பிளிக்சும்.. மகாலிங்கம் சாரும்..பின்னே அண்ணன் B.D.BAWEJA வும்..






 டில்லி கரோல் பாக் W.E.A வில் இருந்த சுந்தரேசனின் அறையில் விருந்தாளியாக 29 .7.1980 அன்று நான் சென்று  இறங்கியவுடன் , சுந்தரேசன்  செய்த முதல் கார்யம் பக்கத்து நாயர் மெஸ்சிற்குக்  கூட்டிச்  சென்று ஒரு மாத சாப்பாட்டு டோக்கன் வாங்கச் செய்ததுதான். மாலையே பக்கத்தில் இருந்த இன்னொரு மேன்சனில் காலியாக இருந்த ஒரு அறையினைப் பேசி அதற்கும் அட்வான்ஸ் கொடுக்கச் செய்தான். மாலையே அந்த அறையில்  எனது பொருட்களை வைத்து விட்டேன். அன்று பின் மாலைதான் டில்லியில் tremor. நான் வந்து இறங்கிய அன்று மாலையே நிலம் நடுங்கிய நாளது.!சில செகண்ட் ஆட்டத்திற்கே எல்லோரும் வெளியில் ஓடி ,பொது வெளியில் கூடி ,பீதி குறைந்த பின்  உள்சென்ற மறக்க இயலா மாலை அது.

இரவு டின்னருக்கு  பக்கத்தில் ரேகர்புரா மார்க்கெட் அருகில் ஒரு பாதாள விடுதிக்கு அழைத்து  சென்றான் சுந்தரேசன்.. அங்குதான் நான் முதல் முதலில் barbeque chicken என்ன என்பதைப் பார்த்தறிந்தேன். ( பின்னர் சானக்யபுரியில் வெங்கிடு Ham Burger என்றால் என்ன என்பதைச் சொல்லிக்கொடுத்தது ஒரு கதை)

அந்த விடுதியின் மங்கிய வெளிச்சத்தில் ஐந்து ஆறு பேர் வட்டமாக அமர்ந்து ஆரவாரமாக உணவு அருந்திக்கொண்டிருந்தனர். சுந்தரேசன் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தான். அதில்  இருவர் பச்சக் என்று உடனே மனதில் ஒட்டிக் கொண்டார்கள்.

“இவர் ராஜலிங்கம். சிவில் சர்விஸ் படித்துக் கொண்டிருக்கிறார்” என்று ஒரு அடர்ந்த மீசை கொண்ட ஒரு இளைஞரைசுந்தரேசன்  அறிமுகம் செய்தான்.( எனக்கு அப்போது தெரியாது. அவர்தான் ஒரு இருபது வருடம் கழித்து எனது இயக்குனராக மதுரை வரப் போகிறார் என்று) அடுத்து ஒரு சிவந்த துறு துருப்பான  ஒரு நண்பர். அவரது பெயர் மகாலிங்கம் என்றும் நான் பணியில் சேரப் போகின்ற சஞ்சார் பவனில் இயக்குனரின் உதவியாளர் என்றும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மகாலிங்கம் வெகு இயல்பாக  ஹல்லோ பாஸ் . என்று என்னிடம் வெகு நாட்கள் பழக்கம் போல்  ஒட்டிக்  கொண்டார். நான் உடனடியாக அவர் மீது அபரிமித அன்பு கொண்டேன்.

அமைச்சரகத்தில் தபால் துறையா அல்லது தொலை தொடர்புத் துறையா என்று தேர்ந்தெடுக்கும் சமயம் வந்த போது அங்கு வந்த மகாலிங்கம்  தமிழ்நாட்டில்  தொலை தொடர்புத் துறையில் நிர்வாகப் பிரிவுக்கு இருக்கும் காலியிடங்களை விடவும் தபால் துறையில் நிர்வாக அலுவலகங்களில் உள்ள காலியிடத்தின் எண்ணிக்கை அதிகம் என்று எடுத்து சொல்லி என்னை தபால் துறையினைத் தேர்ந்தெடுக்கச்  செய்தார்.

இப்படியாக, இந்திய தபால் துறை தலைமை அலுவலகத்தில் SR section எனப்படும் Staff Relations Sectionல் JM Panjwani இயக்குனராகவும் BD Baweja , Desk Officer ஆகவும் முன்னிலை வகிக்க 30.7.1980 அன்று நான் குமாஸ்தாவாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டேன்.

நான் எனக்குரிய இருக்கையில் அமர்ந்த அடுத்த நிமிடம் மகாலிங்கம் என்னை பக்கத்தில் இருந்த ADMN செக்சனிற்கு கூட்டிச்சென்று அதன் செக்சன் ஆபிசர் தப்ளியாளிடம் அறிமுகம் செய்து வைத்தார். கை குலுக்கிய உடன் நான் அவரிடம் கேட்டேன். transfer application கொடுக்க என்ன நடைமுறை? ( excuse me,  what is the procedure to change the room?) மகாலிங்கம் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் என்னைக் கூட்டிச் சென்று அறிமுகம் செய்து வைத்தவர் ஒரு தமிழர். பெயர் கிருஷ்ணன்.

“நடைமுறை சொல்லனும்னா PTI கேண்டீனில் ஒரு ஆனியன் ஊத்தப்பம் சொல்லணுமே” என்று கிருஷ்ணன் சிரித்தவாறே சொல்ல அடுத்த எங்கள் பயணம் எங்கள்  வளாகத்தை அடுத்து இருந்த PTI கேண்டீன். வேலையில் சேர்ந்து  சீட்டில் முழுதாய் பத்து நிமிடம்  உட்காரவில்லை. அதற்குள் இந்த sojourn.

அப்படித்தான் இருந்தது அன்றைய அரசு அலுவல். குளிர் காய சாலை நடுவில்  உள்ள பட்டேல் சிலையைச் சுற்றி உள்ள புல்வெளியில் அத்தனை துறை அலுவலர்களும் கூடி இருப்பர். ஆல் இந்தியா ரேடியோ, ரிசர்வ் வங்கி, UNI, PTI, election commission, shram  sakthi bhavan( Ministry of Energy and Power), DGS&D (Director General of supplies and disposals) என்று சுற்’றியுள்ள அத்தனை அலுவலகங்களில் இருந்தும் அங்கு பிரதி நிதிகள் வந்து குளிர் காய்வதும் , ஆகஸ்ட் 15 மற்றும்  ஜனவரி 26 க்கு முன்பான fly fast rehearsal வானத்தில் நடப்பதை பார்க்க 18 வது மாடிக்கு லிப்டில் சென்று அங்கிருக்கும் பாரபெட் சுவற்றில் படுத்துக்  கொண்டே பார்த்து  வான் வேடிக்கை கானுருவதும் என பக்கத்தில் இருந்த பெருவாரியான ஊழியர்களுக்கு வேலைக்கு வருதல் என்பது ஒரு ஜாலியான அனுபவம். மதிய சாப்பாட்டை பெருவாரியானவர்கள் தங்கள் பேன்ட் பாக்கெட்டின் பின் புறம் செருகி வைத்திருப்பர்கள். சுருட்டப்பட்ட நான்கு சப்பாத்திகள். போதாது பேன்ட் பாக்கெட்? கேண்டினில் சப்ஜி மலிவாக கிடைக்கும். அவ்வளவுதான், சும்மா நம் போல 3 course meal வளைத்துக் கட்டுவதெல்லாம் கிடையாது.

நானும் மகாலிங்கமும் தினமும் சந்தித்துக் கொள்வோம். தனது பாசிற்கு வரும் தொலை பேசி அழைப்புகளை மகாலிங்கம் HANDLE செய்யும் அழகினையும் அவரது கொஞ்சும் ஆங்கிலத்தினையும் பார்க்கவே அவ்வளவு ஆசையாக இருக்கும். அவரது திறமை மட்டுமே  அவரைப் பின்னர் பல் வேறு உயரங்களுக்குத் தூக்கி சென்றது. ( இந்தியப் பேரரசின் வெளி விவகாரத்துறை வகுத்த EXIM POLICY உருவாக்கக் குழுவில் உறுப்பினராக அவர் பின்நாளில் டோக்யோ சென்றதையும், அண்டர் செக்ரட்டரி ஆன பின்பு ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் registrar ஆக இருந்து MD மாணவர்களுக்கான selection தேர்வுகளை எந்த பிரச்சினையும் இன்றி transparent ஆக நடத்தி அரசின் பாராட்டைப் பெற்றதையும், டெபுடேசனில் CBI சென்ற போது சிறந்த பணிக்காக விருது பெற்றதையும் கேள்விப்படும் போதெல்லாம் அவ்வளவு மகிழ்வாக இருக்கும். அத்தனைக்கும் தகுதியான ஒரு நேர்மையான மனிதன் அவர்)

நிற்க மகாலிங்கத்திற்கு எனது மதுரை slang ரொம்பப் பிடித்தது போலவே இன்னொருவருக்கும் பிடித்திருந்தது.  அவரது பெயர் Felix Samuel jebaraj. சென்னைப் பையன். டிப்பிகல் சென்னை பையன். அப்பா புதுப்பேட் சர்ச்சில்  பாதிரியார். சகோதர்களும் சகோதரிகளும் அமெரிக்காவில். இவன் யமுநை நதி வெள்ளக் கட்டுப்பாடு துறையில் உதவியாளர். காலியாக இருந்த பிலிக்ஸ் அறைக்கு மகாலிங்கத்தின் சிபாரிசில் நான் ரூம் மேட் ஆகப் போனேன்.

அடடா அந்தக் காலம் இருக்கிறதே!


 சென்னை நட்பின் பாசாங்கற்ற இயல்பினையும் நெல்லைப் பகுதி மனிதர்களின் நேசமிகுந்த உதவும் , பழகும் தன்மையினையும் , உளமார எப்படி ஒருவரை உபசரிப்பது என்பதையும், எந்தப் பதவியில்  இருப்பவர்களையும் எப்படி அனாயசமாக கையாள்வது என்பதையும் மகாலிங்கத்தின் மூலமும் பிளிக்சின் மூலமும் ஆகத்தான் நான் ஓரளவு கற்றுக்கொண்டேன்.

இரவு படுக்கப் போகும்  முன்  இரண்டு தினசரி பயிற்சிகள் தவறாமல் நடக்கும். நான் ஒரு தலைப்பு கொடுப்பேன். அது பற்றி ஆங்கிலத்தில் extempore ஆக,  ஏகப்பட்ட நான்கு வார்த்தை வசவுகளுடன் சிரிக்க சிரிக்க பிலிக்ஸ் 20 நிமிடம் பேசுவான். பிறகு பிலிக்ஸ் கொடுக்கும்  தலைப்பில் நான் மதுரை  ஸ்லாங்கில் 20 நிமிடம் பேச வேண்டும்.

தூங்கப் போகும் முன் அப்போது பிரபலமாக இருந்த punky town,  la la rasputin, மேரிஸ் பாய் ஜீசஸ் கிரைஸ்ட், லவ் டு லவ் யு பேபி ,ஜான் லென்னநின் you may say i am a dreamer but i am not the only one பாடலையும்,அது போன்ற ஏகப்பட்ட தேர்வுகள் அடங்கிய ஆல்பத்தையும்  தனது compact ரிகார்டரில் பாட விட்டு அதன் அர்த்தத்தை பிலிக்ஸ் எனக்கு சொல்லித் தருவான்.

டில்லியில் தமிழில் பேசிக் கொண்டே வரும் யுவதிகள் எங்களைக்  கடக்கும் போது இந்திக்கோ அல்லது ஆங்கிலத்திற்கோ மாறி விடும்  போது பிலிக்ஸ் கலாய்க்கும் கலாய்ப்பு இருக்கிறதே, அஞ்சவே மாட்டன். அவர்களைப் போக விட்டு கொடுப்பான் பாருங்கள் ஒரு குரல்.

“யக்கோவ், கமலத்தக்கா, யக்கோவ்..”

டில்லியின் ரீஜண்டான ஜனம் எல்லாம்  கலீஜாயிடும். பேஜார் பையன் அவன். எனது கல்லூரி  நண்பர் ஒருவர் பெயர் சுடலை முத்து. அவருக்கு டில்லியில் ரயில்வேயில் வேலை கிடைத்து இங்கே வந்தவுடன் தனது பெயரை கண்ணன் என்று மாற்றிக் கொண்டார். அவர் என்னைப் பார்க்க வரும்போது இதனைக் கேள்விப் பட்ட பிளிக்சிற்கு சுடலை என்ற பெயர் ரொம்பவும் பிடித்துப் போனது. அவர் எப்ப வந்தாலும்  வாய்யா சொடலை.. என்றுதான் அழைப்பான். இல்லங்க என் பேர் கண்ணன் என்றால் ஒத்துக் கொள்ளவே மாட்டன்.. த்தா உன் பேரு சொடலதானைய மதுரையில. இங்க வந்து  பேர மாத்திடுவியோ? நீ சொடலைதான்யா. என்று அவரை  விடவே மாட்டன். மனுஷன் அப்புறம் மாறுதல் ஆகிப் போகும்  வரை எங்கள் அறைப் பக்கமே தலை  வைத்துப்  படுக்கவில்லை.


(அப்பாவுக்கு பிளிக்சை அப்படிப் பிடிக்கும். அவர் நல்லாசிரியர் விருது வாங்கப் போனப்ப பிளிக்சைப் பார்க்கச் சொன்னேன். அப்பா அவரது நண்பர் யுசுப் சாருடன் சென்றிருந்தார். citation, மெடல்  வித் 5000 அப்போது.  அப்பா  பிளிக்சிடம் நல்ல ஒரு நட்சத்திர விடுதி எங்கே இருக்கிறது என்று கேட்க பிலிக்ஸ் அப்பாவையும் யுசுப் சாரையும் அங்கு கூட்டிப் போய் இருக்கிரான். மூன்று பெரும் சேர்ந்து சாப்பிட்டு அந்த 5000 தீரவும்தான் வெளியில்  வந்திருக்கிறார்கள். பிலிக்ஸ் எனக்கு போன்செய்து சொல்கிறான். நீ சடையா. அப்பா தான்யா சூப்பர்!)

எங்களது எல்லா வீக் எண்டும் மகாலிங்கம் சார் அறையில்தான். சப்தர் ஜங் சென்றுவிட்டு  பின்னர் சரோஜினி நகர் மார்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வந்தபின் தாணுவும் மகாலிங்கமும் சமைக்க ஆரம்பிப்பார்கள். அப்படி ஒரு சமையல். அதனை அவர்கள் பரிமாறும் விதம். சாப்பிட்ட தட்டை எடுக்க விடாமல் மகாலிங்கம் உரிமையுடன் வந்து அதனைப் பிடுங்கி கொண்டு leave it i say என்று சொல்லும் விதம்...( அலுவலகத்தில் மகாலிங்கத்திடம் பேச பெரிய பெரிய அதிகாரிகளே கொஞ்சம் கவனம்  சேர்ப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மனிதன் எங்களிடம்  அப்படி அன்பைப் பொழிவார். )சாப்பிட்டு முடிந்த பின் அந்த பர்ஸாதியின் கோடை இரவுகளில் வெளியில் அமர்ந்து விடிய விடிய பேசிச் சிரிப்போம். அடுத்த நாள் விடியும் போது மகாலிங்கம் bread டோஸ்ட் ஆம்லட் கரம்  சாய் என்று எங்களை எழுப்புவார்!

எனது டெஸ்க்ஆபிசர் பெயர் B.D.BAWEJA. ஆங்கில நடிகர் கிரி கிரி பெக்கினை  நினைவூட்டும் தோற்றம். அழகான ஒரு பிரீப் கேசுடன் தினமும்  கெத்தாக அலுவலகம் வருவார். செக்சனில் இருப்பவர்களில் அடிக்கடி போய் அவரிடம் சந்தேகம் கேட்காதவன் நான் என்பதாலும், ஓரளவு மனச்சாட்சிக்குப் பயந்து வெளியில் அடிக்கடி சுற்றாமல் வேலை பார்ப்பவன் என்பதாலும் என்னிடம் அவருக்கு ஒரு SOFT CORNER இருந்தது. பஞ்சாபி. அவரது மனைவி  டாக்டர். ஒரே பையன், மாற்று த் திறனாளி.. வசந்த் விகாரில் அவரது வீடு இருந்தது.  பெரிய அழகிய இல்லம் என்று பக்கத்து சீட் நண்பர் சொல்வார். டில்லி குளிர் போலவே டில்லி வெயிலும் மிகக்  கடுமையானது.  அழுகை அழுகையாக வரும். இங்க வந்து  மாட்டிட்டோமோ என்று எண்ணம் வரும் சமயங்களில்.

 அது மாதிரி ஒரு விடுமுறை கோடைப் பகலில்  BOB Probationry officer பரிட்சைக்கு படிப்போம் என்று குதுப் மினர் சென்று விட்டோம். எனக்கும் பிளிக்சிற்கும்  ஒரு பழக்கம்  இருந்தது. GK படிக்க அந்த அந்த இடங்களுக்கே போய் விடுவது என்று முடிவெடுத்தோம். அப்படித்தான் குரு தேஜ் பகதூர் தலை துண்டிக்கப்பட்ட குருத்வாராவும்,கஷ்மீர் கேட்டும்,லோடி தோட்டமும்,நிஜாமுதீனும்,சப்தர்ஜங் டூமும்,பிரகதி மைதானமும்,இந்திரப் பிரச்தமும்,GB ரோடும்,செங்கோட்டை ஜும்மா மசூதியும், சாந்தினி சவுக்கின் இருட்டு சந்துகளில் வாடிக் கொண்டிருக்கும் சுல்தான் சொந்தக்காரர்களும்,காசியாபாத் செல்ல ஒட்டக வண்டிகளும், ISBTல் சங்கமிக்கும் அனைத்து மாநில ஜனமும், முத்ரிக,தீவிர் முத்ரிக என்று ஓடிய ring ரோடு பேருந்துகளும், எங்கள் வாசிப்பு தளங்கள் ஆகின. தேர்வில் நாங்கள் தேறவில்லை. ஆனால் இரண்டு முக்கியமான விசயம் அதன் பின் நடந்தது.

அமெரிக்காவில் இருந்து பிளிக்சின் அக்கா வந்ததால் அவளைப் பார்க்க பிலிக்ஸ் சென்னைக்கு பதிநைந்து நாள் விடுப்பில் சென்று விட்டான் . எனக்கு மஞ்சள் காமாலை வந்து விட்டது.  மகாலிங்கமும் ஊரில் இல்லை.  தாணு அலுவலக டூர். நான் மதுரை செல்ல முடிவெடுத்து டெஸ்க் ஆபிசர் அறைக்குள் போனேன்.

“கயூம் பை. இத்னா கம்ஜோர் ஹோ கயி”

‘ சாப். ஜான்டிஸ், 15 நாள் லீவ் வேணும்.”

‘நீ ரயிலில்  போக ரெண்டு நாளாகும். சாப்பாடு பத்தியமாக இருக்கணும். போவதற்குள் எதாவது பிரச்சினை என்றால்? இரு நான் உன்னோடு மாலை வருகிறேன். ஒரு டாக்டரைப் பார்த்து விட்டு முடிவெடுப்போம் “

மாலையில் அவரது லேம்பியில் போய் நாங்கள் இறங்கிய இடம் வசந்த் விகார். என்னைப் பார்த்த டாக்டர் அவரது மனைவி!

“நீ  கண்டிப்பாக நீண்ட பயணம் செய்யக் கூடாது. மாடியில் ஒரு அறை உனக்காக சாப் ஒதுக்கச் சொல்லி விட்டார். ஒரு வாரம் உனக்கு லீவ் கொடுத்து விடுவார். பத்தியச் சாப்பாடு பீகாரி உனக்கு தருவார். ஜஸ்ட் ரிலாக்ஸ்..”

நான் அதிர்ந்து நின்றேன். பவேஜாவிற்கும் எனக்கும் இடையில்  எது பொதுவான இழையாக இருந்தது என்று எனக்குப் பிடிபடவில்லை. வடவர்கள் ஒன்றும்  அப்படி உடனே நம்மை வீட்டுக்கு விருந்தாளியாக எல்லாம் அழைத்துச் சென்று பண்டிதம் பார்த்து விட மாட்டார்கள். ஆனால் அது நிகழ்ந்தது. ஒரு வாரம் அங்கிருந்தேன். உடல் தேறி உளம் கசிந்து அண்ணன் பவேஜாவிடம் இருந்தும் அண்ணியிடம் இருந்தும் விடை பெற்றேன்.

அதற்குப்  பின்  ஒரு ஆறு மாதம் கழித்து எனக்கு திருச்சிக்கு  மாறுதல் ஆணை வந்து விட்டது. நானக்புரா கம்யுனிட்டி  ஹாலில் பிரிவுபசார விழா. ;பவேஜா அப்போது சொல்கிறார். ‘

“i dont know why. but i always liked this rascal. as an elder brother i grieve to see him off. love you ilango, wherever you ஆர்.”

இன்று வரை என்னால் அந்த குளிர்  மாலையில் நான் பெருக்கிய கண்ணீரை மறக்க முடியவில்லை.

பவேஜா அண்ணனையும் தான்.


Comments