திருச்சியும் விஜியும்..
டில்லி சேர்ந்து
ஒன்றரை வருடத்திலயே தபால் துறையின் தமிழ் மாநிலத்தின் கீழ் இருந்த
திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்கு மாறுதல் கிடைத்தது ஒரு பெரிய கதை.
திரு பாலகுரு
அப்போது மகாலிங்கத்தின் இயக்குனர்.
பின்நாளில் தமிழகத்தின் முதன்மை அஞ்சல் தலைவராக ஆனவர். எனது மாறுதல்
விண்ணப்பத்தில் Pl Look into it. என்று மட்டும்தான் மார்ஜின் குறிப்பு எழுதி
இருந்தார். இந்த விண்ணப்பம் அமைச்சகத்தின் பல்வேறு செக்சன்கள் தாண்டி உள்துறை
அமைச்சகத்தில் ஒப்புதல் பெற வேண்டும். எல்லா செக்சனிலும் மகாலிங்கத்திற்கு
ரசிகர்கள் இருந்தனர். உதவத் தயாராக இருந்தனர். ஒரே சிக்கல் கடை நிலை ஊழியரிடம்
வேலை வாங்குவது.
எனது கோப்பினை
நானே எடுத்துச் செல்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. என்னைத் தவிர.
ஒவ்வொரு
செக்சனுக்காகப் போய் பாலகுரு சார் இதனை உடனே அட்டென்ட் பண்ணச் சொன்னார் என்று
சொல்ல வேண்டும். அடுத்த நாள் சென்று வாங்கி அடுத்த செக்சன் கொண்டு சென்று அதே
மாதிரி செய்ய வேண்டும். செக்சன் தலைவர்களுடன் மகாலிங்கம் பேசி விடுவார்.
எனக்கு என்
கோப்பைஎடுத்துக்கொண்டு கடைநிலை ஊழியர்
வேலை செய்யப் பிடிக்கவில்லை.
மகாலிங்கம்
நிதானமாகச் சொன்னார்.
“நீங்கள்
நேரிடையாக கோப்பு எடுத்துக் கொண்டு சென்றால் ஒரு வாரத்தில் இது முடிந்து விடும்.
இல்லை என்றால் ஆறு மாதம் கூட ஆகும் . ஒரு வருடம் கூட ஆகும். அப்போது நான் இங்கு
இல்லாமல் வேறெங்கும் சென்றிருக்கலாம். உங்களுக்கு உதவ ஆள் இல்லாமல் போகலாம். ஈகோவைக் கடாசி விட்டு வேலையைப்
பாருங்க பாஸ்”
பத்து நாட்கள் ஏதொ டிஸ்கசனுக்காக கோப்பு கொண்டு
செல்வது போல் உள்துறை அமைச்சகத்தின் முக்கிய
பிரிவுகளுக்கு சென்றேன். அப்போது பாராளுமன்றத்தில் இப்போது போல் ஆர்ப்பாட்ட
பாதுகாப்பு வளையங்கள் கிடையாது. எப்போதும் தொங்கிகொண்டிருக்கும்அமைச்சக ஊழியர்
அடையாள அட்டை போதும் அனைத்து வாசல்களும் கடக்க. பாராளுமன்றத்தின் நீண்ட
கொரிடார்களில் வேடிக்கை பார்த்தவாறு சென்ற போது ஒரு தடவை எம்.பி. ஒருவர் மீது
மோதி விட்டேன் . வடபுலத்துக்காரர். எந்த முகச் சுழிப்பும்
இல்லாமல் “கொய்பாத் நை பாய்” என்று சொல்லி
விட்டு சிரித்துசென்றார். தென்னகத்து மனிதர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை
இருந்ததன்வெளிப்பாடாகத்தான் அதனை நான் பார்த்தேன்.
சென்ற பிரிவுகள்
அனைத்திலுமே அரை மணிக்கு மேல் யாரும் காக்க வைத்ததில்லை. spell of Mahalingam! பத்து
நாள் முடிவில் ஆணை வாங்கி, அதனை நானே ஸ்டென்சில் கட் பண்ணி, உருட்டி போதுமான அளவு
பிரதிகள் எடுத்து அனைவருக்கும் தபால் எழுதி central registry ல் சேர்த்து, எனக்கு
ஒரு இருபது பிரதி எடுத்துக் கொண்டு திருச்சி புறப்பட்டு விட்டேன்.
.....................
திருச்சி
அலுவலகம் அப்போது ஆங்கிலேயர்களால் கை விடப்பட்ட ஒரு ஜெயிலில் இயங்கி வந்தது.
கொட்டடியில் எல்லா குமாஸ்தாக்களுக்கும் இருக்கைகள். தூக்கு தண்டனைக் கைதிகளுக்கான
பெரிய சிறப்பு அறையில் டைரக்டர்!.
கைதிகளுக்கான உணவுக்கூடம் டைனிங் ஹால். ஒரு ஓரத்தில் மன மகிழ் மன்றம். அதனை மேம்படுத்தி வசதிகள்
செய்யப்பட்டு வந்தது.
அங்குதான் அப்பா
சொன்ன அம்மையப்பன் staff பிரிவு பார்த்து கொண்டிருந்தார். இயல்பாக அவரிடம் சென்று
நான் ஹாய் பாஸ். நான் s
t இளங்கோவன் . டில்லி டைரக்டறேட்டில் இருந்து
வருகிறேன் என்றதும் வெகு உற்சாகமாக கை கொடுத்து எல்லா உதவியும் செய்தார். அங்கு
தோழர் கருப்பயா, பிரதாப சந்திரன், அய்யா சாமி நாதன், செய்யது
முகம்மது, தாமொதரக்கண்ணன், பிரேம்குமார் அதிசயராஜ்,வெங்கட்ரமணி,மதிவாணன், சுந்தரம், ரவிக்குமார், ரவிசுந்தரேசன், முத்துசாமி, ட்ர்ன்புள்,வசுந்தர,சுசிலா
தேவி,என ஒரு அருமையான டீம் இருந்தது .
உள்ளே ஒரு
முரட்டு மனிதர் ஸ்டெனோவாக அமர்ந்திருந்தார். அம்மையப்பன் அவரை விஜயபாஸ்கர் என்று
எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தோற்றத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத
இனிமையும், கனிவும் அவரிடம் அபரிமிதமாக இருந்தது. மகாலிங்கத்திடம் டில்லியில்
ஈர்க்கப்பட்டது போலவே விஜயபாச்கரும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். அப்போது
பொன்னகரில் ரூம் எடுத்து தங்கி இருந்த அவரது உதவியால் நான் பொன்னகரில் அவர் தங்கி
இருந்த வீட்டில் மாடியில் இருந்த இரண்டு
அறைகளில் ஒன்றில் குடி புகுந்தேன். விஜியும் ரவியும் ஒரு அறை. நானும் ஒரு கேரளா
நண்பரும் ஒரு அறையில்.
விஜி அருமையாக
பாடுவார். பெண்மை கலந்த நளினத்துடன் எல்லா பெண் ஊழியர்களுடனும் அவ்வளவு அழகாக
பழகுவார். எல்லோருக்கும் விஜி என்றால் அவ்வளவு இஸ்டம். சமையல் மன்னன்.
நான்
திருச்சியில் இருந்த காலத்தில் ஒன்று புரிந்து கொண்டேன். என்னைத் தவிர அந்த
அலுவலகத்தில் இருந்த அனைவருமே அஞ்சலகத்தில் பணிபுரிந்து விட்டுத்தான் இங்கே
நிர்வாக அலுவலகத்திற்கு வந்துள்ளார்கள். அனைவரும் அபரிமிதமான துறை அறிவு மிக்கவர்கள்.
எனது வார்ப்பு வேறு விதம். நான் எந்த போஸ்ட் ஆபிசிலும் வேலை பார்த்ததில்லை. நிர்வாக
அலுவல்தான் எனது பாதை. அங்கிருந்த அத்தனை பெரும் எனது இந்த சிக்கல் என் பணியில்
சிரமம் வராதவாறு அப்படி தாங்கிக் கொண்டார்கள். இது பின்னர் மதுரையில் நாங்கள்
எல்லோரும் கழித்த ஒரு கால் நூற்றாண்டிலும் தொடர்ந்தது என்பதை இப்போது நினைத்தாலும்
சிலிர்க்கிறது. நன்றி தோழர்களே.
அங்குதான்
நாங்கள் எங்களின் வலுவான தொழிற்சங்கம் ஒன்றைக் கட்டி அமைத்தோம், அங்கிருந்துதான்
நாங்கள் மதுரை மண்டலம் உருவாக்க சமர் செய்தோம், அங்கிருந்துதான் நாங்கள் எங்கள் தொழிற்சங்க
கூட்டங்களை ஆற்றுப் படுகைகளிலும், பறக்கத் ஓட்டல் பரோட்டக்களுக்கு நடுவிலும் சூடு
பறக்க நடத்தினோம்.
விஜய பாஸ்கரும்
நானும் பொன்னகரில் இருந்து நடந்தே எங்கள் அலுவலகம் வந்து விடுவோம். கூடவே ரவியும்.
அந்த நினைவுகள் அனைத்தும் அற்புதமானவை. பின்னர் பல வருடம் கழித்து எனது
மரியாதைக்குரிய சுந்தராம்பாள் மேடம் அவர்கள் பெரிய புராணம் தொடர்
சொற்பொழிவிற்காகதிருச்சி சென்ற போது நாங்கள் அவர்களை விஜியின் வீட்டில்தான் தங்க
வைத்தோம். வயதான தன து தாயுடன் விஜி
தில்லை நகரில் அப்போது வசித்து வந்தார். விஜி சாமி கும்பிடும் அழகும்,சமைக்கும்
அழகும், தினம் வீடு கூட்டி, அம்மாவுக்கு பணிவிடைகள் செய்து, மேடத்திற்கு உணவு தனியாக சமைத்து, எல்லாம்
முடித்த பின் மிடுக்கான உடையுடன் அலுவலகம்
செல்லும் கதையை அவர்கள் அப்படி
சிலாகித்தார்கள்.
திருச்சி நண்பர்
குழாம் அப்படியே மதுரையில் அடுத்த கால் நூற்றாண்டுக்கும் மேல் தொடர்ந்தது. திருச்சியிலேயே
தங்கி விட்ட விஜியும் பதவி உயர்வில் மதுரை வந்து சில காலம் தங்கினார்.
அம்மாவின் உடல்
நலமா அல்லது அடிக்கடி டூர் போக வேண்டிய வேலைக் கட்டாயமா என்று ஒரு dilemma வந்த
போது அம்மாதான் முக்கியம் என்று பணிக்கு VRS கொடுத்து விட்டு திருநெல்வேலி திரும்பி விட்ட விஜி இன்று
வரை எனது பெரும் நேசத்திற்குரிய அரும் மனிதன். அன்றொரு நாள் ஏதொ ஒரு திரைப்படத்தில்
விஜி மாதிரி ஒருத்தரைப் பார்த்து விட்டு போன் செய்தால் விஜி சொல்கிறார். ஆமாமா,, அந்தப்
படத்தில் சும்மா atmosphere artist ஆக நடிக்கக் கூப்பிட்டார்கள். போய் இருந்தேன் என்று வெள்ளந்தியாகச் சொன்னார்.
அதுதான் விஜி.




Comments
Post a Comment