காண தொலை 17

 


Lal Bahadur Shastri Academy of Administrators , Mussorie

 

எங்கள் மூத்த அண்ணனுக்கு ஒரு பெரும் கனவு இருந்தது. சிவில் செர்விசில் வென்று ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாகியாக வேண்டும் என்பதே அது. அதை நோக்கிக் கடுமையாக உழைத்தும்,  அதற்கான ஆகிருதி அனைத்தும் அவருக்கு இருந்தும், பல் வேறு காரணங்களால் அது முடியாமல் போனது.  ஆனாலும்,  சிவில் சர்வீஸ் படிப்பவர்களுக்குப் போதிக்கும் பேராசானாக அவர் பின்நாளில் வடிவெடுத்தார். அவரிடம் படித்து கலெக்டர்கள் ஆகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் ஆனவர்கள் ஏராளம் பேர்.

தம்பிகளான  நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு டிசைனாக பல திசைகளில் மாறிப் போனாலும் . அண்ணன்  கலெக்டர் ஆகி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு ஆதங்கம் எங்கள் எல்லோருக்குமே இருந்தது.

குளிர் நகரான முசோரிக்கும், தேஹ்ராடூனுக்கும்  ஒரு பதினைந்து வருடம் முன்பு பயணித்தபோது எனது குழந்தைகளைஅவசியம் இரண்டு இடங்களுக்கு கூட்டிச் செல்ல  எண்ணியிருந்தேன். 

அதில் ஒன்று முசொரியில் அமைந்துள்ள IAS Training centre . எங்கு பார்த்தாலும் பச்சை போர்த்தியிருக்கும் இயற்கை அன்னையின் யவ்வனப்  பேரழகு மயக்கும் ஒரு இடம் முசோரி.  நிறைய மரங்கள் அடர்ந்த அந்த வளாகத்தில் கம்பீரமாக நிற்கிறது Lal Bahadur Shastri Academy of Administrators.

 

இந்த தேசத்தின் தலைவிதியினை அமுல்படுத்தும் அதிகார வர்க்கத்தின் ஆளுமைகளைப் பிரசவிக்கும் பெருந்தாய் மடி. கடும் உழைப்பும்,  பரந்த படிப்பும் கொண்ட துடிப்பு மிக்க இளைஞர்கள் அனைவரின் கனவு பூமி. துள்ளலும் துருதுறுப்புமாக ஆண்டு தோறும் பல நூறு ஆட்சியர்களை, ஆளுமைகளை  தேசத்தின் திசை எங்கும் பெருமிதத்துடன் அனுப்பி வைக்கும் கர்வமான கலாசாலை.

எனது குழந்தைகள் அந்த கலாசாலையின் காற்றையாவது சுவாசிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம். காஸ்மீரில் மட்டுமே வளரும் தேவதாரு மரம் இங்கு கொண்டு வந்து நடப்பட்டு வெகு உயரமாக வளர்ந்து நிற்கிறது.  அதன் கீழ் அமர்ந்து சும்மா புகைப்படம் மட்டுமே எடுக்க முடிந்தது.

என் குழந்தைகள் வளர்ந்து – பெரியப்பா போல் ஒரு கனவு கண்டு – படித்து- அந்தக் கலாசாலையில் சேர்ந்து  வெளிவருவதைப் புகைப்படம் எடுத்து பதிய வேண்டும் என்று சொல்லித்தான் அங்கு கூட்டிப் போனேன்.

 அதுவும் முடியாமல் போனதால் –

 தேவதாரு மர அடியில் எடுத்த  குடும்பப் போட்டோ மட்டும்!


Comments