COMRADE LOGU
தோழர் லோகநாதன்
வில்லாபுரத்தில் நாங்கள் அப்போது வசித்த பழனியம்மாள் இல்லம் இருந்த பகுதியில் சௌராஷ்டிரா இன மக்கள் பெரும்பான்மையாக
இருந்தனர். எங்கள் பகுதியில் இருந்த அனைத்து சவுராஷ்டிர மக்கள் வீட்டிலும் தறி
இருந்தது. ஓயாமல் இரவு முழுவதும் தறி
அடித்துக் கொண்டும் இரவு ரேடியோவில் பாடல்கள் கேட்டுக் கொண்டும் நள்ளிரவு
நேரங்களில் கூட டீ வாங்க தூக்குச் சட்டி எடுத்து கொண்டு வெளியில் வந்து கொண்டும்
இருக்கும் உழைக்கும் மக்கள் நிரம்பிய இடமது.
அவர்களின் வீர முகமாக அறியப்பட்டவர் டீக்கடை கிருஷ்ணன். ஒல்லியாக வெட வெட என்று இருக்கும் கிருஷ்ணன் அவரது
அண்ணன் டீக்கடையில் டீ மாஸ்டர். அமைதியானவர். உற்சாகமான ஆள்.
வில்லாபுரத்தில் பெருவாரியாக இருந்த பிள்ளைமார்களில் பெரும் ரவுடியாக இருந்த ஒரு ஆள் சங்கர்.
சண்டியர் சங்கர் முகவெட்டு மிக்க ஒரு ஆள். களையான ஆள். கைலியை வடிவேல் ஒரு
படத்தில் கட்டி வருவது போல் உள்ளாடை தெரியுமாறு தூக்கி கட்டிக் கொண்டுதான் ஊர்
முழுதும் திரிவார். அந்த மாலைப் போதில் பெரும் கள் போதையில் கிருஷ்ணன் டீக்கடை
முன்பு நின்று சங்கர் ஒரே சலம்பல். கிருஷ்ணன் பாய்லரில் இருந்து டீ ஆற்றிக் கொண்டே
சங்கர், வேணாம் போய்டு போய்டு என்று திருப்பி திருப்பி சொல்ல அதனைக் கேட்காத
சங்கர் உள்ளே கடையில் நாற்காலிகளை இழுத்துப் போட்டு சலம்பலின் வேகத்தை
கூட்டுகிறார். அவ்வளவுதான். பொறுமை இழக்கும் கிருஷ்ணன் பாய்லரில் இருந்து ஒரு
நீளமான செம்பில் வெந்நீர் எடுத்து நேரே சங்கர் முகத்தில் விசிறி அடித்து
விடுகிறார். துடித்து சங்கர் விழ அவரது சொந்தக்காரர்கள் கடையை சூழ, பிறகு அடி தடி
பஞ்சாயத்து என்று நாட்கள் போன பின்பும் மறுபடியும் தெம்பாக அதே இடத்தில கிருஷ்ணன்
கடை போட்டார். பிறகு சங்கர் அந்தப் பக்கமே
திரும்பிப் பார்க்கவில்லை.
வெகு கண்ணியமான இருவர் எங்கள் தெரு சவுராட்டிர இனத்தினரின் அறிவு முகமாகத்
திகழ்ந்தார்கள் . லோகநாதன் அப்பாவிடம் படித்தவர். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை
பார்த்து வந்தார்.. எங்கள் தெரு முக்கில் அவரும் அவரது ஆசிரிய நண்பர் மோகனும்
சேர்ந்து வள்ளுவர் படிப்பகம் என்று ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தனர்.. அவர்கள்
வீட்டு முன்பு எப்போதும் ஆட்கள் இருப்பார்கள்.
அறிவுரை கேட்கவோ அல்லது உதவிகள் கேட்கவோ. அவர்கள் இருவரும் எங்கள்
பகுதியின் அறிவுஜீவிகள்.
எங்கள் நண்பர் குழுவுக்கு அப்போதிருந்த பெரும் பொழுது போக்கு என்பது எங்கள்
தெருவில் இருந்த நண்பர் ஜெகநாதன் சிகை திருத்தகத்தில் உட்கார்ந்து பெரும் பேச்சாய்
பேசுவது, உடனடி கவுண்டர்கள் அடிப்பது, சினிமா கதைகளை அலசி ஆய்வது என மிகவும் சராசரியாகத்தான் இருந்தது.
அங்கு அடிக்கடி முடி வெட்ட வருபவர் அமைதியாக இருக்கும் லோகநாதன். அவர்
அப்பாவின் மாணவர் என்பதாலும் எனக்கு நான்கு வருடம் சீனியர் என்பதாலும் அவர் வரும்
போதெல்லாம் மரியாதை கலந்த ஒரு முகமனை நான்
எப்போதும் பரிமாறிக் கொள்வேன்.
ஒரு நாள் லோகநாதன் “ஏன் தம்பி,
படிப்பகம் பக்கமே வர மாட்டேன் என்கிறிர்கள் ? ஒரு நாள் வாங்களேன் “ என்றார்.
“அண்ணே , இல்லண்ணே.. வரண்ணே.”. என்று நான் இழுத்ததற்கு ஒரு காரணம் இருந்தது.
அங்கே நாளிதழ்கள் தவிர்த்து இருந்த புத்தகங்கள் எல்லாம் படிக்க ஒரே அறுவையாக
இருக்கும். சோவித் யுனியன் என்று ஒரு பெரிய பத்திரிக்கை, அப்புறம் ரேக் ரேக் ஆக
ரஷ்ய தேசத்து எழுத்தாளர்கள் புத்தகங்கள். எங்களுக்கு அப்போதிருந்த இலக்கிய அறிவு
என்பது சுஜாதாவின் கதைகளை வெறித்தனமாக வாசிப்பதும், காசு சேர்த்து வைத்து ரீகல்
டாக்கீஸில் டெரன்ஸ் ஹில் பட் ஸ்பென்சர் படம் பார்ப்பதும், தி.மு.க. கூட்டங்களுக்குப் போவதும், வில்லாபுரம்
மந்தையில் அப்போதைக்கப்போது நடக்கும் நாடகங்கள்
பார்ப்பதும் என்ற அளவில்தான் இருந்தது.
(அப்போது வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் பானர்மேன் ஆக நடித்தவர் எங்கள்
கருப்பையாவின் அண்ணன். பகல் முழுவதும் ரிக்ஷா இழுப்பார். விறகு உடைத்து வண்டி
இழுப்பார். சாயங்காலம் மேக்கப் போட்டு வெள்ளைக்காரன் ஆகி விடுவார். ஆள் பார்க்க
படு ஸ்மார்ட் ஆக இருப்பார். பானர்மேன்
வரும்போது தனியாக ஒரு மியூசிக் போடுவார்கள். கன்னிப் பெண்களைப் பத்திரமாப் பார்த்துக்குங்க, பானர்மேன் வரப்போறார் என்று
மைக்கில் டீசர் வேறு அப்போதைக்கப்போது)
ஒரு நாள் லோகநாதன் அண்ணனிடம் வசமாக மாட்டிக் கொண்டேன்.
“வா தம்பி ஒரு கூட்டம் இருக்கு.போகலாம்” என்றார்.போனேன்.
குப்புசாமி வீட்டில்தான் கூட்டம். குப்புவுக்கு அப்போது கல்யாணம் ஆகவில்லை.
மோகன் தலைமை தாங்க தறியின் அடியில் தரையில் அமர்ந்தவாறு ஏகப்பட்ட நெசவுத்
தோழர்கள்.. ஸ்டென்சில் காபி போடப்பட்ட ஒரு புத்தகத்தின் பிரதிகள் அனைவருக்கும்
விநியோகிக்கப் படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை என்று அதில் இருக்கிறது.
அனைவரும் அதனை வீட்டில் படித்து விட்டு அடுத்த கூட்டம் வரவேண்டும் என்ற
வேண்டுகோளுடன் அன்றைய கூட்டத்தில் பிற லோக்கல் பிரச்சினைகள் அலசப்படுகிறது.
manifesto எனக்கு அப்படித்தான் தோழர்
லோகுவால் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு அடுத்து அடுத்து லோகுவுடன் தொடரும் எனது
பயணம் சில வருடங்களைக் கடக்கிறது. குப்புவின் வீட்டில் இப்போது புது வரவு அவரது
மனைவி . லீலாவதி. நாங்கள் அனைவரும் தறியின் கீழ் தரையில் அமர்ந்து லோகுவின்
அற்புதமான வகுப்புக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு மூலையில்
எல்லாவற்றையும் கவனமாகச் செவி மடுத்த வாறே லீலாவதி எங்களுக்கு தேனீர் தயாரித்துக்
கொண்டிருப்பார்.
கல்லூரியில் நான் முதலாமாண்டு முடித்து இரண்டாமாண்டு செல்லும் சமயம்.
வில்லாபுரத்தில் கட்சி சார்பில்லாமல் SYFI என்று ஒரு அமைப்பு நிறுவ வேண்டும் என
லோகு எங்களுக்கு தெரிவிக்கிறார். இதுவே பின்நாளில் DYFI எனப் பெயர் மாற்றம்
செய்யப்பட்டது. SYFI வில்லாபுரம் யூனிட்
ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எனக்கு தரப்படுகிறது. இதற்கிடையில் இளங்கோ கொக்கிகளோட
சுத்த ஆரம்பித்து விட்டான் என்று ரவியும்
போசும் தங்கள் தி.மு.க.அபிமானத்தால் என்னிடம் இருந்து சற்றே விலக
ஆரம்பிக்கிறார்கள். நூற்பாலைகளில் நடக்கும் வகுப்புகள்,ரைஸ் மில்களில் காட்டபடும்
BATTLESHIP POTEMKINபோன்ற உலகப்படங்கள்,பட்டி மன்றங்கள்,மதுரைக் கல்லூரி நண்பர்களுடன்
இணைந்து தேர்தல் வேலைகள்,என்று திரிந்த போதுதான் சஞ்சார் பவன் அழைப்பு கிடைத்து
டில்லிப் பணிக்கு சென்று விடுகிறேன்.
தனது சொந்த வாழ்க்கையிலும் வங்கிப்
பணியிலும் ஒரு முழு கம்யூனிஸ்டாக இருந்தவர் தோழர் லோகநாதன். அவரின் பிரதான சீடரான குப்புவின்
குடும்பமே கம்யூனிஸ்டாகியது.குப்புவின் மனைவி லீலாவதி பின்பு வில்லாபுரம்
கவுன்சிலர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சமூகக் கொடுமைகளைக் கேள்வி கேட்டதிற்காக
வெட்டப்பட்டு தனது இன்னுயிரைத் தியாகம் செய்தார். தியாகி லீலாவதியானார்.
நான் கட்சிக்குள் நுழைய வில்லை என்றாலும் தோழர் லோகநாதன் அறிமுகப்படுத்திய
மார்க்சிய வகுப்புக்களும் பின்னாளில் என் கல்லூரி நண்பர்கள் அனைவருமே MARXIAN
SCHOOL OF THOUGHT ல் ஈர்க்கப்பட்டு நாங்கள் அனைவரும் பயணப்பட்ட ஒரே திசையின்
பாதிப்பும், பலவேறு திசைகளில் பிரிந்தாலும் எங்கெங்கு இருந்தோமோ அங்கெல்லாம் ஒரு நேர்மையாளனாக,அதிகாரத் திமிருக்கு அடி
பணியாமல், அடி வருடாமல்,எளிமையுடன் வாழ சொல்லிக்
கொடுத்தது.
அந்தப் பள்ளி சொல்லிக் கொடுத்த பாடம்தான் ஒரு குமாஸ்தாவாக எந்த உயர் அதிகாரி
முன்பும் என்னைத் தலை குனிய விடாமல் சக
ஊழியர்களாக மட்டுமே எவரையும் பார்க்க
வைத்தது. சரியான தொழிற்சங்க வாதியாக தொழிற்சங்கத்தில் இல்லாமலும் இயங்கக் கற்றுக்
கொடுத்தது. கட்சியில் இல்லாமலும் ஒரு
கட்சிக்காரனாக இருக்கச் சொல்லிக்கொடுத்தது. எனது எந்த தனிப்பட்ட தேவைகளுக்கும்
எவர் முன்பும் சிபாரிசுக்கு நிற்காத
நெஞ்சுரம் கொடுத்தது. எனது
வாழ்வில் பல உன்னத நெறிகளை தோழர்
லோகநாதன் அறிமுகப்படுத்தி வைத்த கலாசாலை
அதன் பல்வேறு தோழர்கள் வழியே நிதமும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.
நன்றி தோழர் லோகநாதன்.
உங்கள் புகைப்படம் கிடைக்கவே இல்லை.
ஆனால் உங்கள் புன்சிரிப்பும், பெரிய கிருதாவும்,தொங்கு மீசையும்,பின்னோடிய
முடியும்,உயரமும் , நிலத்தில் எவர்க்கும் அஞ்சா நன்னெறிகளும் என்னுள்ளே வெகு ஆழமாகப் பதிந்துள்ளது.
லவ் யூ காம்ரேட்.



Comments
Post a Comment