துள்ளித்திரிந்த காலம் ..
ஐம்பத்து ஐந்து வருடம் கழித்தும் தொடர்ந்து என் மீது அன்பு அள்ளிப் பொழியும் என் பள்ளித் தோழன் போஸ் குல்லூர் சந்தை அணைக்கட்டில் மீன் பிடி குத்தகைதாரராக பத்து வருடம் முன்பு விருதுநகர் வந்தான். எப்பவாவது நல்ல விரால் வந்து விட்டால் போதும் உடனே சொல்லி அனுப்பி விடுவான். அந்த சமயத்தில் அவனுடன் பேசிச் சிரிக்கும் கணங்கள் அற்புதமானவை.. அவன் எழுப்பிய பால்ய நினைவில் சில...
காட்சி ஒன்று மதுரை- வில்லாபுரம்-late sixties..
நான், போஸ், ரவி மூவரும்தான் பால்யத்தில் நெருங்கிய நண்பர்கள்.
மேரி டீச்சர்- போஸ் அம்மா... வயோலா கிரேஸ் டீச்சர் - ரவி அம்மா..
மேரி டீச்சரும், வயோலா கிரேஸ் டீச்சரும் வில்லாபுரத்தில் அம்மாவுடனும் அப்பாவுடனும் அதே பள்ளியில்தான் ஒன்றாக வேலை பார்த்தார்கள்..போஸ் அப்பா பாக்யநாத வாத்தியார் செயிண்ட்மேரிசில் ஆசிரியர். ரவியோட அப்பா ஆறுமுகம் சார் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர்.. .. வெறகுக் கடை வைத்திருந்த பர்மாக்கார முனியாண்டி அண்ணன் பையன் கருப்பையா எங்கள் கூடவே ஒன்றாவதில் இருந்து படித்தவர். எங்களுக்கு ரெண்டு வருஷம் மூத்தவர். ஏன் அவர் என்கிறேன் என்றால் அப்போதே ஓங்கு தாங்காக உயரமான பையன். வில்லாபுரம் பள்ளிக்கூடத்தில் உயரமான பட்டியக்கல் படி ஏற நாங்கள் தடுமாறும் போதெல்லாம் கருப்பையா தனது நீண்ட வலுவான கரங்களால் தூக்கி உள்ளே போடும் சித்திரம் இன்னும் மனதில் இருக்கிறது.
அப்புறம் பியூன் பாண்டி வாத்தியார். பாண்டி அண்ணன் பள்ளி பியூன். அனால் அவரது மனைவி எங்கள் பள்ளியில் டீச்சர் என்பதால் நாங்கள் எல்லோரும் பாண்டி அண்ணனை பியூன் வாத்தியார் என்றுதான் அழைப்போம். அப்படித்தான் அழைக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது பாண்டி அண்ணன்!
தேவசஹாயம் வாத்தியார் மகள் ஜுன் ரோஸ் டீச்சர். அவர்களுக்கு காரணப்பெயர் அது என்பதை Flame of the forest என்பது செங்கொன்றைகளுக்கு எவ்வளவு பொருத்தமான பெயர் என்று பின்நாளில் புரிந்தபோதுதான் புரிந்து கொண்டோம்.
நாங்கள் மூவரும் ஊருக்குச் செல்லபிள்ளை. எங்கள் மூவரின் ஆசிரியக் குடும்பப் பின்னணி ஊருக்குள் எங்களுக்கு ஒரு நல்ல பேர் பெற்றுத் தந்திருந்தது. அதனாலதான் வள்ளுவர் படிப்பகம் வைத்து மார்க்சியம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த லோகநாதன் தோழர் எங்களைக் குறி வைக்க ஆரம்பித்தார். அதைப் பின் சொல்கிறேன்.
நிற்க .. இந்தப் பதிவு தங்கவேல் மற்றும் கருப்பயா அண்ணன் பற்றி.தங்கவேலு மட்டும்தான் அப்ப எங்கள் வகுப்பில் செழிப்பானவன்.அவனது அப்பா பால் பண்ணை வைத்திருந்தார். இவன் இடுப்பில் எப்பவும் பால் காசு கொஞ்சம் முடிஞ்சு வைத்திருப்பான். ஆனால் கஞ்சன். லேசா வெளியில் எடுக்க மாட்டான். ஒருநாள் நாங்கள் ஐந்து பெரும் அவனியாபுரம் செல்லும் வழியில் இருந்த மந்தித் தோப்பு வயல்கள் நடுவே சந்திக்கிறோம். இப்போது உள்ள காலனி, கல்யாண மண்டபம்,ஆஸ்பத்திரி,கடைகள் என எதுவுமே முளைத்திருக்காத virgin கிரீன் field.. அகலமான வரப்புகள். எப்போதும் ஓடும் ஸ்படிக சுத்த தண்ணீர். களவாடி வந்து வைத்த பிள்ளையார் கோவிலில் அடிக்கடி கிடைக்கும் சக்கரை பொங்கல், படிக்க தோதாக நிழல் மரங்கள்என்று இருக்கும் அந்த சுந்தர பூமி முழுப் பரீட்சைக்கு படிக்கும் இடம். கொடை விடுமுறைகளின் கொண்டாட்ட ஸ்தலம்.
“டீ குடிக்கலாமாடா தம்பி ? காசு வச்சுருக்கீகளா” என கருப்பையா கேட்க எங்கள் யாரிடமும் காசு இல்லை. தங்கவேல் ஒரு மாதிரி இடுப்பைத் தடவியவாறே அவனிடமும் இல்லை என்று சொல்லி விட்டான். லேசாக சந்தேகப்பட்ட கருப்பயா ஒரு திட்டம் தீட்டினார். ஒரு அகலமான வாய்க்கால் எதிரில் இருந்தது. நடுவில் ஓடும் சிலு சிலு தண்ணீர். ஒரே தவ்வில் வாய்க்காலைத் தாண்டினால் தானே டீ வாங்கி தருகிறேன் என்று கூறி வரப்பில் உட்கார்ந்து கொண்டார். நான் தவ்வி விழுந்தேன். ரவியும் தாண்டவில்லை போசும் தாண்டவில்லை. தங்கவேல் அப்பவே உயரமானவன். கருப்பையாவுக்கும் அவனுக்கும் இடையில் பலசாலி யார் என்று ஒரு latent cold war இருந்து கொண்டே இருந்தது. தம் பிடித்துக் கொண்டு அந்த அகலமான வாய்க்காலை தங்கவேல் வெறியுடன் தாவிக் கடக்கவும், அவன் முடிந்து வைத்திருந்த சில்லறை முடிச்சு நழுவி காத்துக் கிடந்த கருப்பையா கைகளில் சேரவும் சரியாக இருந்தது. நோகாமல் அவன் பாராமல் அதை எடுத்துக் கொண்ட கருப்பயா ஒன்றும் தெரியாதது போல் பிரமாதம் தங்கவேல், வா எல்லோரும் டீ சாபிடலாம் நான் வாங்கி தறேன் என்று எழ.. பொறி தட்டி தங்கவேல் இடுப்பை தடவி அசட்டு முழி முழிக்க, சில பல தர்ம அடிகளைக் கொடுத்த பின்னர் உண்மையை ஒத்துக் கொண்ட தங்கவேல் எல்லோருக்கும் டீ வாங்கித் தந்தான். இது பெரிய சாகசம் இல்லையென்றாலும் அன்றைய சின்னப் பசங்க அஞ்சு பேர் சிரிச்ச மனமார்ந்த சிரிப்பு இருக்கே அது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது..
காட்சி இரண்டு.. திருப்பரங்குன்றம் 1994ம் வருடம்
டில்லியில் இருந்து திருச்சிக்குப் பணி மாற்றம் பெற்று, பின்னர் மதுரைக்கு ஒதுக்கிய மண்டல அஞ்சல் அலுவலகம் மதுரையில் தொடங்கப்படாமல் சென்னைக்காரர்களால் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பதை டில்லி தலைமையக வாயிலாக அறிந்து , கூடுதல் அஞ்சல் தலைவர் அலுவலகம் மதுரைக்குக் கொண்டு வரப் போராடி வென்று, மதுரையில் கால் பதித்து வீட்டில் இருந்து அப்பா வாங்கிக் கொடுத்த அப்போதுதான் அறிமுகமாகி இருந்த TVS champ ல் அலுவலகம் செல்லும் ஆனந்தம் கிடைக்க 30 வயதுக்கு மேலாகி விட்டது. அதன் பின்பு கல்யாணம் முடிந்து முதல் பாப்பா மொட்டைக்கு திருப்பரங்குன்றம் சென்றிருந்த போது கருப்பையாவை நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்தேன்.
இன்னும் உயரமாக இன்னும் வலிமையாக முடி நரைத்தும் கம்பிரமாக இருந்த கருப்பையா திடுமென திருப்பரம்குன்றத்து கோவில் பிரகாரத்தில் முன்வந்து “இளங்கோ நல்ல இருக்கியாடா” என்றதும் எனக்கு ஏக மகிழ்ச்சி.
“கருப்பயா. நல்லா இருக்கியா?. சாமி கும்பிடவா , கருப்பயா?”
“ ஏய் என் பேத்திக்கு மொட்டையப்பே .. அவுக எல்லாம் உள்ளே இருக்காக. நான் சீட்டு வாங்க வந்தேன். நீ எங்கப்பே இந்தப் பக்கம்.”
நான் மெதுவே சுதாவை சுட்டிக் காட்டினேன்.
“ ஏய் என் மகளுக்கு காது குத்தப்பே.. அவுக அந்தா இருக்காக. நான் சீட்டு வாங்க வந்தேன். உன் பேத்திக்கு எங்க ஆசிர்வதமப்பே”
நான் மறுபடி வந்ததும் என் மனைவி கேட்டாள்..
“ஏங்க, யாரது?”
நான் நிதானமாகச் சொன்னேன்.
“ஏய் அது என் கிளாஸ் மேட்டப்பே. அவன் பேத்திக்கு மொட்டையடிக்க வந்திருக்கான். வா நாம நம்ம பிள்ளைக்கு மொட்டையடிக்க போவோம்.”
காட்சி மூன்று - வில்லாபுரம் கண்மாய் – late sixties
சின்ன வயதில் வெட வெட என்றிருந்த வேலுத்தம்பிக்கும் எனக்கும் நாடார் வித்யாசாலையில் படிக்கிறப்ப எப்பவும் சண்டை நடந்து கொண்டே இருக்கும். அவன் தன்னை வீரத் தளபதி வேலுத்தம்பி என்று அழைத்துக்கொண்டு ஓயாமல் கடுப்பேத்துவான்..பள்ளிக்கூடத்தில் வைத்து நடத்திய சின்ன சின்ன தகராறில் எல்லாம் நானே ஜெயித்து அவனது ஈகோவை மிகக் கடுமையாக பாதித்திருந்தேன் என்பது எனக்கு தெரியாது.. ஒரு பெரிய மோதல்.. தனபாலும் அம்மாவசையும் நடுவராக வைத்து வில்லாபுரம் கண்மாயில் நடத்தி விடுவது என்றும் அதில் ஜெயிப்பவன் சொல்வதை தோற்பவன் அந்த வருஷம் பூரா கேட்க வேண்டும் என்றும் கலிபுல்லா முடிவெடுத்தான். வேலுத்தம்பி சரியென்று சொல்லிவிட்டான்.
இப்போதைய வில்லாபுரம் ஹவுசிங் போர்டு அன்றைய வில்லாபுரம் கண்மாய். நீரின்றி நெடுநாள் இருந்த கண்மாயில் ஒரு பக்கம் சோளக்காடு வில்லாபுரத்தில் இருந்து ஜெய்ஹிந்த் புறம் வரைக்கும் நீண்டிருக்கும். .கண்மாய் நடுவில் மீனாட்சி டாக்கிஸ் திசையில் ஒரு மையத் திட்டு.சுற்றி நிறைய மணல். அதுதான் எங்கள் ring என முடிவானது. குண்டுகட்டாக தூக்கி மணலில் போடுதல், பின்பக்கப் பிடி வழுவாமல் இருக்கிப்பிடித்தல்,காலைத்தட்டி விட்டு நெஞ்சில் உட்காருதல்என rules போடப்பட்டது. எல்லாவற்றிலும் நான் ஜெயிக்க வெறியான வேலுத்தம்பி செய்வதறியாது கீழே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து சாவுடா நீ இதோட என்று என்னை நோக்கிக் கத்தியவாறே எரிய, அது பாதி தூரத்திலேயே என்னை நெருங்காமல் பொது பொது என்று உதிர்ந்து விழுந்தது.
பய புள்ள கோபத்தில் கல்லுக்கும் கரம்பைக்கும் வித்யாசம் தெரியாம எறிஞ்சுட்டன்.
சில பல வருடம் முன்பு தியாகராஜர் கல்லூரியில் ஒரு வேலையாகப் போனபோது கலிபுல்லாதான் சொன்னான். வேலுத்தம்பி இங்கதான் லெக்சரர்.. பாப்பமா என்று. போனால் பயபுள்ள FIP போய்இருந்தான்.. பழைய நினைவுகளை அலசியவாறே வந்து சேர்ந்தோம்.
(வளர்வேன்):



Comments
Post a Comment