வயோதிகத்தில் சுமக்க வந்த வசீகரன்''
முதல்
முதல் எனக்குக் கிடைத்த இரு சக்கர வாகனம் மணிக்கும் ஹலி புல்லாவுக்கும்
ஆங்கிலத்தில் தனிப் பயிற்சி தந்ததற்காக
வேம்பு மாமா, முகம்மதலி சார் மூலம்
வாங்கித்தந்த புத்தம் புது ராலே ஸ்போர்ட்ஸ்
சைக்கிள். இளங்கலை முடிக்கும் தருவாயில் கிடைத்த இந்த சைக்கிள் மதுரைத்
தெருக்களில் மாய்ந்து மாய்ந்து என்னைச் சுமந்து அலைந்து திரிந்தது. பிற்காலத்தில்
எங்கள் வீட்டிற்கு வெள்ளை அடிக்க வந்த தோழர் ஒருவரிடம் அதைக் கொடுத்து விட்டேன். அப்புறம்
இளங்கலை பயிலும்போதுஸ்ரீதரன் ஒரு லூனா கொண்டு வருவான். அதை ஓட்டி ஆனந்தப்பட்டுக்
கொள்வேன். முதுகலை பயில்கையில் பாலு எங்கள் செட்டில் காவல் பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளர் ஆகி விட்டான். அவனது
புல்லட் ஓட்ட ஆசைப்பட்டு ஏறி உட்கார்ந்தால் குணசேகரபாண்டியன் ஒரே நக்கல். எங்கள்
செட்டில் நான் மற்றும் அர்ஜுனன் மட்டும்
தான் குட்டையன்கள். மத்த எல்லாப் பயலுகளும் நல்லாவே வளந்து விளைஞ்சவைங்க. அதிலும் கிருஷ்ணகுமார்
எல்லாம் ராட்சச வளர்த்தி. மாமன் சொல்றான்.“டேய் முதலில் ஏறி உட்கார்ந்து தரையில்
காலை முழுதாய் ஊன்று. அப்புறம் ஓட்டலாம்” ஏதோ வேகத்தில் ஏறி உட்கார்ந்து காலை பேலன்ஸ்
செய்து வண்டியில் உட்கார்ந்தால் சொல்லித் தருகிறேன் என்று சொல்லி வண்டியினை
ஸ்டார்ட் செய்து “ஓட்டுரா பார்க்கலாம்” என்று சொல்லி விட்டான். சொல்லிகொடுத்த படி
வண்டி ஓடியது. நிறுத்தப் பார்த்தால்
தரையில் கால் இறங்க மாட்டேன் என்கிறது. சுற்றி சுற்றி ஒரு உயரமான படி தேடி நான்
ரவுண்டடிக்க, இந்த வளந்தாம் பாண்டி ஒருவனும் நிப்பாட்ட வர மாட்டேன் அப்படி என்று
கம்பா நிக்க, கடைசியில் எனக்கொரு படி மடி கிடைக்க, ஒரு வழியாய் தரை இறங்கினேன்.
அப்பா “முதலில் சின்ன வண்டிகளை ஒழுங்காய் ஓட்டிப் பழகு” என்று
அப்போதுதான் புதிதாய் அறிமுகம் ஆன TVS Champ அவரது பள்ளியில் அனுமதிக்கப்பட்ட
வாகனக் கடன் மூலம் வாங்கி தந்தார். அதனுடைய நீல நிற console இரவில் அவ்வளவு
அழகாக ஒளிர்வதைப் பார்ப்பதற்காகவே
அப்போதெல்லாம் இருட்டாக இருக்கும் பைபாஸ்
விலக்கு வரை சென்று நண்பர்களுடன் வண்டியில் ஏறி உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்.
பின்னர் அது நான் டில்லி சென்றிருந்த போது விற்கப்பட்டு விட்டது.
அப்போது வந்த வண்டிகளில் சில்வர் பிளஸ், எக்ஸ்ப்லோறேர் பிடித்திருந்தாலும் நான்
மதுரையில் பணி மாறி வந்ததும் முதல் முதலில் என் சம்பளத்தில் வாங்கிய வண்டி SAMURAI.
ஏறி அமர்ந்ததுமே சிறுத்தை வடிவம் எடுக்கும் கவசாகி வாங்கச் சொல்லி சௌபா சொன்னான்.
ஆனால் ஏனோ அது எனக்கு பிடிக்காமல் சாமுராய் வாங்கினேன். வண்டி எடுத்து வந்து அப்பா
முன் வந்து நிறுத்தினால் அப்பாவுக்கு ஒரே சந்தோசம். “ஏலே அப்படியே புல்லட்
மாதிரியே இருக்குடா “ என்று வியந்தார். அவருடன் சேர்ந்து மனை பார்க்க பெருங்குடி
பக்கம் அலைந்து திரிந்தது அப்புறம் என் அப்பத்தாவைப் பின்னால் உட்கார வைத்துக்
கொண்டு மதுரை பூராவும் ரவுண்ட் அடித்தது எனப் பல நினைவுகள். அலுவலக நண்பர்கள் ஜோதியும்
நானும் சாமுறாயிலும் , வெற்றி வேல் அண்ணன் அவரது யமகாவிலும் கொடைக்கானல் மலைகளை
அலசிய வரலாறு இன்னும் பசுமையாக. அதிலும் நானும் மிலிடரி இளங்கோவும் மட்டும் தனியாக
சென்ற ஒரு மலைப் பயணத்தில் அந்தி சாயும் ஒரு மாலையில் ஒரு வளைவில் ஒரு நிமிடம்
மஞ்சுவில் பாதை குழம்பி பெரும் பள்ளத்தில் வண்டியினை இறக்கப் போன அந்த திகில் கணம்
மறக்கவே முடியாது.
இதற்கிடையில் ஒவ்வொரு வாரமும் விருதுநகரில்
இருந்து மனைவி மற்றும் பெரிய மகளுடன் கிளம்பி மதுரையில் தின்பண்டங்கள் எல்லாம்
வாங்கிக் கொண்டு , நத்தம் தாண்டி இருந்த
அம்மாபட்டியில் எங்கள் அண்ணியிடம் வளர்ந்து வந்த இரண்டாம் மகளைப் பார்க்க நாங்கள்
சாமுராயில் எழில் கொஞ்சும் ஹவ்வா வேலி,மாயாகிராமம், கடம்பூர், பரளி, லிங்க வாடி விலக்கில் இருந்து நீண்டு செல்லும் மலைப்பாம்பு
சாலை, கணவாய், வத்திப்பட்டி என்று பறக்கும்போது,
பில்லியன்சீட்டில் உட்கார்ந்து கொண்டு மனைவி தின் பண்டங்கள் எடுத்து தர,
மணிக்கு எண்பது கி,மி. வேகத்தில் பறந்தவாறே நானும், முன்னால் டேன்க் மீது அமர்ந்து
வரும் முதல் மகளும் லாவகமாக அதனை உண்பதை எல்லாம் ரசித்தவாறே சாமுராய் ஓடிக்
கொண்டிருப்பான் எந்த தொந்தரவும் கொடுக்காமல்.
மதுரையில் அலுவலக உபயோகத்திற்கு சாமுராய் சேவை
செய்ய , விருதுநகரில் வீட்டு வேலைகளுக்கு ஒரு KINETIC HONDA வாங்கியாயிற்று. அதன்
முன் கைப்பிடியில் தொங்கியவாறு சின்ன மகளும் பின் புறத்தில் இறுகப் பிடித்தவாறு
பெரியவளும் இருக்க விருதுநகர் சுற்றி இருக்கும் எல்லாச் சின்ன கிராமங்கள்,நீர்
நிலைகள், டேம் என ஒவ்வொரு வார இறுதியிலும் முரட்டு சுற்று.. எனது மனிவிக்கும் அந்த
கைனடிக் ஹோண்டா பிடித்துப் போக எங்கள் வீட்டின் செல்லப் பிள்ளையாக அது ஆகிப்போனது.
பின்னர் சாமுராயினையும் கைனடிக் ஹோண்டவினையும் திண்டுக்கல்லில் இருந்த
மைத்துனருக்கும் அவரது மகனுக்கும் கொடுத்து விட்டு அலுவலகத்தில் புதிய வாகனக்
கடன் மூலம் வாங்கிய வண்டிதான் HERO HONDA
CD 100 R. Splendour plus போன்ற
பணக்காரத்தனமான அவனது சகோதரர்களிடம் இருந்து மாறுபட்டு இவன் பவ்யமாக இருந்தான்.
அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்கு இவன் என்ன என்ன சாதிக்கப் போகிறான் என்று எனக்குத்
தெரியவில்லை அப்போது. விருதுநகரில் இருந்து மதுரைக்கு தினம் வந்து சென்ற என்னை
காலையில் ரயிலடியில் இருந்து சுமந்து மாலையில் மறுபடி ரயிலடியில் இறக்கிவிட்டு
என்று அசுவராச்யமாக இருந்த இவன் மிரட்டியது நான் சென்னைக்கு இவனைக் கூட்டிச் சென்ற
பின்புதான்.
சென்னையில்
நான் பணி மாறிச் சென்ற ஆண்டு 2013. இனி 2016 ல் ஓய்வு பெறும் வரை சென்னைதான்.
விருதுநகரில் துணைவியார் பணி நிறைவு செய்ய இன்னும் ஒரு வருடம் பாக்கி இருந்தது.
பணி முடித்து விட்டு வா..சென்னையில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு இங்கு
சென்னைக்கு ஹோண்டா CD ஐ உடன் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன். அடுத்து ஒரு வருடம்
துணைவியார் வரும் வரை சென்னையில் உயிர் நண்பன் கிருஷ்ணகுமாருடன் சாலிக்கிராமத்தில்
வாசம். அது ஒரு பெரும் கதை. அரும் கதை. பின்னர்.
டில்லி
, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் இரு சக்கர வாகனம் ஒன்று, பாதுகாப்பான 10 to 5
வேலை,,தங்குவதற்கு வசதியான வீட்டில்
தனியாளாக இருப்பது, உயிர் நண்பனுடன் விடிய
விடிய உரையாடுவது என்பது எவ்வளவு
பெரிய வரப்பிரசாதம். ஆனால் இதெல்லாம்
நமக்கு சாத்தியப்படும்போது காலம் வெகுவாக ஓடி விடுகிறது. டில்லியில் இந்த வசதிகள்
இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மனம் லேசாக ஏங்குமளவு சென்னை
சுதந்திரத்தை அனுபவிக்க ஹோண்டா உதவினான். சென்னையின் குறுக்கும் வெட்டுமாக எல்லா
திசைகளிலும் வாரம் முழுவதும் அலுவலகம்
முடிந்ததும் சுற்றினேன். எனது எல்லா மாலைகளையும் சென்னையின் புவியமைப்பினை நன்கு
அறிந்து கொள்ள செலவழித்தேன். அனால் அதெல்லாம்
ஜுஜுபி என்று சொல்லுமளவு 2015 ல் ஒரு
காரியம் செய்தான் நமது CD 100 R..
திருச்சியில்
படித்துக் கொண்டிருந்த எனது இரண்டாம் மகள் தனது வகுப்புத் தோழியுடன் சென்னை கோட்டுர்புரத்தில்
உள்ள அண்ணா நூலகத்தில் இரண்டு நாட்கள் அவளது படிப்பு நிமித்தம் வர வேண்டி
இருந்தது. அந்த சமயத்தில் எனக்கு அசோக்
நகரில் அரசு வீடு ஒதுக்கி இருந்தது.என்
மனைவியும் முதல் மகளும் உடன் வந்து தங்கி இருந்தனர். 2015 நவம்பரில் அந்த
மதியத்தில் நான் அலுவலகத்தில் இருந்த போது சரியான மழை வெளியில். எனது மகளும் அவளது
தோழியும் மதியம் இரண்டு மணி வாக்கில் என்னை அழைத்து மூன்று மணி அளவில் புறப்பட்டு
வீட்டிற்கு வந்து விடுவோம் என்று தகவல் கொடுத்தார்கள். அலுவலகப் பணியில் மூழ்கி
இருந்த எனக்கு மழை வலுத்ததும் பின் வெளுக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை. மாலை
நான்கரைக்கு மறுபடியும் தொலைபேசி அழைப்பு.
“
அப்பா , இங்கே பெரும் வெள்ளம் வந்து விட்டது. எந்த ஆட்டோவும் கால் டாக்சியும் வர
மாட்டேன் என்கிறார்கள். பேருந்து எதுவும் நிறுத்த மாட்டேன் என்கிறார்கள். ஐந்து
மணிக்கு நூலகம் அடைக்கப்பட்டு விடும். என்ன செய்ய ?”
அவர்கள்
இரண்டு பேருக்குமே சென்னை முதல் தடவை. பிள்ளைகள் பயந்து விட்டன. அலுவலகத்தில்
சொல்லி விட்டு வெளியில் வந்தால் தெரு முழுவதும் பெரும் வெள்ளம். செம்பரம்பாக்கம்
ஏரி நிறைந்து உடையும் அபாயம் இருப்பதால் தண்ணீர் திறந்து விட ஆரம்பித்து
விட்டார்கள். எல்லா இரு சக்கர வாகனங்களும் சைலன்சரில் தண்ணீர் புகுந்து ஓடாமல்
அங்கு அங்கு.. எனது வண்டியில் காலையில்தான் முழு கொள்ளளவில் பெட்ரோல் நிரப்பி
இருந்தேன். புறப்பட்டு விட்டேன்.
அண்ணா
சிலை அருகில் இருந்த எனது அலுவலகத்தில் இருந்து கோட்டூர் புரம் நூலகம் செல்ல அதிக
பட்சம் இருபது நிமிடம் ஆகும். ஆனால் அன்று மூன்றரை மணி நேரம் ஆனது. நான் அங்கு
சென்ற போது இரவு மணி எட்டுக்கு மேல் ஆகி விட்டது. நூலகம் அடைக்கப்பட்டு விட்டாலும்
நிறைய பேர் வெளியில் காத்து இருந்தனர். அவர்களுடன் பயந்தபடியே என் மகளும் அவள்
தோழியும்! ஆட்டோ இல்லை. டாக்சி இல்லை. பேருந்து நிற்கவில்லை. மழை கூடிக்கொண்டே
போகிறது. கோட்டுர்புரம் தாழ்வான பகுதி. மழை கூடிக் கொண்டே போக நீர் மட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தண்ணீரில் எல்லா
வண்டியும் புகை கக்கி நின்று போய் விடுகிறது. சாலையில் பகலிலேயே பள்ளம் பார்த்து
போக வேண்டும். மழை இரவு. வெள்ளம். கொட்டுர்புரத்தில் இருந்து அசோக் நகர் போக
வேண்டும். ஏழு கிலோ மீட்டர் இருக்கும்.என்ன
செய்ய. ஒரு முடிவெடுத்து எனது ஹெல்மட்டை இரண்டாம் மகளுக்கும் மழைக் கோட்டை அவளது
தோழிக்கும் கொடுத்து விட்டு நடுவில் என் மகளை உட்கார வைத்து அவள் தோழியை
அவளுக்குப் பின் அமர வைத்து நான் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கொண்டு cd 100 R ஐ
ஸ்டார்ட் செய்து விட்டேன். சாலையின் நடுவில் இருந்த பேரிகாடு விட்டு விலகாமல் , சைலன்சரில் தண்ணீர் நுழைந்து
விடாமல் முழு த்ரோட்டில் கொடுத்துக்கொண்டே ப்ரேக் கிளட்ச் கட்டுப்படுத்திக்கொண்டு
தண்ணீரில் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி வைத்து ஏறத்தாழ நடந்தவாறே கவர்னர்
மாளிகை வந்து சேர்ந்தால் எல்லோரையும் மறிக்கிறது ராஜ் பவன் போலீஸ். கவர்னர்
மாளிகைக்குள் வெள்ளம் வந்து விட்டதாம். அதனால் அதை திசை திருப்பி தெருவில் விட
நீர் மட்டம் மேலும் மேலும் உயர்கிறது. எங்கு பார்த்தாலும் மக்கள். இரவு பத்து
என்றே தெரியவில்லை. வண்டி அணைந்து விடாமல் தொடர்ந்து த்ரோட்டில் கொடுத்தவாறே
இருக்கிறேன். அந்த அந்தகார இரவில் சைதை கடந்து , மேற்கு மாம்பலத் தெருக்களின்
இருள் எங்கள் மீது அப்பும் வரை வெள்ளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு வந்த CD
100 R, கரோடியா பள்ளி வந்ததும் தகராறு
செய்ய ஆரம்பித்தான். கொஞ்சம் நடந்து சென்று மறுபடி ஸ்டார்ட் செய்ததும் சமர்த்தாக கிளம்பியவன்
மீது ஆரோகணித்து எங்கள் அடுக்ககம் வந்த போது இரவு பன்னிரண்டு. அதற்கடுத்த நாள்
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு எங்கள் பகுதி மட்டுமல்லாமல் சென்னை முழுதும்
வெள்ளம் சூழ்ந்து ஒரு வாரம் படாத பாடு பட்டோம். அன்று இரவு மட்டும் இவன்
ஒத்துழைக்காமல் போய் இருந்தால் இரண்டு பெண்களையும் வைத்துக்கொண்டு நான் பெரும்
அவதிக்கு ஆளாகி இருப்பேன். அப்பேர்ப் பட்ட நண்பனைப் பிரிய வேண்டிய சூழல்.
சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்ட என்னை கிக் செய்யும் வண்டிகள்
செலுத்தக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். வேறு வழி;
புதியவன்
ஒருவன் வந்து விட்டான். Al Pascino வினை நினைவு படுத்துவது போல , Fascino S
எனப்படும் வசீகரன். யமஹா பரம்பரையின்
சீற்றம். திமிர் அழகு. அசராமல் தரும் மைலேஜ். டிராபிக்கில் தானே அணைந்து, தொட்டால் மறுபடி புறப்பட்டு எரிபொருள்
மீதப்படுத்தும் புத்திசாலிதனம். ப்ளுடூத் மூலம் எங்கே இருக்கிரான் என்று அறிந்து
கொள்ளும் வசதி. வயோதிகத்தில் உதவ வந்த இந்த வசீகரன் என்ன ஆச்சர்யங்கள் தரக் காத்து
இருக்கின்றானோ?
.jpg)
Comments
Post a Comment