வேல இராமமூர்த்தி கதைகள்..
கருவேலங்காட்டு ரசவாதி..
கலை மக்களுக்காக என்பவர்களில் முக்கியமானவர் வேல ராமமூர்த்தி..ஆற்றோர வாழ்க்கை, அழகியல் வாழ்க்கை, அக்ரஹார வாழ்க்கை,மத்திமர் வாழ்க்கை,நகரத்தார் வாழ்க்கை, நாஞ்சில் வாழ்க்கை,கொங்கு வாழ்க்கை,குடகு வாழ்க்கை, மலைத் தோட்ட வாழ்க்கை, புலம் பெயர்ந்தோர் வாழ்க்கை எனப் பலவாறாக தமிழில் இலக்கியப் பங்களீப்புக்கள்
ஏராளம். இதில் அறிவின் ஷணங்களை உணர்வுகளுக்கு பலி கொடுக்கும் ஆப்ப நாட்டு
மனிதர்கள் பற்றிய கலாச்சாரப் பதிவினை வேலா மட்டுமே செய்துள்ளார்.
இவரது எழுத்துக்களில் " மிதிக்கும் கால்களுக்கு மெத்தையாய் இருந்தே
பழகிப் போன ஆனாலும் முட்களாய் முளைக்க ஆசை கொண்ட பாமர ஜனங்களுக்கு நீர் வார்க்கும்
பிரகடனம் இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் மானுட மீட்புப் போருக்கு தன்
கருவக்காட்டு எழுத்து கணிசமான படையைக் கையளிக்கும் என்று உறுதிபட சொல்கிறார்
வேலா..
வேட்டை சமூகத்தின் மிச்ச சொச்சங்களுடன் , சண்டையிடுவதையே
குலத் தொழிலாகக் கொண்ட ஓர் இனம் பற்றிக் சொல்லும் இவரது கதைகளில் அவர்களின்
கலாச்சார மீட்சிக்கு யாரும் எந்த முயற்சியும் பண்ணாமல், வெறும் உறவை சொல்லி ஓட்டு வாங்கி செல்லும் அவலம் வலுவாகவே பதிவாகி உள்ளது.
இவரது கதை மாந்தர்கள் சமூகத்தின் வலிய கால்களால் தினமும் நசுக்கப்படும் எளிய
சனங்கள். சலவை செய்யும் ஏகாளிகள்.. செருப்புத் தைக்கும் பகடைகள்.. மயான
வெட்டியான்.. "கண்ணியில் பிடிபட்டு கடை வீதிக்கு வந்த காட்டு முயல் போல அலங்க
மலங்க விழிக்கும்" ஏழை அருந்ததியப் பெண்கள்.. உரலில் ஊற்றினால் மாடு கூடக்
குடிக்காத புளிச்ச கஞ்சியைக் கூலியாகவும், பிடறியில்
விழும் செருப்படியைப் பஞ்சப்படியாகவும் பெறும் ஏழைக் கூலி விவசாயிகள்.
இவரின் கதைக் களனோ, குருவி குடிக்கக் கூட வெட்டுக்
கிடங்குகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்.
காக்காவும் குருவியும் செத்து மாஞ்சு றெக்கையும் கூடுமா ஒட்டி தொங்கும் உச்சி
மரங்கள்.. மழை எறும்பு புத்தரிசியை பஞ்சத்திற்காக நோண்டி அள்ளீ எடுக்க வெட்டும்
வரப்படிகள்.
வேலாவின் அழகியல் வர்ணனைகளும் மிக நுணுக்கமான விவரணங்களுடன் காணக்
கிடைக்கிறது.
உவர் மண்ணில் முக்கிப் பிழிந்து. வெள்ளாவியில் வைத்து அவித்துத் துவைத்துக்
காய வைத்த துணி போல் வெது வெதுப்பும், மண்வாடையும்
அகலாத யௌவனம் கொண்ட ஏகாளியின் மகள் லட்சுமி..
முறுக்கி விடப்பட்ட கயிற்று மேனி.. உளி உளியாய் மூக்கும் முழியும்.. உலை
கொதித்து வருகிற கம்மஞ் சோத்துப் பானை மாதிரி நிறைஞ்ச பருவம்.. காட்டையும், மலைகளையும் கைகளால் விலக்கி விட்டு பாதை தேடும் உரம் கொண்ட அருந்ததியப் பெண்
மீனாட்சி..
நூத்துப் பதினெட்டு வயதான அங்கம்மாக் கிழவி மட்டும் சும்மாவா? துலுக்க ராசா சிறை பிடிச்ச இருளப்பசாமியை தேடி தலைக் கொம்பு முளைத்த கிழவி
பூமிக்குள் இறங்க இறங்க மையிருட்டும் சாம்பல் வெளிச்சமும் தொடர்கிறது.. வெது
வெதுப்பான சதை வாடை.. கொம்பில் தட்டும் மர வேர்களைப் பிடித்து ஆட்டி விடுகிறாள்.
பூமி பிளந்து பெருமரங்கள் விழுகின்றன. குறுக்கே மறிக்கும் ஆற்றின் ஊற்றுக் கண்களை
இடது கைப் பெரு விரலால் பூசி அடைக்கிறாள். வட்ட வட்டமாக இருக்கும் நெருப்புக்
குழிகளில் இறங்கி முகம் கை கால் கழுவிக் கொள்கிறாள்..
அய்யனார் வேட்டைக்கு கிளம்பும் நேரம்.. வானத்திற்கும் பூமிக்கும் காய்ச்சிய
ஈயமாய் மேனி ஒளிர்ந்து, பிடரி சிலுப்பி நிற்கும்
வெள்ளைக் குதிரை.. அருவியாய் சரியும் அதன் வால் முடி.. வேட்டைக் கரு நாயின்
பல்லிடுக்கில் சிக்கிய அழுகிய புலித்தலை.. முடிச்சடையில் இறைச்சி நாற்றம்..
காட்சிப் படிமங்களிலும் கலாபூர்வமாகக் கதை சொல்லும் உத்தியிலும் வேலா வியக்க
வைக்கிறார்.
வெட்டியான் முனியாண்டி கடனுக்கு கறி கேட்டுப் போகிறான். கறிக் கடை தங்கமாரி
படிக்கல்லை எடுத்து நெற்றிப் பொட்டில் எறிந்து விடுகிறான். பின்னாளில் இறந்து போன
கறிக்கடைகாரன் பிணம், வெட்டியானிடம் எரிக்க
வருகிறது.. வெட்டியான் தூரிப் பொட்டல் கள்ளை செம்பு செம்பாக குடிக்கிறான். போதை
உச்சிக் கொம்பேற எழுந்து நிற்கிறான். பனை மரங்கள் முழங்கால் அளவாகிறது. தலை வானம்
தொட்டு சிரிக்க மேகங்கள் சிதறி தூரம் போகின்றன.
சிதையில் எரியும் கறிக்கடை தங்கமாரியின் பிணத்தில் தசையெல்லாம் வெந்து, ஊன் வடிந்த பின்பு, நரம்புகள் முறுக்கிக் கொண்டு
சிதை நெருப்பு சிதறுகிறது. அரிவாளைக் கையிலெடுக்கும் முனியாண்டி ' அடே, தங்க மாரி, அவுசாரி மகனே" என்று பிடரியில் கொத்தி, " டேய், தங்கமாரி, தேவடியா மகனே" என்று
நெற்றிப் பொட்டில் கொத்தி ஓட்டையாக்கும் உன்மத்தம் படிக்கும் நம்மையும் பற்றிக்
கொள்கிறது.
"ஆதி ஆயுதத்தில்" இவரது நடை
வேறு தளத்தை எட்டுகிறது.. அய்யனார் கோவிலில் "கால் உடைந்த குதிரை,, பொம்மைகளின் திறந்த வாயில் செங்க் குழவித் தட்டு. நுனிவால் காட்டி, மூக்குத் துவாரத்தில் நுழையும் பாம்புரானி,..தவழும்
பிள்ளைகளின் ஊன்றிய கைகளில் , ஏறவும் வழுக்கி விழுகவுமாய்
விளையாடும் சுருட்டைப் பாம்பு.. தரை படர்ந்து கிடக்கும் வேலமரத்தின் கிளைகளில்
உட்கார்ந்து பழங்கதை பேசும் கொள்ளீப்பிசாசுகளின் முலைப்பால் குடித்தபடி, உடைமரத்து தூக்கணாங் கூடுகளில் வால் சுருட்டிப் போட்டு, குருவிகளைத் தாலாட்டும் நல்லபாம்பு...
என் தாய்மொழி இவ்வளவு அழகானதா என்று ஒவ்வொரு தமிழனையும் வியக்க செய்யும்
வித்தை கைவரப் பெற்ற வேலா, நம் சமகாலத்தின் இலக்கிய
சொத்து..
70 களில் எழுத ஆரம்பித்து தமிழ்
சிறுகதைகளின் தரத்தை மேலும் உயரிய தளங்களுக்கு எடுத்து செல்லும் இந்த அரிய
கலைஞனின் சிறுகதை தொகுப்பு, ஒவ்வொரு வாசகனுக்குள்ளும்
இருக்கும் மனித நேயத்தை சுண்டி இழுத்து , கண்களின்
மூலம் கசிய செய்யும் ஒரு வசீகர கலைத் தூண்டில்.
- இளங்கோவன்தாயுமானவர்

தலைவா...! இத்தனையையும் இம்புட்டு நாளா எங்கே ஒளிச்சு வச்சிருந்தீங்க?
ReplyDeleteநாம் பழகித் திரிந்த பல ஆண்டுகாலம்... இப்படியாய் கடந்திருந்தால்... எப்படியோ இருந்திருக்கும்!
நல்ல, துல்லியமான, உங்களுக்கேயான மொழிவழிப் பதிவு.
மிக்க மகிழ்ச்சி தலைவா.
உஙகள் மொழிதான் தலைவா என் வழியே..
Delete.