காண தொலை -12
Bibi Ka Maqbara,
Aurangabad
ஷாஜஹானைச்
சிறைப்பிடித்து ஆக்ரா கோட்டையில் ஒரு இடத்தில் அடைத்து விட்டு,” அப்பூ, நீங்கள் அம்மியின் நினைப்பாக
கட்டினீர்களே தாஜ் மஹால், அதோ யமுனை ஆற்றங்கரையில் பிரம்மாண்டமாக தெரிகிறதே,
இங்கிருந்தபடியே அதனைப் பார்த்தவாறே
உங்கள் காலத்தை கழியுங்கள், நான் ஆட்சிப் பொறுப்பைப் பார்த்துக் கொள்கிறேன் “
என்று அவுரங்கசீப் சொல்லிச் சென்று விடுகிறார். போன மனிதன் தனது ஆட்சியின் போது
எந்த நேபோடிசம் புகாரும் வரக்கூடாது என்று தனது அனைத்து சகோதரர்களையும் வேறு கொன்று விடுகிறார்.
இங்கோ , தளர்ந்து
போன அந்தக் காதல் மன்னன் ஷாஜஹான் , எங்கிருந்து பார்த்தாலும் தனது காதல்
மனைவியின் நினைவுச் சின்னம் தெரிய வேண்டும் என்று தான் அடைக்கப்பட்ட
இடத்தின் தூண் முழுவதிலும் கண்ணாடிகள் பதித்து எங்கு பார்த்தாலும் தாஜ் மஹால்
பிரதிபலிக்குமாறு செய்து காதலில் கரைந்து
கரைந்து மறைந்து போகிறார்.
தாஜ் மஹால் குறித்த பல கவிதைகளில் ஒரு கவிஞர் “ பணக்காரத் திமிரில் ஒரு மா மன்னன் ஏழைகளின் காதலை ஏளனம் செய்கிறான்’ என்று எழுதி இருப்பார், தாஜ் மகாலின் மோகனம் குறித்த பதிவுகள் எக்கச்சக்கம். ஆனால் தாஜ் மஹால் போலவே கட்ட நினைக்கப்பட்ட இன்னும் ஒரு நினைவுச் சின்னம் பீபீ கா மக்பாரா..
எளிமைக்குப்
பெயர் போன, தான் இறந்த பிறகு மிகவும் எளிமையாக மேற்கூரை கூட இல்லாமல் திறந்த
வெளியில் புதைக்கப்பட வேண்டும் என்று சொன்ன அவுரங்கசீப் , இறந்து போன தனது
பீபிக்கு எழுப்பிய ஒரு பிரமாண்ட மக்பாரா
குறித்தே இந்தப் பதிவு.
சபாவிட் வம்சத்தை சேர்ந்த பாரசிக இளவரசியான தில்ராஸ் பானு பேகத்தை அவுரங்கசிப் நிக்காஹ் செய்த ஆண்டு 1637. தில்ராஸ் அவரின் முதல் மனைவி மட்டுமல்ல அவரது மனைவிகளில் முதன்மையான மனைவியாகவும் இருந்தார். இருபது வருடம் நீடித்த அவர்கள் இருவருக்கும் ஐந்து குழந்தைகள். முகமது அக்பர் என்று அழைக்கப்பட்ட அந்த ஐந்தாவது பையன் பிறந்ததும் பேகம் தில்ராஸ் பிரசவத்திற்குப் பின்பான உபாதைகளால் அவதியுற்று( அவரது மாமியார் போலவே) 1657 அக்டோபரில் வபாத் ஆகி விடுகிறார்.
தனது பிரிய மனைவியின் பிரிவால் துயருறும் அவுரங்கசீப் 1660 ல் ஒரு பிரம்மாண்டமான முகலாய பாணி கல்லறையினை கட்டும் பணிகளை தொடக்கி வைக்கிறார். இதன் பணிகள் 1669ல் நிறைவடைகிறது. இறப்பிற்குப் பின் ராபையாத் தவ்ராணி என்ற பட்டம் சூடப்பட்டு தில்ராஸ் பானு பேகம் பீபி கா மக்பார என்று பெயர் வைக்கப்பட்ட அந்த பிரம்மாண்ட நினைவுச் சின்னத்தின் உள்ளே நல்லடக்கம் செய்யப்படுகிறார்.
அவுரங்கசீப் அப்படி ஒரு பிரம்மாண்டத்தை விரும்பினார அல்லது அவரது மனைவி ஏங்க நான் செத்தா அத்தைக்கு மாமா கட்டியது மாதிரி நீங்க எனக்காக ஒரு பெரிய மஹால் கட்ட மாட்டீர்களா என்று கேட்டதன் விளைவா என்று தெரியவில்லை. உள்ளபடியே ஒரு பிரம்மாண்ட நினைவுச் சின்னமாக அவுரங்கசீப் மக்பாரவை வடிவமைத்தார்.
15000
சதுர அடி பரப்பளவில் தூண்கள், அழகிய மினாறேட்டுகள்,
அலங்கார வளைவுகள், இருபுற நடை பாதை நடுவில் செயற்கை நீரூற்றுகள் என வெளிப்புறம்
அழகுபடுத்தப்பட்டது. 19 அடி உயரத்தில் மக்பாரா நிறுவப்பட்டது. 72 அடி உயரத்தில்
சுற்றிலும் நான்கு மினாறேட்டுகள் அமைக்கப்பட்டது. டோம்களுக்கு மட்டும் சலவைக்கல் பதிக்கப்பட்டது.
தில்ராஸ் பானு பேகம் அடக்கம் செய்யப்பட்ட
இடம் தரைத்தளத்திற்கு கீழ் இருந்தது.
தக்காணத்தின்
தாஜ் என்று அழைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்தை தனது தாய் அடங்கியுள்ள தாஜ்
மஹால் போலத்தான் எழுப்ப அவுரங்கசீப் எண்ணியிருந்தார். நிதிப் பற்றாக்குறை இந்த
நினைவுச்சின்னத்திற்கு மேலும் அழகு கூட்டுவதைத் தடுத்து விட்டது.
தாஜ்
மகாலைக் கட்டியவர்களில் ஒருவரான உஸ்தாத் அகமத் லகூரியின் மகனான அட்டாவுல்லா ரஷீத் இந்த
அழகிய நினைவகத்தின் சிற்பிகளில் ஒருவர்.
அது
இருக்கட்டும். இவ்வளவு பிரம்மாண்டத்தை
தனது மனைவிக்கு எண்ணிய அவுரங்கசிப் தனது கல்லறை எப்படி இருக்க வேண்டும்
என்று நினைத்தார் தெரியுமா.
.. நான் தொப்பி செய்து விற்று சம்பாதித்த பணம் ஒரு 14 ரு 50 பைசா இருக்கிறது. இதனை வைத்துதான் என்னை அடக்கம் செய்ய வேண்டும்..... எனது அடங்கும் இடத்திற்கு மேல் கூரை அமைக்கக்கூடாது. நான் வானத்தைப் பார்த்தவாறே புதைபட வேண்டும்.... எனது தலைமாட்டில் திருநீற்றுப் பச்சிலைச் செடிகள் மட்டுமே நடப்பட வேண்டும்.... வேறு எந்த அலங்காரமும் என் கல்லறைக்கு செய்யப்படக்கூடாது..
அந்த மாமன்னன் அவ்வாறுதான் இறுதியில் அடக்கம் செய்யப்பட்டார்.






Comments
Post a Comment