது ஆசிரமத்தில் பிரதான விருந்தனராக அழைத்து சத்சங்கம் நடத்தியதும், சிவகிரியில் இருந்த ஆசானின் ஆசிரமத்திற்கு தாகூரும், மகாத்மாகாந்தியும் சென்று கலந்து கொண்டதும் முக்கியமானது.  திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்த நாராயண குரு, நாற்பதிற்கும் மேற்பட்ட ஆன்மிக சமுக நூல்களை மலையாளத்திலும்  சமஸ்கிருதத்திலும்  தமிழிலும் எழுதியுள்ளார். இலக்கியத்தில் பெரிதும் நாட்டம் கொண்ட ஆசான் சமூக நீதிக்கான சண்டமாருதமாகத் திகழ்ந்தார் . எளியவர்களுக்கு கோவில் திறக்கவில்லை என்றால் அனுமதிக்கப் போராடி வென்றது மட்டுமன்றி தனிக் கோவில்களே அவர்களுக்காக அவர் நிர்மாணம் செய்தார். ஆங்கில அறிவு அவர்களுக்கு வேண்டும் என்று பலரை லண்டன் அனுப்பி படிக்க வைத்தார். சமரசமில்லா சமரனாகவும், ஆன்மிக ஆசானாகவும் , எளியோரின் போர்க்குரலாகவும் ஒலித்த நாராயணககுரு அடங்கியுள்ள இடம் வர்கலா சிவகிரி.

28 august.  நாராயண குருவின் உதய தினம்  இன்று.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Comments