காண தொலை (11)

எழில் கொஞ்சும் எல்லோரா..

பூமிக்கு அடியில் இருந்து வெடித்துக் கிளம்பும் எரிமலைக் குளம்புகள் குளிர்ந்தபின்  basalt எனப்படும் பாறைப் படிவங்களாக மலை வடிவமோ குன்றின் வடிவமோ எடுத்து விடுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

நமது அஜந்தாவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் எல்லோரா என்று ஒரு கிராமம். அங்கு ஏராளமாக இருந்த பாசல்ட் மலைப் பாறைகளைச் செதுக்கி ஒரு அற்புதமான மும்மத வழிபடு வளாகம் ஒன்று உருவாக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக எந்த ஒரு மதமும் தனக்கே இது சொந்தம் என்று தகராறு செய்யாமல் சமயப் பொறைக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறது எல்லோரா.


அஜந்தா போல் ஒரே நம்பிக்கையை மட்டும் பிரதிபலிக்காமல் இந்தக் குகைகள் மும்மத நம்பிக்கைகளையும் அடுத்தடுத்து பிரகடனப்படுத்துகின்றன. பாறைகளில் செதுக்கப்பட்ட குகை மற்றும் கோவில்களில் உலகின் மிக நீளமான அமைப்புகளில் எல்லோராவும் ஒன்று என்று யுனெஸ்கோ அங்கீகரித்து புராதனச் சின்னமாக அறிவித்துள்ளது.


 இரண்டு கி.மி. நீளத்திற்கும் அதிகமாக பாசல்ட் பாறையில் , 34 குகைகளில் செதுக்கப்பட்டு உள்ள இந்தக் கோவில்களிலும் மடாலயத்திலும் ,  பக்கம் பக்கமாக அடுத்தடுத்து செதுக்கப்பட்ட 600 to 1000 நினைவுச் சின்னங்கள்;  பவுத்தம், சமணம் மற்றும்  இந்து மதங்கள் இடையே அந்தக்  கால கட்டத்தில் இருந்த மதச் சகிப்பு தன்மையினை இங்கு ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டு மும்மதக் கலைக்  கோவிலின்  எழில் மிளிரும் கலை வளாகத்தில் நாம் உணர முடிகிறது. 

மொத்தம் 34 குகைகளின் தொகுப்பு எல்லோரா குகைகள் என்று அழைக்கப்படுகிறது. எல்லோரா வளாகத்தில் 12 பவுத்த 17 இந்து 5 ஜைனக் குகைகள் உள்ளது.

இதில் குகை எண் 16 ல் தான் சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கைலாசநாதர் கோவில் உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகிலேயே பெரிய கோவில் இதுவாகும். குகையின் மற்ற இடங்களில் செயதது  போல் பாறை முகத்தில் கிடை வசமாக செதுக்காமல் ,  பாசல்டிக் படிவத்தின் உச்சியில் இருந்து கீழ் நோக்கி செதுக்கி கொண்ட்டே போனதால் மிக அதிக சூரிய ஒளி எப்போதும் இங்கு இருக்கிறது.


 குகை எண் 15 விஷ்ணுவின் தசாவதாரப் பெருமைகளைச் சிற்பங்களாகச் செதுக்கியுள்ளது.

எல்லோராவில் உள்ள சமணக் கோவில்கள் 9 மற்றும் 10ம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டு  உள்ளது.  திகம்பரப் பிரிவினரின் காலம் எனக் கருதப்படுகிறது.

இந்துக் குகைக் கோவில்களின் அமைப்பு மிக ஆர்ப்பாட்டமாகவும் அலங்கார மாகவும் இருக்கும் அதே சமயம் பவுத்தக் குகைகள் எளிய அலங்காரங்களுடன் இருக்கிறது. துறவிகள் அங்கு தங்குவதற்கு ஏதுவாக உள்ளே நிறைய படுகைகள் காணபடுகிறது.



எட்டாம் நூற்றாண்டில் இராஷ்ட்ரகூட அரசனான முதலாம்  கிருஷ்ணன் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் இருந்து இரண்டு லட்சம் டன் அளவிற்கு பாறைகள் வெட்டிஎடுக்கப்பட்டுள்ளது. 164 அடி நீளமும் 108 அடி அகலமும் 100 அடி உயரமும் உள்ள இந்த வழக்கத்தில் நான்கு அடுக்காக மாடிகள் உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட படிக்கட்டுக்கள், ஹால், கதவுகள், ஜன்னல், நிரந்தரமாக நிற்கும் கற்சிற்பங்கள் என்று மிரட்டுகிறது இந்த கோவில். பத்து தலை இராவணன் தனது பலத்தைக் காட்டும் விதமாக கயிலாயத்தை ஆட்டி அசைக்கும் சிற்பம் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. 

நாட்டிய முத்திரைகள் ஒரு புறம் பாறைகள் எங்கும் செதுக்கப்பட்டுள்ளது. 


குகை எண் 10 ல் விஸ்வகர்மா கோவிலில்,இந்து மற்றும் பவுத்த கடவுளர்களின் உருவத்துடன் குள்ள மனிதர்களின் நடனச் சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளது. குகை எண் 32ல் உள்ள ஜைனர் கோவிலில் மிக அழகான தாமரை மலர்களும் பல்வேறு ஆபரணங்களும் கலை நுணுக்கத்துடன்  செதுக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மார்ச் மாதமும் இங்கு வருடாந்திர எல்லோரா இசை மற்றும் நாட்டியத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஒரு இளவேனில் இரவில் எல்லோரா போய் இருங்கள். எதனை எல்லாம் தொலைத்து விட்டோம் என்பதைக் காண்பீர்கள்!


Comments