காண தொலை - (1).

சிர்ராபுஞ்சி-

..

1) krem mawsmai caves
 

மேகாலயாவில் பல மில்லியன்  வருடங்கள் பழமையான  750க்கும் மேற்பட்ட குகைகள் உள்ளன. அதில் சுமார் 150 குகைகள் மட்டுமே  பாதியாகவோ  அல்லது முழுமையாகவோ ஆய்வு செய்யப்பட்டு , பொது மக்கள்  பார்வைக்கு சில பல கட்டுப்பாடுகளுடன் திறந்து விடப்பட்டுள்ளது. 

கீழ்த்திசையின் ஸ்காட்லாந்து எனப்படும் ஷில்லாங் மேகாலாயாவின் தலைநகர். அங்கிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில்தான் சிரபுஞ்சி அமைந்துள்ளது. திசைக்கொரு பக்கமாகத் திரியும் ரவுடி மேகங்கள் அடிக்கடி மோதிக் கொள்வதும் மின்னல் சரங்கள் பூமியில் ஒளிக் கோடுகள் கிழித்து விடுவதும் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்

ஹிமா வம்சத்தில் வந்த காசி எனப்படும் மலைஜாதி இனத்தின் தலைவனின் தலைநகராக இருந்த shora அல்லது churra பின்னர் மருவி செர்ரபுஞ்சி என்றானது. ஆரஞ்சுகளின் நிலம் எனப்படும் இந்த சிரபுஞ்சி நாம் அனைவரும் சிறு பிள்ளையாக இருக்கும் போதே சொல்லப்பட்ட மாதிரி இன்றும் அதிக அளவு மழை பெய்யும் பிரதேசமாகத்தான் இருக்கிறது. ஆனால் உலகத்திலேயே அதிக மழை பெய்யுமிடம் என்ற பெருமையினை  பதினைந்து  கி.மீ. தள்ளி இருக்கும் அதன் பக்கத்து ஊரான mawnsynram இடம் பறி கொடுத்து விட்டது

சிராபுஞ்சியில்  இருந்து ஆறு கி.மீ. தொலைவில், வங்க தேசத்து எல்லை  நோக்கிச் செல்லும் பாதையில், காரோ, காசி மற்றும் ஜைன்டியா மலைகளுக்கிடையில் ஒளிந்திருக்கும் ஒரு  மிக நீண்ட குகைதான் கிரெம் மவுஸ்மாய் (Krem Mawsmai mawsmai caves)குகை.

உலகின் மிக நீண்ட குகைகளில் இதுவும் ஒன்று என அறியப்படுகிறது.. காடுகளுக்குள் அபரிமிதமாகத் தட்டுப்படும் நீர் வீழ்ச்சிகளின் அழகினையும், அப்போதைக்கப்போது தென்படும்  தேனீர்க் கடைகளில் ஒலிக்கும் காசி பழங்குடியினரின் பாடல்களை ரசித்தவாறும்   சில கிலோ மீட்டர் ஆனந்தப் பயணப் பட்டால் மவுஸ்மாய் குகையின் பிரதான நுழைவாயில் தட்டுப்படுகிறது.

பூமிக்கடியில் பல ஆயிரம் வருடங்களாக கசிந்து கொண்டிருந்த தண்ணீர் உரசி உரசி உருவாக்கிய கற்படிவங்களாலும், சுண்ணாம்புப்  பாறைகளாலும் உருவான இந்த நீண்ட குகையின் சுவற்றில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  விலங்கினங்களின் பாறைப் புதை படிவங்கள் அதிக அளவில் காணக் கிடைக்கிறது.  

கசிதுளிப் படிவுகள் உருவாக்கியுள்ள  பொங்கூசிப் பாறைகள் ( stalgamites and stalactites)  பயமுறுத்தும் விதத்தில் குகை நெடுக ஊசி ஊசியாக தொங்கிக் கொண்டிருக்கும். சுண்ணாம்புக் கல் பாறைகளில்  இருந்து நீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது.


பல நூறு அடிகள்  நீளமான அந்தக் குகையில் 150 மீட்டர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி.நிறைய வெளிச்சம் வரும்படி  ஹாலோஜென் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும் உறைந்து கிடக்கும் காலத்தினை மிதித்தவாறு ஒரு இரண்டு மூன்று மீட்டர் உள்ளே செல்வதற்குள் பெரும் அரட்டியாக இருக்கிறது.

மன திடம் மிக்கவர்கள் , ஒடிசலான தேக வாகு கொண்டவர்கள் தவழ்ந்து, ஊர்ந்து  தங்களை காலத்தின் கர்ப்பத்திற்குள் உள் செலுத்திப் புகுந்து  மெய்  சிலிர்த்து நிற்கிறார்கள்.

 என் கையில் இருந்த டார்ச் விளக்கில் இருந்து என்னால் பாய்ச்சப்பட்ட  ஒளிக் கற்றை முடிவில்லாப் பெருவெளி நோக்கிப் பாய்ந்து கொண்டே இருக்கிறது.

திகைத்து நிற்கிறேன்.

பேரண்டத்தின் துணுக்குகள் நாமெல்லாம் என்னும் உணர்வு அங்கிருக்கும் எல்லோருள்ளும் பிரவகித்துக் கொண்டிருப்பதை ஸ்பஷ்டமாக உணர முடிகிறது.

யானைகள் போலவும், 40 அடி உயர மேற் கூரையில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் சாது போலவும், புரவிகளின் வலுவான கெண்டைக் கால் சதைகள் போலவும், பலவித தோற்றங்களை இயற்கை  பல்லாயிரம் வருடங்களாக உட்கார்ந்து செதுக்கியிருக்கிறது.

எந்த நேரத்தில்  எந்த வடிவத்தில் என்ன பாடம் சொல்லித்  தரப்  போகிறது இயற்கை  என்று பயம் எழுகிறது.

 மனம் ஒரு வித்யாசமான அமைதி நிலை பெற்று ஆன்ம பயம் பூணுவது தெரிகிறது இயற்கையைக் காக்கப்  போவதாக அற்ப மானுடர்கள் சொல்லித் திரிவதைப் பார்த்து இயற்கையின் மவுனப் பிரம்மாண்டம் நக்கலாகச் சிரித்துக் கொள்வதை உணர முடிகிறது.

“நான் அல்லவா உன்னை காத்துக் கொண்டிருக்கிறேன் மானிட!  நீ யார் என்னைக் காக்க? “

.

.2. Nohka likai Falls;

கிழக்கு காசி மலைகளில் பேரழகுடன் 75  அடி அகலத்தில்  1115 அடி உயரத்தில் இருந்து தரை நோக்கிப் பாயும் அழகிய நீர் வீழ்ச்சி Nohkalikai Falls; இதுவே இந்தியாவில் அதிக உயர்த்தில் இருந்து விழும் நீர் வீழ்ச்சி என்னும் பெருமை கொண்டது.

                                                                  நோகா லிகாயின் பின்புலத்தில் திருமதி இளங்கோவன்)


இந்த நீர் வீழ்ச்சிக்கு செல்லும்  பாதை எல்லாம்  மஞ்சள் பூக்கள். குட்டி குட்டியாக ஏகப்பட்ட நீர் வீழ்ச்சிகள்..

பேரழகான இந்த நீர் விழ்ச்சிக்கு இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு அதிர்ச்சியான கதையினை உள்ளூர்வாசிகள் சொல்லுகிறார்கள்.

 பல வருடங்களுக்கு முன்பு இந்த நீர் விழ்ச்சி அருகில் இருந்த ரங்க்ஜியர்தேக என்ற கிராமத்தில் லிகாய் என்னும் ஒரு அழகிய யுவதி வசித்து வந்தாள். இளம் வயதில் விதவையாகி விட்ட லிகாய் தனது சின்னஞ்சிறு குழந்தையுடன் இறந்த தனது கணவனின் தொழிலான பானை செய்தலைத் தொடர்ந்து வந்திருக்கிறாள். தனது குழ்ந்தை மீது அதீத பிரியம் கொண்டிருந்த லிகாய் கிராமத்தினர் வற்புறுத்தலால் மறு மணம் செய்து கொள்கிறாள். புதிதாய் வந்த கணவனுக்கு அவள் வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவளது குழந்தையினையே கொஞ்சிக் கொண்டிருப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அற்பனான அவன் பொறமை மிகுதியால் ஒரு கொடுஞ் செயல் செய்து விடுகிறான்.

அன்றும் அவள் தனது வேலை முடித்து விட்டு களைப்புடன் வீடு திரும்பியதும் தனது குழந்தையைத் தேட, முதலில் குளித்து விட்டு சாப்பிட வா. பாப்பா பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று கணவன் சொல்கிறான். கடும் பசியில் இருக்கும் லிகாய் தன் கணவன் தயாரித்திருந்த பிரமாதமான உணவை நிதானமாக சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து அமர்ந்து ஓய்வாக வெற்றிலை பாக்கு போட அமர்கிறாள். வெற்றிலைப் பெட்டி அருகில் கிடக்கும் ஒரு பொருள் அவள் கவனத்தை ஈர்க்கிறது.

அருகில் சென்று பார்த்தால் ,

அது ஒரு விரல். பிஞ்சு விரல். அவளது செல்ல மகளின் சின்ன விரல்.

பொறமை தலைக்கேறிஇருந்த  அவளது கணவன் அவள் வரும்  முன்பே , அவனுக்கு இடைஞ்சல் என உணர்ந்த அவளது குழந்தையை சமைத்து தலையினையும் எலும்புகளையும் தூர எரிந்து விட்டு  மீதத்தை .உணவாக அவளுக்கே படைத்திருக்கிறான்.

அதிர்ச்சியும் ஆத்திரமும் உச்ச பச்ச கோபமுமாக அங்கிருந்து பித்து பிடித்து ஓட ஆரம்பிக்கும் லிகாய் ஓடி ஓடி இறுதியில் நீர் விழ்ச்சியில் இருந்து  தலைவிரி  கோலமாக கீழே குதித்து விடுகிறாள்.

நீண்ட அவளது கூந்தல் போலும் , தீரா அவளது சோகத்தின் ஓலத்தொடும்  நோகா லிகாய் ஓயாமல் விழுந்து கொண்டே இருக்கிறது. பனி இரவுகளில் லிகாயின் ஓலம் நீர் வீழ்ச்சியின்  ஓசையினையும் மீறி அவ்வப்போது கேட்பதாக பழங்குடியினர் இன்னும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

Comments