வேம்பு மாமா பகுதி 2
“ நம்ம துணை சபாநாயகர் இலட்சுமணன் தம்பிக்கு உதவி செய்வார். அவனைப் புறப்படச் சொல்லுங்க. ஒன்னும் பயப்பட வேண்டாம். “
நான் டில்லி சென்று சேர்ந்ததும், எனது எதிர் வீட்டு ராதா கிருஷ்ணன் நண்பன் மூலம் டில்லியில் போய் இறங்கியவுடன் தங்குமாறு விடுதி அவன் ஏற்பாடு செய்ததும் , கரோல்பாக் W.E.A. வும் ரேகர்புரா மார்கேட்டும் எங்கள் முகவரியானதும் பிலிக்ஸ்,மகாலிங்கம், என்று என் வாழ்வியல் முறைகளில் பெரும் பாதிப்பு நிகழ்த்திய நண்பர்களைஅங்கு சந்தித்ததும் எனது டில்லி வாழ்வும் வேறு சமயம்.
மாமா கொடுத்த கடிதத்துடன் துணை சபாநாயகரை பார்க்க போனால் அவரது உதவியாளர் அலட்டிய அளப்பலில் வெறுத்துப் போய் அவரைப் பார்க்காமலே திரும்பி விட்டேன். (நான் தங்குவதற்குத்தான் விடுதி இருந்ததே என்று )சில நாள் சென்ற பின் நானும் பிளிக்சும் அப்பா ஜஸ்டிஸ் மோகனிடம் வாங்கிய கடிதத்தை எடுத்து கொண்டு அந்த நடனக் கலைஞர் வசித்த பங்களாவினை அடைந்தோம். நிச்சயம் தெரியும் தங்க இடம் தேடி இங்கு வருவது வீண் என்று. இருந்தாலும் டில்லி பணக்காரர்கள் வசிப்பிடம் காண ஒரு சந்தர்ப்பம் என்று போனால் அந்த அம்மணி நன்றாகவே உபசரித்தார்கள். தங்குமிடம் பற்றி சொல்லியதும் அடடா , செர்வன்ட் குவாட்டர்ஸ் கூட காலியாக இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். அவர்கள் வருத்தம் காணச் சகிக்காமல் நாங்கள் மவுனமாகத் திரும்பி விட்டோம்.
டில்லி அலுவலகத்தில் கிடைத்த நட்பில் பல இடங்கள் மாறி ஒரு வழியாக நானும் பிளிக்சும் நானக்புரா அரசு குடியிருப்பில் தப்லியால் வீட்டின் ஒரு அறைக்கு SUB LETTEE ஆகப் போனோம். இரண்டு கட்டில். ஒரு அட்டாச்ட் பாத். நன்றாக இருந்தது. அதற்கு முன் இருந்த பர்சாத்தி படு மோசம். வெயில் காலத்தில் பெரும் துயரம். பிலிக்ஸ் அப்பா சென்னையில் சர்ச் பாதிரியார். இவன் YAMUNA FLOOD CONTROL UNITல் அலுவலர். அக்கா அண்ணன் எல்லாம் அமெரிக்காவில். பீலிக்ஸ் தமிழ் அவ்வளவு கொஞ்சலாக இருக்கும். அவனது ஆங்கிலம் வேற லெவல். முழுக்க அந்த நாலெழுத்து ஆங்கில வசவுகளால் நிரவி இருக்கும். தமிழில் சென்னையின் பிரத்யேக மூன்றெழுத்து வசை அனாயசமாக துள்ளி வரும்.
பக்கத்து தெருவில் உள்ள பர்சாதியில் மகாலிங்கமும், தாணுவும் .மகாலிங்கம் அப்போது எங்கள் இயக்குனரின் நேர்முக உதவியாளர். பின் எங்கள் அமைச்சரின் தனி உதவியாளராகி, பிற்காலத்தில் டெபுடேசனில் CBI அதிகாரியாகி, ரிடயர்ட் ஆகும் போது சப்தர்ஜங் மெடிக்கல் கவுன்சிலில் MD படிப்பிற்கான தேர்வுகளின் நிர்வாக இயக்குனராக ஒய்வு பெற்றவர். தென்காசி பக்கம் சுரண்டை அவரது ஊர். நிஜ நேசன். நேர்மைக் கனல். பேரழகன். ஆங்கில விற்பன்னன். தாணு MMDC அதிகாரி. மிகச் சிறந்த குக். இவர்கள் இரண்டு பெரும் அப்படி அன்பைப் பொழிவார்கள் என் மீதும் பிலிக்ஸ் மீதும். வார இறுதியில் எல்லாம் அவர்கள் அறைதான். அருமையாகச் சமைத்துப் போடுவாகள். சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிட்ட தட்டை மகாலிங்கம் கழுவ விட மாட்டார். அப்படி ஒரு அதீதப் பிரியர்.அவர் சொல்லும் leave it i say இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இப்போது, மறுபடியும் வேம்பு மாமா ஆச்சர்யப்படுத்திய மறக்க முடியாத அந்த இரண்டாம் நிகழ்வுக்கு வருகிறேன்..
அடிக்கடி மாறிக் கொண்டே இருந்ததால் எனது அப்போதைய முகவரி எனது வீட்டுக்குக் கூட சரி வரத் தெரியாது. அது ஒரு நவம்பர் டில்லி இரவு . இரவு எட்டு மணிக்கே அடங்கி விடச் சொல்கிறது குளிர். பிலிக்ஸ் தனது டேப் ரிகார்டரில் போனி ம் மற்றும் டோனோ சம்மரின் ஜுக் பாக்சினை தேர்ந்தெடுத்து பாட வைக்கிறேன். ஒரு மணி நேரத்தில் பய புள்ள அவனாகவே அணைந்து விடுவான். ரெண்டாவது பாட்டு லா.லா. ரஸ்புடின் ஓடும் போது எங்கள் அறைக் கதவு தட்டப்படுகிறது. தப்லியால் அப்படியெல்லாம் இடையில் தட்டி தொந்தரவு செய்ய மாட்டானே என்றவாறு எழுந்தால் அவன் ஹாலை நோக்கி கை காட்டி “ஏக் மெஹமான் ஆகையா பாய் தேரே லியே” என்கிறான்.
அங்கே பார்த்தால்- வேம்பு மாமா சிரித்தவாறு உட்கார்ந்திருக்கிறார்.
குளிர் இரவுகளில் டில்லிக்காரர்களே அதிகம் வெளியில் நடமாட மாட்டார்கள். வேம்பு மாமாவுக்கு மட்டுமல்ல என் வீட்டுக்கே எனது அப்போதைய முகவரி தெரியாது. மலைத்துப் போய் நான் மாமாவை வரவேற்பதற்குள் தப்ளியால் மனைவி சுடச் சுட தேநீருடன் வந்து மாமாவுக்கு நமஸ்காரம் செய்கிறாள். தேனீர் அருந்தி விட்டு உள் சென்று மாமாவிடம் கேட்கிறேன்.
“எப்படி மாமா ?”
முகமது அலி சாருக்கு உறவினரான அல்லாவுதீன் என்பவரின் சிவில் சர்வீஸ் பணி நிமித்தம் டில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் பெரியவர் கருப்பயா மூப்பனாரைச் சந்திக்க வந்த மாமா தமிழ்நாடு இல்லத்தில்தான் தங்கியிருக்கிறார். மாலையில் என் அலுவலகம் சென்று என்னைப் பார்க்கக் சென்றால் நாங்கள் எல்லாம் ஐந்து மணிக்கே புறப்பட்டு விட்டோம். எனது அப்போதைய வீட்டு முகவரி Admn section ல் கொடுத்திருந்தேன். எல்லா அரசு அலுவலகத்திலும் நேர்ந்து விட்ட மாதிரி ஓரிரு பேர் வீடு மறந்து நேரம் மறந்து அலுவலிலேயே மூழ்கி இருப்பார்கள் அல்லவா.(இது மாதிரி ஆட்கள் ரிடயர்ட் ஆன பின்பும் அலுவலகத்தை சுற்றி சுற்றி வருவார்கள். முடிந்தால் எதாவது short duty பதவி வாங்கி அற்ப சம்பளத்திற்கு உழைக்க தயாராக இருப்பார்கள். அவர்களின் குடும்ப சூழல் அப்படி என்பதால் இதில் கேலி பேச ஏதும் இல்லை. ஒரு சித்தரிப்புக்காக சொல்கிறேன்.) அது மாதிரி சஞ்சார் பவனில் ADMN SECTION SUPERVISOR ஆக இருந்த தமிழரான மோகனின் கண்களில் வெளீர் வேட்டி சட்டையுடன் விசாரித்து கொண்டிருந்த மாமா தட்டுப் பட மாமா அவரிடம் என்னைப் பற்றி தகவல் கேட்டிருக்கிறார். எனது PF ல் update செய்யப்பட்டிருந்த முகவரியை மாமாவுக்குக் கொடுத்த மோகன் செல்லும் வழி சொல்லி எங்கள் அலுவலகம் பக்கத்தில் இருந்த UNI Canteen ல் ஊத்தப்பம் வாங்கித் தந்து சாப்பிட வைத்து அனுப்பியிருக்கிறார்.
பிலிக்ஸ் விழித்துக் கொண்டு ஒரு நமஸ்காரம் வைத்தான். தப்லியல் ஒரு எக்ஸ்ட்ரா கட்டிலும் ரஜாயும் கொண்டு வந்து போட்டான். அந்த மறக்க முடியாத இரவில் நாங்கள் மூவரும் பேச ஆரம்பித்தோம்.
மாமாவிற்கு அடுத்த நாள் பகல் முழுவதும் வேலை. மாலை பணி முடிந்து விடும். ஒரு இரண்டு மூன்று நாள் சுற்றலாம். டிக்கட் MP quota EQ வில் போட்டு விடுவார்கள். பிலிக்ஸ் ஒரு ஆலோசனை சொன்னான். பணிக்கர் டிராவல்ஸில் புக் பண்ணி ஒரு நாள் லோக்கல் அடுத்த நாள் ரிஷிகேஷ் போய் வரலாம் என்று சொல்ல, மாமா லோகல் தேவையில்லை. நான் அடுத்தடுத்து வரும்போது பார்த்துக் கொள்வேன். ரிஷிகேஷ் போகலாம் என்று சொல்லி விட்டார்.
காலை உணவுக்குஇருவரும் தமிழ்நாடு இல்லம் சென்று விட்டு பின்னர் நான் மட்டும் என் அலுவலகம் சென்று திரும்பி மாலையில் ரிஷிகேஷ் புறப்பட மாமாவை பிக் அப் செய்து கொள்வது என்று முடிவெடுத்தோம். எம் ஜி ஆருக்கு மிகவும் பிடித்த ஒரு சமையல்காரர் தமிழ்நாடு இல்லத்தில் இருந்தார். அய்யா மூப்பனாரின் விருந்தினராக தங்கிஇருந்த மாமாவின் அறைக்கே வந்து காலை உணவு பரிமாறப்பட்டது. அது போன்ற ஒரு பூ இட்லியினை இட்லிகளின் தலைநகரான எங்கள் ஊரிலேயே நான் இது வரை பார்த்ததில்லை. இருக்கட்டும்.
நாங்கள் இருவரும் ரிஷிகேஷ் பயணப்பட்டோம். வழி நெடுக மாமாவுடன் பல வேறு விடயங்களைப் பகிர்ந்தவாறு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என் அப்பாவுடன் அதிகம் பேசாத எனக்கு மாமா சரியாகச் சிக்கினார். தொண தொன என்றுஎனக்கு தெரிந்ததை எல்லாம் பேசிக் கொண்டே வந்தேன். மாமா ஒரு புன்னகையுடன் ரசித்துக் கொண்டே வந்தார்.
அதிகாலை- கங்கை சமவெளியில் முதலிறங்கும் ஜ்வாலாமுகி வந்தடைந்தோம். கீழ் இறங்கி கால் வைத்தவுடன் அடித்ததே ஒரு electric shock.. முதுகுத் தண்டு சில்லிட்டு விடும் உணர்வு என்பது என்ன என்று அப்போதுதான் புரிந்தது. பின்னர் நாங்கள் ரிஷி கேஷ் பயணப்பட்டது, அங்கே நாங்கள் இருவரும் குளிருக்காக கைகளைக் கட்டியவாறே நடந்தபோது மாமா பெரியாரும் அண்ணாவும் அப்படி ஒரு தடவை இங்கு வந்த போது பெரியாரின் தாடியினையும் பிரகாச வதனமும் கண்டு அங்கிருந்தவர்கள் அவரை பெரிய ரிஷி என்றும் அண்ணாவைச் சின்ன ரிஷி என்றும் வணங்கிச் சென்ற கதை சொல்லியது ,என்னை மாமா எனக்குத் தெரியாமல் ஒரு candid புகைப்படம் எடுத்தது , என்று அந்தப் பயணத்தின் நினைவுகள் அனைத்தும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
சிறு வயதில் கே. கே.நகரில் மாமா வீட்டுக்கு போகும் போது இந்து பேப்பரின் sports பகுதியினை மணி படுத்தவாறே மேய்ந்து கொண்டிருப்பான். செல்வி அதில் வரும் வண்ண வண்ண இணைப்புகளை அலசிக் கொண்டிருக்கும். மாமா காபி குடித்தவாறு தனது பத்திரிக்கையில் மூழ்கி இருப்பார். ஒரு படித்த வீட்டின் அமைதியும் கட்டுப்பாடும் நிலவும். 1956 ம் வருடம் மாமா எழுதி வாய்த்த ஒரு டைரி குறிப்பில் என் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் முடித்து மாமா வீட்டிற்கு விருந்திற்கு சென்றது குறிக்கப்பட்டுள்ளது. அப்பாவை மாமா தோழர் என்று குறிப்பிட்டுள்ளார். அரசு இதனை பாதுகாத்து வைத்து எனக்கு அனுப்பியதைப் பார்த்ததும் கலங்கி விட்டேன்.
தந்தைகள் நமக்கு விட்டுச் செல்லும் செல்வம் இதுதான். வாட்சுகளும், மோதிரங்களும்,சொத்துப் பத்திரங்களும் அல்ல . அவர்களின் வாழ்வியல் கற்றுத் தந்த அனுபவங்கள் எவ்வாறு நம்மை வார்க்கிறது என்பதே முக்கியம். தந்தையின் நினைவுகளைப் பொக்கிஷமாகக் காத்து மண்டல வேளாண் இயக்குனராக ஓய்வு பெற்றிருக்கும் அருள் அரசுவின் பாசமும், நூலகம் இல்லாமல் வீடு இருக்கக்கூடாது என்று வீடு கட்டும் போதே நூலகத்திற்கேன்றே தனிஇடம் ஒதுக்கிய மணியின் சாதுர்யமும் , தான் பொறியாளர் ஆக ஆனது மட்டுமன்றி தன் குழந்தைகள் அனைவரையும் உயர் படிப்பில் சாதிக்க வைத்திருக்கும் செல்வியின் பாங்கும் காண மகிழ்வாக இருக்கிறது.
மாமா பேராசிரியர்கள் பிரதிநிதியாக எம்.எல். சி. ஆகப் போட்டியிடும் சமயம் அப்பா உடல் நலம் குன்றி விநாயகம் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். பதட்டமாக வந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் என்ன நீங்க பாட்டுக்கு இப்படிப் படுத்துகிட்டா எலக்சன் வேலை யாரு பாக்குறது . சீக்கிரம் வாங்க என்று சொல்லி அப்பாவை உற்சாகப்படுத்திய மாமாவும் அப்பாவும் தம் கடைசி காலங்களில் சற்றே விலகி இருந்தனர்.
மாமாவுக்கு மிகவும் முடியாமல் போய் விடுகிறது. அவருக்கு உயிருக்கு உயிரான நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் சுற்றி நின்ற போதில் மாமா உச்சரித்த ஒரு சொல் “தாயுமானவர் வரலியா?”
நட்புக்கு உதாரணமாக இருந்த மூவேந்தர் பண்பாட்டு மன்றமும் தமிழ் வேள் பண்பாட்டு மன்றமும் அதன் ஆதித் தலைவர்களை என்றும் மறவாது.
நாங்கள் எப்படி மாமா உங்களை மறப்போம்?






Thanks mama
ReplyDeleteBy
Murugu vembu
LOVE YOU ALL
DeleteWaah vembu thatha !!! Unga siruvayathai selipagavum ilamai paru vathai inimaiyagavum indrin peruthuvakam sandron enna keta thai endru solum alavuku ungalai sethuki irukirar !!!!!!! God father !!! Arputhamana pathivu appa !!!!
Delete