அண்ணன்கள் தாங்கிய என் ஆனந்தப் பால்யம்:

அண்ணன்கள் தாங்கிய என் ஆனந்தப் பால்யம்:
அப்போது சிறுவன் ஆக இருந்த நான் நண்பர்கள் தவிர்த்து உறவுகளுடன் பார்த்த சினிமாக்கள் எல்லாமே மிக அற்புத அனுபவங்கள். எல்லோரும் பிரியமாகக் கொஞ்சுவார்கள். திருச்சிற்றம்பலம் என்ற நிஜப் பெயர் கொண்ட எங்கள் கண்ணாடித் தாத்தாவுக்கு சாட்டை போன்ற உடம்பு. நெடு நெடுவென உருக்குப் போல் இருப்பார். அப்பாயிக்கு அண்ணன். அப்போது நாங்கள் வில்லாபுரம் பழனியம்மாள் காம்பவுண்டில் குடியிருந்தோம். தாத்தா எப்பவும் எங்கள் வீட்டு திண்ணையில்தான் தூங்குவார். கடுமையான கோபக்காரர். அவரது தங்கை மகனின் தலை வாரிசு என என்மீது வெகு பிரியம் கொண்டவர். வாரம் ஒரு முறை என்னை அழைத்துக் கொண்டு மதுரைக்கு செல்வார், தெற்கு வாசலில் ஜெய விலாஸ் என்று ஒரு ஓட்டல். அதன் ரவா தோசைச் சுவைக்கு தாத்தா பெரும் அடிமை. எனக்கு அது பிடிக்காது. நான் வேறு எதாவது சாப்பிடுவேன். அப்புறம் மீனாட்சி டாக்கீஸில் படம் பார்க்கப் போவோம். உலகம் சுற்றும் வாலிபன் தாத்தா கூடத்தான் பார்த்த நினைவு. நிறைய வாங்கித் தருவார். திரும்பி வரும் போது வில்லாபுரம் கண்மாய் கண்டு கலங்குவார். ஏன் தாத்தா என்றால் உன் தாத்தன் மில் வேலை முடிச்சு இந்தப் பக்கம் வறப்ப எதையோ இடறிப் பயந்து முடியாம போய் இறந்தது நியாபகம் வருது என்பார்.
அப்புறம் நாகு அண்ணனும் சோமு மாமாவும் . அப்புறம் பூவலிங்க அண்ணனும் கீரைத்துரை முத்தண்ணனும். அப்புறம் ஒத்தக்கடை சிவலிங்காவில் வேம்பு மாமா வீடில் இருந்தப்போ அரசுடன் சேர்ந்து பார்த்த சங்கமம். அப்புறம் உக்கிரன் மாமா.. பிச்சை மாமா அரவந்குரிசியில் இருந்து சைக்கிளில் நத்தம் வந்து காண்பித்த திரைப்படங்கள். இப்படிப் பல உறவுகள் உடன் திரையரங்கு சென்ற என்னை பெரியண்ணன் ஒரு நாள் ஒரு சினிமாவுக்கு கூட்டிப் போனது!
எங்கள் பெரிய அண்ணனின் பல்வேறு ஆகிருதிகளை ஊர் முழுவதும் வியந்து கிடந்த காலம் அது. குடியாத்தத்தில் உதவிப் பேராசிரியர் ஆக வேலை பார்த்த அண்ணன் ஊர் வருவது எல்லோருக்கும் எப்பவும் பெரும் சேதிதான். அண்ணனின் வாசனாதி திரவியங்களையும், பள பளக்கும் ஷூக்களையும் திருத்தமான மிடுக்கான உடைகளையும் பெரியப்பா வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் ஆசையாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். அண்ணன் தனக்கென ஒரு தனி class உருவாக்கி தன்னை வெகுவாக மெருகேற்றி, வலுவேற்றி செல்லுமிடமெல்லாம் பார்ப்பவர்களைத் தன்வயப்படுத்தும் அறிவார் அரிமாவாக வலம் வந்த பொழுது அது. எங்கு போனாலும் அண்ணன் தனித்து தனது உயரத்தை வெளிக்காட்டிகொண்டிருந்த யவ்வனப் போது அது.
பெரியண்ணன் ஒரு நாள் வில்லாபுரம் வந்தது. சினிமா போலாம் வாடா என என்னை அழைக்கவும் நான் மிரண்டு போனேன். சின்ன அண்ணன்கள் தான் எனது செட். பெரியவரைப் பார்த்தால் எப்பவுமே ஒரே அரட்டிதான் எங்கள் எல்லோருக்கும். பயந்து கொண்டே போனேன்.
அண்ணன் என்னை அலங்கார் தியேட்டர் அழைத்துப் போனது . அப்போதுடிக்கட் விலை கீழே 50 காசு , 80 காசு , மாடியில் 1.25 ருபா சிறப்பு வகுப்பு 2.50 ருபாய். VIP BOX 3.50 . முதல் முதல் அண்ணனுடன் சேர்ந்து நான் மதுரை அலங்கார் டாக்கீஸில் 1975ம் வருடம், VIP BOX ல் பார்த்த படம்
“ellorum nallavare.
அந்த படத்தில் வந்த “படைத்தானே பிரம தேவன் பதினாறு வயது அழகுக் கோலம் “ என்ற பாட்டை மெதுவாக முணுமுணுத்தபடியே அண்ணன் இறங்கி வந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது!
அப்புறம் PUCல் ஒரு பாடம் கோட். திருச்சிக்கு பணிமாறி வந்த அண்ணன் என்னை ஜமால் முகம்மது கல்லூரியில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தது. அண்ணன் தனது நண்பர்கள் உடன் மன்னர்புரத்தில் தங்கியிருந்த அறையிலே நானும். அப்பா எனக்கு ஒரு மெஸ் பார்த்துக் கொடுத்து இருந்தாலும் அண்ணன் என்னை பெரும்பாலும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து செல்லும் அப்போது பிரபலமாக இருந்த கவிதா ரெஸ்டாரண்ட்டின் AC பகுதிக்குத்தான் என்னையும் அழைத்து செல்லும். Inferiority complex எனக்கு வந்து விடக் கூடாது என்று அண்ணன் கவனமாக என்னை கையாண்ட நாட்கள் அவை.
1975 ம் வருடம். . நான் மதுரைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்துக் கொண்டிருந்தேன். சின்ன அண்ணன் பூவலிங்கம் எகனாமிக்ஸ். நான் லிட்டறேச்ச்சர். அன்றைய திமுக எம் எல் ஏ ஆக இருந்த திரு காவேரிமணியம் அவர்களின் மூத்த சகோதரியின் மகளை அண்ணனுக்குப் பேசி முடித்தார்கள். முதல்வர் கலைஞர் தலைமையில் அப்போது மதுரையில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த வர்த்தக சபை அரங்கில் திருமணம். நான் கலைஞர் பேசுவதை பதியப் போகிறேன் என்று மீனாட்சிசுந்தரத்திடம் வாங்கிய COMPACT CASETTEE RECORDER எடுத்துக் கொண்டு தோளில் ஸ்ட்ராப் பண்ணிக் கொண்டு பந்தாவாகத் திரிய, வெளியில் கூட்டம் கடுமையாகக் கூடிக் கொண்டே போகிறது. எங்கள் பெரியப்பாவின் ஆளுமைக்கும் பேரன்புக்கும் என்றும் உருகும் சுத்துப் பட்டு கிராம ஜனம் எல்லாம் கூடிக் கொண்டே போகிறது. அரசியல் சூழலில் எந்த நேரமும் தி மு க ஆட்சி கலைக்கப்படலாம் என்று பரபரப்பாக இருந்த நேரம். திரு காவேரி மணியம் அவர்களின் மீது தனிப் பாசம் கொண்டிருந்த முதல்வர் எது எப்படி இருந்தாலும் நான் கண்டிப்பாக திருமணம் நடத்தி வைக்க வந்து விடுவேன் என்று சொல்லி விட்டார். கிராமத்தில் இருந்து மூட்டை மூடையாக சாமான்கள் வந்து இறங்க இறங்க பந்தி நீண்டு கொண்டே போகிறது. சளைக்காமல் சமையல் ஓடுகிறது.. கூட்டம் பெருகப் பெருக அனைவருக்கும் எந்தக் குறையுமில்லாமல் விருந்து இருக்க வேண்டுமே என்று கலங்கிய என் பெரியப்பா மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். எந்தக் குறையுமில்லாமல் கல்யாணம் நடக்கிறது விருந்து நடக்கிறது என்று அறிந்து ஆசுவாசமகிறார். முதல்வர் வந்து விட்டார். பேச ஆரம்பித்து விட்டார். “அனேகமாக இந்தத் திருமணத்தை முடித்து விட்டு நான் கீழே இறங்கும் போது முதல்வராக இல்லாமல் கூட போகலாம். “கலைஞர் பேசியதைப் பதிய நான் அலை மோதுகிறேன்.. ரொம்பக் கிட்டப் போக பயம். உதவியாளர் ஒருவர் சிரித்தவாறே உதவுகிறார். பேசி முடித்து விட்டு கலைஞர் செல்லும் வரை தொடர்ந்து கலங்கிய கண்களுடனேயே பெரியப்பா. எங்கள் பெரியண்ணன் கல்யாணம் அப்படி ஒரு திருவிழாவாக இருந்தது.
தனது கைப்பட அண்ணன் எழுதிய திருமண அழைப்பிதழ் கலைஞருக்கு மிகவும் பிடித்து விட தனது புதல்வர்களில் ஒருவர் திருமணத்திற்கும் அப்படி ஒரு டிசைன் பண்ணச் சொன்னதாக கேள்வி. எனது திருமண அழைப்பிதழ் அப்படித்தானிருந்தது. எனது மற்றும் எனது மனைவி கையெழுத்துடன் நட்பு வட்டத்திற்கென சில நூறு அழைப்பிதழ்கள் அப்படி அடித்தோம். அண்ணன் அந்த அழைப்பினை இன்று பதியவும் தேடுகிறேன் தேடுகிறேன். கிடைக்கவே இல்லை.
இன்று அண்ணனுக்கு 45 வது திருமண நாள்.
மதுரை மெடிக்கல் காலேஜில் அண்ணன் ஆங்கிலத் துறை விரிவுரையாளர். பார்க்கப் போகிறேன். எல்லோரிடமும் என்னை பிரியமாக தம்பி தம்பி என்று அறிமுகம் செய்து வைக்கிறார் பின்பும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் என்னை அவரது பெரும் வட்டத்திற்கு தம்பி என்று பேரன்புடன் அறிமுகம் செய்து கொண்டே வைப்பார்.
தகுதி வளர் .. தக்க வை.. சிறகு விரி.. வான் அள.. தொடர்ந்து பற. என்று என்னைத் தொடர்ந்து MOTIVATE பண்ணிக் கொண்டிருக்கும் எனது எங்களது ரோல் மாடல் ஆன எங்கள் பிரிய அண்ணனுக்கும் மரியாதைக்குரிய எங்கள் அண்ணிக்கும் இனிய மண நாள் வாழ்த்துக்கள்.
WE LOVE YOU. 

Comments