நண்பேண்டா...
அது எழுபதுகளின் முடிவு என்று நினைவு.
முகாமின் முதல் நாள் மாலை.. யாராவது ஒருவர் அரை மணி நேரம் extempore ஆக உலக வரலாறு குறித்து பேச முடியுமா என்று
அமைப்பாளர் வினவ, எங்கள் நண்பன் குமார் பேச எழுந்தார்.
நெபுலா
வெடிப்பில் தொடங்கி, அமீபா முதல் மனிதன் வரையான பரிமாணம் விளக்கி, புராதானபொது
உடமை சமுதாயம் வழி நுழைந்து நில உடமை சொத்து தோற்றம் விவரித்து அரசு, குடும்பம்
அமைப்புகள் பற்றி பேசி, சிக்கலான சித்தாந்தங்களை மிக எளிய முறையில் அறிமுகம்
செய்து நகைச்சுவை இழையோட அன்றைய அரசியல் தொட்டு என்று ஒரு ஒன்றரை மணி நேரம் களமாடி
அமர்ந்த போது அந்த முகாம் முழுவதும்
உறைந்து போய் கிடந்தது.
சமையல் கட்டில் இருந்து ஓடி வந்தார் அகஸ்டின்
சின்னப்பா. முகாமின் தலைமை சமையல்காரர்.. ஓடிவந்தவர் குமாரை கட்டிப் பிடித்து
கொண்டு “ தம்பி .. தம்பி.. என்னோட அறுபது
வயது அனுபவத்தில் இப்படி ஒரு பேச்சு கேட்டதில்லை. உங்களுக்கு என்ன வேணும்னாலும்
நான் செய்வேன். என்ன வேண்டும் சொல்லுங்க?” என்று திருப்பி திருப்பி அரட்ட குமார்
நெகிழ்ந்து விட்டார். அடுத்து நாங்கள் அங்கு இருந்த பத்து நாளும் வித விதமான
சாப்பாடு , அன்பு ததும்பும் பரிமாறல் என மிரட்டி விட்டார்.
நாற்பது வருடம் கழித்து , சென்ற வாரம்
திருநெல்வேலியில் அம்பேத்கர் நினைவு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற பாரதி கிருஷ்ணா
குமார் என்று இப்பொழுது அறிய படும் எங்கள் நண்பன் குமார் வந்தபொழுது சந்திக்க
வாய்ப்பு கிடைத்தது .
அவர் மட்டுமே இரண்டு மணி நேரம் பேசிய அந்த அரங்கு
நிறைந்த கூட்டத்தில் நிறைய அகஸ்டின் சின்னப்பாக்களை நாற்பது ஆண்டுகள் கழித்தும்
கண்ணீர் மல்க அங்கே கண்டது ஆச்சர்யமாய் இருந்தது.
சொல் வல்லானகவும் , சோர்விலானகவும் , தன்மொழி
கேட்போர் தன்வயம் ஆகும் மாயம் அறிந்தவனாகவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
நண்பனுடன் இரண்டு நாள் சுற்றி திரிந்தது மகிழ்ச்சி...
(நெல்லையில் கூட்டத்திற்கு புறப்படும் முன்பாக விடுதியில்உரையாடி
கொண்டு இருந்த போது எடுத்த படம் இது )




Comments
Post a Comment