காண- தொலை 14

சண்டிகரின் ராக் கார்டன்..

 

Tamilnadu Tourism: Jain Cave Temple Complex, Yanaimalai, Madurai

எங்கள் ஊரில் இருந்த அந்த  கிரானைட மலை மீது அந்த  வியாபாரிக்கு  வெகு காலமாகவே ஒரு கண்.. நன்கு விளைந்த சிவப்பு கிரானைட் மலை. சேட்டலிட்டில் இருந்து  அனுப்பிய படங்கள் எல்லாம் எந்த அளவு அந்த மலை உயரமாகத் தெரிகிறதோ அதை விட பல மடங்கு ஆழமாக அது வேர் பாய்ந்து விளைந்திருக்கிறது என்றும் உலகின் மிக உயர்ந்த கிரானைட் வகை மலை  அது என்றும் சுட்டியது.  வெட்டி எடுத்தால் தங்கப் பாளங்களுக்கு இணையான விலை கிடைக்கும் என்றும் அந்த வியாபாரிக்கு நன்கு   தெரிந்திருந்தது.

 மலையை முழுங்க ஒரு கவித்துவமான திட்டம் தீட்டினார். அதாவது,  அரசு  மலையைக் குடைந்து உள்ளே ஒரு செந்தமிழர் அருங்காட்சியகம் அமைப்பது. குகைகளை உருவாக்கி அதில் குறளோவியங்களும்  சிற்பங்களும் சமைப்பது  இதன் மூலம் உலகு போற்றும் ஒரு கலைக் குகை அங்கே உருவாகும். அப்படி மலையைக் குடையும்போது வெட்டுகிற பாறைகளை போனால் போகிறது என்று அந்த வியாபாரிக்கு அரசாங்கம் கொடுத்து விடுவது. இதுதான் திட்டம். 

விடுவார்களா விழிப்புமிக்க நம் ஜனங்கள். கொதித்தெழுந்தார்கள்.  பெரும் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்து அரசும் அதை ஆதரிக்கவில்லை. வியாபாரியும் மேலே தொடரவில்லை. தப்பித்தது காலம் அளித்த கற்கொடை.

 இது வேறு ஒரு கதை. சண்டிகாரில்  நடந்தது.

 அவர் ஒரு அபாரமான சிற்பி. அவரது பெயர் நேக் சந்த். அந்த  மனிதனுக்கு  அபூர்வமான கலை மனது. அவரது உள்ளம் முழுவதும் அவரது சொந்த ஊரான சண்டிகாரின் பேரழகு குறித்தும் அதன் அழகான வடிவமைப்பு குறித்தும் ஏகப் பெருமை. அதற்கு மேலும்  பெருமை சேர்க்கும் வகையில் தனது பங்காகவும் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேரவா அவருக்கு.

 1950 ம் வருடத்தில் அரசு அனுமதியுடன்  ஒரு சிறிய காட்டை சுத்தப்படுத்திய இந்த சிற்பி, அங்கே காலம் காலமாக  புதைந்து கிடந்த கண்ணாடிப் புட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உடைந்த பீங்கான் வளையல்கள், சாக்குக் குவியல்கள், இரும்பு, தகர கழிவுகள், பாட்டில் ரப்பர் மூடிகள், நட்டு போல்டுகள், இவற்றோடு உடைந்த சைக்கிள் பிரேம், ஹேண்டில் பார், மெட்டல் வயர்கள்,மத்கார்டுகள்,உடைந்த போர்க்குகள்l, கோலி குண்டுகள்,, ஆட்டோமொபில் ஸ்பேர் பாரட்டுகள்,  மார்பில் பிட்டுகள், செராமிக் பானைகள், மின் வயர்கள், கட்டிட இடிபாடுகள், என கழிக்கக் கடாசப்பட்ட பொருட்களை மட்டுமே வைத்து ஒரு கலை அழகு கொஞ்சும் ராக் கார்டனை 40 ஏக்கர் பரப்பளவில் பிரமிக்கத் தக்க வகையில் வடிவமைத்தார். பொதுப் பணித்துறையில் ஒரு சாலை ஆய்வாளர் ஆகப் பணியாற்றிக்கொண்டே இதனை முழுமையாக உருவாக்க  அவருக்கு 20 வருடங்கள் பிடித்தது.


Rock Garden In Chandigarh: All ABout This Artsy Tourist Hotspot!


முதல் பத்து வருடங்களுக்கு இதனை அவர் ரகசியமாக உருவாக்கி வந்தார். நள்ளிரவுகளில் மட்டுமே இவர் வேலை பார்த்து வந்தார். 2000 சிற்பங்களுக்கு மேல் உருவாகிய போதுதான் இது பற்றி பிறர் அறிய ஆரம்பிக்கின்றனர்.  அரசுக்கு இது பிடிக்கவில்லை. இதனை இடிக்க முடிவெடுக்கிறது.  உள்ளே சென்று பார்க்கும் பொது மக்கள் பிரமிப்பின் உச்சத்திற்கு செல்கிறார்கள். நேக் சந்தின் பக்கம் ஒட்டு மொத்த சண்டிகரும் திரண்டு நிற்பது காணும் அரசு இதன் பிரம்மாண்டம் புரிந்து கொள்கிறது. நேக் சந்திற்கு சம்பளம் கூட்டப்படுகிறது. உதவிக்கு இன்னும் அதிக ஆட்கள் ஒதுக்கப்படுகிறார்கள். பணிவேகம் கூடுகிறது. கலை அதிசயம் தொடர்கிறது.

Rock Garden Chandigarh | Timings, Entry Fee, What to See

 தினம் தினம் இவர் தொலை தூரங்களுக்கு எல்லாம் சென்று குப்பைகளை அள்ளி வந்து அதில் கோமேதகங்களைத் தேடியது  கண்டு எல்லோரும் சிரித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்த அற்புதக்  கலைஞன் இரவும் பகலும் தனது உயிர் விளக்கெரித்து ஒரு கனவுத் தோட்டத்தினைச் சமைத்துக் கொண்டிருந்தான்.  நீர்வீழ்ச்சிகள், சாக்குக் கோட்டைகள், கல் மாடங்கள், இரும்பு மரங்கள், கண்ணாடித்துண்டு மனிதர்கள்,மந்திகள், நவீன சிந்தனைச் சிற்பங்கள், சாக்கு ஊஞ்சல்கள்,குறுகி முட்டும் மர்மப் பாதைகள், விரிந்து பரந்த கலை வெளிகள், என்று திரும்பும்  இடமெல்லாம் மாயம் செய்தார்.  

Chandigarh_Chandigarh_Rock-Garden_Rock-Garden_in-Chandigarh_IWPL3

 தூக்கி எறியப்பட்ட டாய்லெட் கோப்பைகள் அவரது கைவண்ணத்தில் மனிதர்கள் ஆனார்கள், உடைந்த கண்ணாடி வளையல்களால் செய்யப்பட்ட பேரழகிகள் உற்சாக நடனம் ஆடி  நின்றார்கள். மிகவும் திட்டமிட்டு பார்த்து பார்த்து கட்டுப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட சண்டிகரில், எந்தத் திட்டமிடலும் இன்றி தனது கல்பனா சக்தியின் உந்துதலை மட்டுமே துணைக் கொண்டு கடவுள்களும் தேவைதகளும் வந்து வசிக்க ஆசைப்படும் ஒரு மாயலோகம் சமைத்தார் அந்த நவீன மயன்.

An American Foundation offers $1 million for the Rock Garden ...

NCPTT | Folk Art Conservation and the Rock Garden in Chandigarh ...

இதன் தனித்துவம் கண்ட உலகின்  பல நாடுகள் இதன் சிறப்பை வியந்து நின்றன.  துருக்கியோ ஒரு படி மேல் சென்று இஸ்தான்புல்லில் அது போல் ஒரு சிறிய ராக் கார்டனை அமைத்தது.

உலகின் பெரும் சிற்பக் காட்சிகளில் எல்லாம் நேக் சந்தின் சிற்பங்கள் தனி இடம் பிடித்துள்ளன..

தனக்கு தானே குருவாக இருந்து சுயமாக அவர் சமைத்த இந்த அதிசய உலகத்தை புராதன சின்னமாகவும் சண்டிகரின் தனி அடையாளமாகவும் உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன.

தான் கண்ட கனவிற்குத்  தனது  காலத்திலேயே ஒரு பிரம்மாண்டமான வடிவம் சமைத்துச் சாதித்த தனி ஒரு மனிதனாக அந்தக் மகா கலைஞன் தனது 90ம் வயதில் 2015 ம் வருடம் காலமானபோது சண்டிகார் உறைந்து நின்றது.

 கற்களைப் பூக்க வைத்து விட்டு அந்தக் கலைஞன் உதிர்ந்து போனான்.

 


Comments