சோமண்ணன் ..

சோமண்ணன்..

 

இன்று உன் பிறந்த நாள் என்று முக நூல் சொல்லி உன்னை வாழ்த்தி ஒரு வரி  எழுதச் சொல்கிறதே.  நீ இல்லையே அண்ணா அதனைப் படிக்க.

நீ  கல்லூரியில் படிக்கும் போதே வீரக்கலைகள் பலவற்றில் விற்பன்னன்..

சீலமான வாழ்வு நெறியைத் தேர்ந்தவன்.

உடல் நலம் பேணுவதில் சமரசம் செய்து கொள்ளமாட்டாய்.

விராதனுர் ஊர் மைதான நடுவில் சுருள் வாள் சுழற்றி DEFENSE POSTURES நிகழ்த்திக் காட்டும் போது உன் முகபாவனைகள் குருவம்மா சின்னம்மா வார்த்தைகளில் பார்க்கும் போதே பதறுமடா

கல்லூரி காலத்தில் நீ கராத்தே மாஸ்டர். மதுரை காக்கா தோப்பில் இருந்த உனது பயிற்சி கூடத்தில்தான் ஸ்டீல் பைப்பில் நுன்-சாக் தயார் செய்து பிற கராத்தே பள்ளிகளுக்கு அறிமுகம் செய்தாய்,

ஆங்கிலப் புலமையும் கூரிய மார்க்சிய சிந்தனையுமாக நீ அன்று இருந்த இடம் இந்திய மாணவர் சங்கம் (STUDENTS FEDERATION OF INDIA).

உனது  நெருங்கிய சகாக்கள் குழாத்தில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரான தோழர் மோகன் போன்றவர்கள் இருந்தார்கள்

எழுத்தும், பேச்சும்,உறுதிப்பாடான நிலைப்பாடுமாக அன்று நீ தவழ்ந்த அரசியல் மடி தோழர் ஐ.மா.பா. உடையது என்று பலருக்கும் தெரியாது.

 காதல் கடி மனம் புரிந்த நீ ஆசிரியர் பணி ஆற்றிய SEVENTH DAY ADVENTIST பள்ளியில் ஆக சிறந்த ஆசிரியராக இருந்து பின்பு கருத்து வேறு பாட்டால் விலகி தங்கம் திரையரங்கம் அடுத்தாற் போல் CHRYSTAL PRINTERS என்று ஓர் அச்சகத்தை தொடங்கினாய். (அந்த அச்சகத்தின் முன் புற இருக்கைகளில் அதிகம் தட்டு பட்டவர்களில் திரு ஜான் மோசஸ், திரு ராஜன் செல்லப்பா, திரு பாரதியன் ஆகியோரும் அடக்கம்.)

சத்துணவு திட்டம் தமிழகத்தில் முதல் முதலில் அமுல் ஆகிய போது மதுரை முழுவதும் ஹின்டாலியம் தட்டுகளை விநியோகம் செய்யும் வியாபாரத்தினையும் நீ முயன்று பார்த்தாய்.

பின்னாளில் ஒரு ஆன்மிகப் போராளியாக ஆக விதிக்கப்பட்டஉன்னால்  எப்படி இத்தனை லெளகீக முயற்சிகளில் ஜெயிக்க முடியும்?

 திரு சின்மயானந்தாவின் கருத்துக்கள் உன்னை  ஈர்க்க அரசியல் திசை மாறி நீயும்  சின்மயா சோமசுந்தரம் ஆக மாறிப் போனாய்.

சின்மயா சோமசுந்தரம் ஆக மாறிப் போன நீ  நிஜமாகவே களமாட ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான். உனது பொது வாழ்வில் வெற்றி பெற்ற போர்முறைகள்என்ற நூலில் இது பற்றி விரிவாக கூறியுள்ளாய்.

பொதுவுடமை சித்தாந்தவதியாக இருந்து பின் அரசியல் களத்தில் நேரேதிர் நிலைப்பாடு எடுத்தாலும் சோரம் போகாத ஒரு போராளியாக தொடர்ந்து வாழ முடியும் என்பதை நிரூபித்தவன் நீ.

கம்யூன் வாழ்க்கையினை உனது VHP அலுவல்கத்தில் நடைமுறைபடுத்தினாய். மாணவர் கூட்டம் ஒன்று அங்கே தங்கி , படித்து, ஒன்றாய் உண்டு, உறங்கி கலாசாலை சென்று வந்தது. பெருவாரியான நாட்கள் நீ சாப்பிடுவதும் அங்குதான்.

விஸ்வம் முழுவதும் எனது பரிஷத் என்று சொல்ல வேண்டிய நீ  இப்படி விஸ்வத்தில் உள்ள இந்துகளுக்கு மட்டும் பரிஷத் என்று ஆகிப் போய்விட்டாயே என்று வாதாட ஆரம்பித்தால் என்னை  உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாய். CAUSE AND EFFECT THEORY, DIALECTICAL MATERIALISM, NIGILISM, UTOPIANISM, POSTMODERNISM என்று எந்த தளம் எடுத்தாலும் நின்று பேசுவாய்.

பிள்ளைமார்களுக்கும், தலித்துகளுக்கும் உத்தபுரத்தில் ஏற்பட்ட பிரசினைகளை தீர்க்க உனது நண்பர்ஆவின் மேலாளர் திரு ஆதிமூலம் தலித்துக்கள் சார்பாகவும் , நீ பிள்ளைமார்கள் சார்பாகவும் நின்று முன்னாள் மார்க்ஸிய வாதியாகவும் ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் நின்று சமரசப் பேச்சு வார்த்தையில் நல் முடிவு காண வைத்து , தலித்துக்களை அந்த பிள்ளைமார்கள் கோவிலுள் மேள தாளத்துடன் நுழையவைத்து பரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதை அளிக்க வைத்தாய்.

சிறு தெய்வங்களை ஆராதித்துக் கொண்டு சிதில வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த கிராம பூசாரிகளை கிராம பூசாரிகள் பேரவை என்ற அமைப்பில் ஒருங்கிணைத்து அவர்கள் மூலமாக பண்பாட்டுத் தளங்கள் பலவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாய்.

ஆக்கிரமிப்பாளர்கள் நீட்டிய கரன்சிகள் மீது காறி உமிழ்ந்து சமரசம் செய்யாமல் பல சமர் நடத்தினாய்.

சம்பக்குளம் மயான மீட்பு, அரிட்டாபட்டி புராதன சின்னங்கள் பாதுகாப்பு, பெரியார் பஸ் நிலைய அருகாமை ஆக்ரமிப்புகள் மீட்பு, பல காலம் மூடிகிடந்த ரிபெல் சேதுபதி சிலை திறப்பு என்று தனது இறுதி நாள் வரை நீ களமாடிக் கொண்டேயிருந்தாய்.

 

பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல விடாமல் சென்று விட்டாயே அண்ணா.

 

சாதித்த நீ இருந்து என்னைப் பாதித்தவர்கள் பற்றி நானெழுதும் பத்திகளை விமர்சிப்பது போல் ஒரு மயக்கம். 

 

மயக்கம் விலகி கண் திறந்தால் நீ இல்லையே என்பதனை  இன்னும் மனம்  ஏற்க மறுக்கிறதே அண்ணா.  


Comments